மரியாவின் விண்ணேற்பும், அக விடுதலையும் !

மரியாவின் விண்ணேற்பும், அக விடுதலையும் !

இன்று அன்னை மரியாவின் விண்ணேற்பு விழாவையும், நம் நாட்டின் விடுதலைப் பெருவிழாவையும் ஒருசேரக் கொண்டாடுகிறோம். இந்நாளில் நமது புறவிடுதலை, அகவிடுதலை இரண்டையும் பற்றிச் சிந்திக்க அழைக்கப்படுகிறோம். அந்நிய ஆதிக்கத்திலிருந்து நாம் விடுதலை பெற்று 63 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டாலும்கூட, நமது நாடு போதுமான வளர்ச்சி பெறாததற்குக் காரணம் நமது அகவிடுதலை இன்மையே. அன்னை மரியா நமக்கு அகவிடுதலையின் மாதிரி ஆக இருக்கிறார். அகவிடுதலையின் கூறுகள் யாவை?

  • அச்சத்தினின்று விடுதலை
  • குற்ற உணர்வு, பழி உணர்வு போன்ற தீவிர உணர்வுகளிலிருந்து விடுதலை
  • தீவிர ஆசைகளிலிருந்து விடுதலை
  • பொருள்கள், மனிதர்கள், இடங்களின்மீதுள்ள பற்றுகளிலிருந்து விடுதலை
  • கவலையினின்று விடுதலை

யார் அக விடுதலை பெற்றிருக்கிறார்களோ, அவர்கள் புற விடுதலையற்ற சூழலிலும்கூடக் கவலையின்றி, அகமகிழ்வுடன் வாழ்வார்கள். எடுத்துக்காட்டாக, நெல்சன் மண்டேலா நிறவெறியின் காரணமாக 27 ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டிருந்தாலும், அவரது அக விடுதலையை அவர்களால் பறிக்க முடியவில்லை. சிறைக் கம்பிகளுக்கு உள்ளேயும் அவரால் விடுதலை உணர்வுடன் வாழ முடிந்தது. எனவே, இந்நாளில் நாம் ஒவ்வொருவரும் அக விடுதலையுடன் வாழும் வரம் வேண்டுவோம்.

மன்றாடுவோம்: விடுதலையின் வேந்தனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் நாட்டை அந்நிய ஆற்றல்களிடமிருந்து விடுவித்து, வளம் தந்தீரே, உமக்கு நன்றி. எங்களுக்கு அகவிடுதலை தாரும். இதனால், நாங்கள் தன்னலம் துறந்து, பிற நலத்தோடு வாழும் வரம் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

–அருள்தந்தை குமார்ராஜா

விழாக்கள் ஏற்படுத்தட்டும் மாற்றங்கள்

திருஅவையின் வரலாற்றிலும், தாய்நாட்டின் வரலாற்றிலும் இன்று மறக்க முடியாத நாள். அன்னை மரியாள் தனது உலக வாழ்வை நிறைவு செய்தபின், உடலோடும், ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்ட உன்னதமான நாள். இந்த விழா விசுவாசக்கோட்பாடாக, அதாவது இறைஏவுதலால் வெளிப்படுத்தப்பட்ட, உறுதிப்படுத்தப்பட்ட கொள்கையாக, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களால், 1950 ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. ஆங்கிலேயர்களின் அடிமைத்தனத்தை எதிர்த்து, பல ஆண்டுகளாக பொதுநலத்தோடு, தியாக உள்ளத்தோடு போரிட்ட தன்னமில்லா தியாகிகள் நமக்குப் பெற்றுத்தந்த பரிசு இந்த இந்திய நாட்டின் சுதந்திரம். இரண்டுமே, நாம் பெற்றிருக்கிற மிகப்பெரிய கொடைகள். இந்த இரண்டு நிகழ்வுகளையும் ஒருசேர கொண்டாடி மகிழ்வதில் நிச்சயம் நமக்கு அளப்பரிய மகிழ்ச்சி இருக்கும். ஆனால், கொண்டாட்டத்தோடு முடிந்து விடுவதா வரலாற்று நினைவுகள்? வழிபாட்டோடு முடிந்து விடுவதா வாழ்க்கை? இல்லை. அதனையும் தாண்டி, தொடர்ச்சியாக நமது வாழ்வையும், நாம் முன்னெடுக்க வேண்டிய பயணத்தையும் நமக்கு ஒவ்வொரு வருடமும் கற்றுதரக்கூடியது நாம் வழக்கமாக கொண்டாடும் விழாக்கள்.

