மரியாளின் மாசற்ற இதயப்பெருவிழா

தொடக்கத்தில் மரியாளின் விண்ணேற்பு விழாவிலிருந்து, எட்டாம் நாள் இந்த விழா கொண்டாடப்பட்டது. ஆனால், இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கு பிறகு, விழாவின் நாள் மாற்றப்பட்டது. சங்கத்தில் நடந்த வழிபாட்டு மறுசீரமைப்பிற்குப் பின் , இயேசுவின் திரு இதயப்பெருவிழாவிற்கு அடுத்த சனிக்கிழமை இது கொண்டாடப்படுகிறது. இந்த பக்திமுயற்சியை பரப்பிட முயற்சி எடுத்தவர் ஜாண் யூட்ஸ் என்பவர். இவர்தான் இயேசுவின் திரு இதயப்பக்தியையும் பரப்பிட அனைத்து முயற்சிகளையும் எடுத்தவர். கி.பி 1860 ல் மரியாளின் மாசற்ற இதயத்திற்கான வணக்கத்தை ஏற்படுத்தினார்.

அன்னைமரியாள் மீது மக்கள் கொண்டிருந்த பக்தி, அவரது பரிந்துரையின் மூலமாக பெற்றுக்கொண்ட பல்வேறு நலன்கள், இவற்றின் மூலமாக இந்த பக்திமுயற்சி வெகு எளிதாக அனைத்து இடங்களுக்கும் பரவியது. திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ் 1944 ம் ஆண்டு, இந்த திருவிழாவை உலகம் முழுவதும் கொண்டாடும்படியாக அறிமுகப்படுத்தினார். மீட்பின் வரலாற்றில் மிகப்பெரும் பங்காற்றுவதற்கு, தனது வாழ்வையே தியாகம் செய்தவர்தான் அன்னை மரியாள். நம் அனைவருக்கும் மீட்பு கிடைப்பதற்கு ஒரு கருவியாகத்திகழ்ந்து, எடுத்துக்காட்டான வாழ்வு வாழ்ந்திருக்கிறாள். அவளது வாழ்வு மாசற்ற வாழ்வு. அவளது இதயம் மாசற்ற இதயம். அவளது அன்பு தூய்மையானது.

அன்னை நமக்கெல்லாம் அன்பை நிறைவாகத்தருகிறவராக இருக்கிறார். நம்மையெல்லாம் அவளது பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டு, நாம் அனைவருமே தந்தையாகிய இறைவனின் அழைப்புக்கேற்ற பிள்ளைகளாக வாழ, நமக்காகச்செபிக்கிறார். பரிந்து பேசுகிறார். அந்த அன்னையிடத்தில் நம்மையே ஒப்படைத்து, சிறப்பாக மன்றாடுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.