முதன்மையானது அன்பு

யூதப்பாரம்பரியத்தில் எப்போதுமே இரட்டை மனநிலை காணப்பட்டது. திருச்சட்டத்தை இன்னும் பல சட்டங்களாக விளக்கமளிக்கும் மனநிலை, இரண்டாவது திருச்சட்டம் முழுவதையும் ஒரே வாக்கியத்தில் கூறும் மனநிலை. இந்த இரட்டை மனநிலை தான், இறைவாக்கினர்களின் போதனையிலும் வேற்றுமையைக் காட்டியது. ஒரு சில இறைவாக்கினர்கள் ஏராளமான எண்ணிக்கையில் கடவுளின் திருச்சட்டங்களைக் கொடுத்தனர். ஆனால், மற்றவர்கள், விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் கடவுளின் சட்டங்களைக் கொடுத்தனர்.

உதாரணமாக, மோசே 613 சட்டங்களைப் பெற்றதாக சொல்லப்படுகிறது. இந்த 613 சட்டங்களை, தாவீது தன்னுடைய திருப்பாடல் 15ல், 11 ஆக குறைக்கிறார். இறைவாக்கினர் எசாயா(33: 15), இதனை மிகச்சுருக்கமாக ஆறாக, குறைக்கிறார். மீக்கா இறைவாக்கினர்(6:8) அதனை மூன்றாக குறைக்கிறார். மீண்டும் எசாயா இறைவாக்கினர், இதனை அடிப்படையில் இரண்டு திருச்சட்டங்களாக (56: 1) பிரிக்கிறார். இறுதியில் அபகூக்கு இறைவாக்கினர்(2: 4) ஒரே வரியில், “நேர்மையுடையவரோ தன் நம்பிக்கையினால் வாழ்வடைவர்” என்று, நிறைவு செய்கிறார். இவ்வாறு பழைய ஏற்பாட்டில், இறைவாக்கினர்களின் பல்வேறு விளக்கங்களுக்கும் இரத்தினச்சுருக்கமாக, இன்றைய நற்செய்தியில், இயேசு திருச்சட்டத்தின் சாராம்சத்தை விளக்குகிறார். கடவுளையும், சக மனிதர்களையும் அன்பு செய்வதே திருச்சட்டத்தின் சுருக்கம், என்பதை இங்கே வலியுறுத்துகிறார்.

நமது வாழ்வில் இந்த அன்பு முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கிறதா? என சிந்தித்துப் பார்ப்போம். நாம் செய்கிற செயல்பாடுகள் அனைத்திலும், அன்பே முதன்மையானதாக இருக்க வேண்டும். இயேசுவின் வாழ்வில் முதன்மையாக இருந்து அன்பு, நமது வாழ்விலும் நிலைபெறட்டும்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.