இந்த பிண்ணனியில் நாம் சிந்திக்கிறபோது, சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளாக மாறினாலும், அன்று ஆங்கிலேயர்களின் ஏவுதலுக்கும், அடிமைத்தனத்திற்கும் பலியான நாம், இன்று அரசியல்வாதிகளின் அரசியலுக்கும், தனிநபர் வழிபாட்டிற்கும் பலியாகிக்கொண்டிருக்கிறோம். அரசியலில் உண்மையில்லை. உண்மையானவர்களுக்கு இடமுமில்லை. பொதுநலத்தோடு உழைக்கிறவர்களை பெரும்பான்மையான அதிகாரபலத்தோடு இருக்கிற பலம் வாய்ந்த கட்சிகள், நசுக்கிவிடுகின்றன. ஏழைகள் சுரண்டப்படுகிறார்கள். வஞ்சிக்கப்படுகிறார்கள். ஏமாற்றப்படுகிறார்கள். அதிகாரம் படைத்தவர்கள், வஞ்சிக்கிறவர்கள் சட்டங்களை, தங்களுக்கு ஏற்ப வளைத்துக்கொண்டு, சுகம்கண்டு வளமையோடு இருக்கிறார்கள். சரியானவர்களை அடையாளம் கண்டுகொண்டு, அவர்களை தலைவர்களாக மாற்ற, இந்த சமுதாயம் இன்னும் தகுதிபெறவில்லை. இவ்வளவு பட்டும் இன்னும் திருந்தவில்லை. இன்றைய ஆன்மீக உலகின் வழிபாடுகளும் இதையே நமக்கு சுட்டிக்காட்டுகின்றன. அன்னை மரியாளுக்கு பத்து சவரன் தங்கநகை காணிக்கையாக செலுத்துவதற்கு ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஒரு ஏழைப்பெண்ணுக்கு உதவக்கூடிய அளவுக்கு மனம் படைத்தவர்களை, வழிபாடும் ஆன்மீகமும் உருவாக்கவில்லை. இன்றைக்கு திருத்தலங்களில் இருக்கும் ஆயிரக்கணக்கான பவுன் தங்கநகைகள் இதற்கு சிறந்த சான்று. அன்னை மரியாள் உண்மையிலே இதனை விரும்புவாரா? ஒருவேளை அன்னை மரியாள் இப்போது திருத்தலங்களில் காட்சியளித்தால், அவரது செய்தி என்னவாக இருக்கும்? கால்நடையாக பல மைல்கள் நடந்து திருப்பயணமாக நேர்த்திக்கடன் செலுத்தும் மக்கள், அருகிலிருக்கிறவனுக்கு உதவி செய்ய மனம் வருவதில்லை. வாழ்க்கை வேறு, வழிபாடு வேறு என்று நினைக்கக்கூடிய மனநிலையைத்தான் நாம் உருவாக்கியிருக்கிறோம். இந்த நிலை மாற வேண்டும்.

மனிதத்தை முன்னிறுத்தி நமது ஆன்மீகம் அமைய வேண்டும். விழாக்களும், ஆன்மீகப்பயணங்களும் கடவுளை திருப்திபடுத்த என்ற நிலை மாறி, மனிதர்களை மதிக்க, உதவி செய்ய, இரக்கம் காட்ட, தோள்கொடுக்க, அதன் வழியாக கடவுளின் உடனிருப்பை அறியக்கூடிய மனம், மக்களில் வர வேண்டும். அதுதான் இந்த இரண்டு பெரிய திருவிழாக்கள் நமக்கு காட்டும் செய்தி. வழக்கமான திருவிழாக்களை, வழக்கமாகக் கொண்டாடினோம் என்றில்லாமல், நமது வழக்கத்தை மாற்றக்கூடிய விழாவாக அமைய எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மரியாளின் விண்ணேற்பு

நான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டில் கிடைக்கப்பெற்ற சான்றுகளின்படி, பைசாண்டின் அரசில், மரியாளின் இறப்பு தினம், மிகப்பெரிய விழாவாக் கொண்டாடப்பட்டது. ஐந்தாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் எருசலேமிலிருந்து கொண்டு வரப்பட்ட வாசக நூலும், அதன் ஆர்மீனிய மொழிபெயர்ப்பு நூலும், ஆகஸ்டு மாதம் 15 ம் நாளை, மரியாளின் விண்ணேற்பு நாளாக அறிவிக்கின்றன. இதுவே அன்னை மரியாளின் விண்ணேற்பு பெருவிழாவிற்கான தொடக்ககால சான்றாகும்.

திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ் அவர்கள் மரியாளின் வி்ண்ணேற்றம் என்ற திருமறைக்கோட்பாட்டை, நவம்பர் 1, 1950 ல் பிரகடனப்படுத்தினார். இது விசுவாசத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்டதாகும். திருவிவிலியத்தில் இறப்பு என்பது பாவத்தின் விளைவாகும். மரியாள் அமல உற்பவி என்பதால், அவள் பாவமின்றி பிறந்தவள். ஆகவே, மரியாள் பாவத்திற்கான விளைவை முறியடித்தவள். ஆதலால், மரியாளின் அமல உற்பவ பெருவிழாவானது, மரியாளின் விண்ணேற்றப் பெருவிழாவோடு நெருங்கிய இறையியல் தொடர்புடையது. மரியாள் பாவத்திலிருந்து விலிகியிருந்ததால், இறைவனின் மாட்சிமையில் பங்குபெற்றார்.

மரியாளின் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கிற நாமும், அன்னை மரியாளைப்பின்பற்றி, பாவத்திலிருந்து விலகியிருப்போம். இறைவனின் மாட்சிமையில் பங்குபெற, நம்மையே புனித வாழ்வுக்கு ஆயத்தப்படுத்துவோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

 

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.