வாங்க வரவேற்போம்!

மாற்கு 13:24-32

இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 33ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

1850 ஆம் அண்டு இத்தாலியில் உள்ள சான்ட் அஞ்சேலோ லொடிகியானோ என்ற இடத்தில் பிறந்தவர்தான் தூய பிரான்சிஸ் சேவியர் காப்ரினி. தொடக்கத்தில் இவர் ஓர் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். அப்போது இவருக்கு துறவியாகப் போகவேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. அதன்படி இவர் ஒரு துறவுமடத்திற்குச் சென்று, தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தினார். ஆனால், அங்கிருந்தவர்கள் இவருடைய உடல்நிலையைக் காரணம் காட்டி, இவரை துறவுமடத்திற்குள் எடுக்க மறுத்துவிட்டார்கள். மேலும் ஒருசில துறவுமடங்களுக்குச் சென்றுபோதும் காப்ரினிக்கு அதுதான் நடந்தது. அப்படியிருந்தாலும் அவர் மனந்தரளாமல் ஒவ்வொரு துறவுமடத்திற்காகப் போய்க்கொண்டே இருந்தார்.

இந்நிலையில்தான் 1874 ஆம் அண்டு, பேரருட்தந்தை சேராட்டி என்பவர், காப்ரினியை கோடோக்னோ என்ற இடத்தில் இருந்த ஒரு அனாதை இல்லத்தை கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். தனக்குக் கொடுக்கப்பட்ட இந்தப் பொறுப்பினை காப்ரினி மிகச் சிறப்பாகச் செய்ததால், அவருடைய பேரும் புகழும் ஆயர் டோடி வரைக்கும் சென்றது. அவர் காப்ரினியைக் கூப்பிட்டு, பாராட்டி, அனாதை இல்லத்தைக் கவனித்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், ஏழைக் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியைக் கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டார். ஆயரிடமிருந்து இப்படியொரு பதிலை எதிர்பாராத காப்ரினி, தன்னோடு மேலும் ஆறு சகோதரிகளை சேர்த்துக்கொண்டு, திரு இருதய அருட்சகோதரிகள் (Missionary Sisters of the Sacred Heart) என்றொரு சபையைத் தொடங்கி, தன்னுடைய பணியை இன்னும் துரிதப்படுத்தினார்.

காப்ரினி செய்துவந்த இந்தப் பணிகளையெல்லாம் பார்த்துவிட்டு நிறையப் பெண்கள் சபையில் வந்து சேர்ந்தார்கள். இதனால் மிகக் குறுகிய காலகட்டத்திலே திரு இருதய அருட்சகோதரிகள் சபை பல நாடுகளுக்குப் பரவத் தொடங்கியது.

அனாதைக் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதும் அவர்களுக்கு நல்ல கல்வியைக் கொடுப்பதும் என்று காப்ரினியின் பணி மிகத் தீவிரமாகப் போய்க்கொண்டிருந்தது. ஆனால், அவருடைய உள்ளத்தில் சீனாவிற்குச் சென்று மறைப்பணி செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. இது குறித்து அவர், அப்போது திருத்தந்தையாக இருந்த பதிமூன்றாம் சிங்கராயரிடம் கேட்டபோது, ‘கிழக்கில் வேண்டாம், மேற்கிலே பணிசெய்’ என்று சொல்லி அனுப்பினார். இதனால் காப்ரினி நியூயார்க்கிற்குச் சென்று அங்கு தன்னுடைய பணிகளை செய்யத் தொடங்கினார்.

நியூயார்க்கின் கடற்கரை ஓரங்கில் இவர் பணிசெய்யத் தொடங்கிய காலகட்டத்தில் நிறைய பிரச்சனைகளைச் சந்தித்தார். அவற்றை எல்லாம் இவர் பொருட்படுத்தாமல், ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பதும், மருத்துவச் சேவை செய்வதும், புலம்பெயர்ந்தோருடைய நலனில் அக்கறை செலுத்துவதும் என்று தன்னுடைய வாழ்நாளைச் செலவழித்தார். இவர் செய்துவந்த பணி பலரையும் கிறிஸ்துவின்பால் கொண்டுவந்து சேர்த்தது.

இப்படி அயராது பாடுபட்ட காப்ரினியின் உடல்நலம் மெதுவாகக் குன்றத் தொடங்கியது. அதனால் இவர் 1917 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1946 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

அன்புமிக்கவர்களே! தூய பிரான்சிஸ் சேவியர் காப்ரினி மண்ணகத்தில் தன் வாழ்க்கையை தயாரித்தார். விழிப்போடு தன் பணிகளை கடவுளுக்கு மாட்சி அளிக்கும் விதத்தில் செய்தார். ஆகவே மானிடமகன் வருகைக்காக தன்னை இம்மண்ணகத்தில் வாழந்த போது முழுவதும் தயாரித்தார். ஆகவே மானிடமகனை தன்னுடைய புனித வாழ்க்கையால் சந்தித்தார். தன் மிகச்சிறந்த வாழ்க்கையால் மண்ணகத்தை வென்று மிகச்சிறந்த புனிதரானார்.

பொதுக்காலம் 33ம் ஞாயிறு மானிடகன் வருகைக்காக தயாரித்துக்கொண்டிருக்கிறார்களா? என்ன தயாரிப்புகள் செய்துக்கொண்டிருக்கிறீர்கள் என்ற கேள்விகளை எழுப்புவதோடு நம்மை அதற்கான பணிகளை செய்ய அறிவுறுத்துகிறது. மானிடமகனை நாம் தகுதியோடு வரவேற்க வேண்டும் என்பதற்கான உற்சாகத்தையும், அறிவுரைகளையும் அன்போடு வழங்குகிறது. நாம் இம்மணணகத்தை வென்று புனித வாழ்க்கையால் மெசியாவை சந்திக்க வேண்டும் என சத்தமாகவும் சொல்கிறது. இரண்டு விதங்களில் அதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ளலாம்.

1. வெறுக்காதீர்கள்
இப்படி கவனம் இல்லாம ஜியாமெட்ரி பாக்ஸைத் தொலைச்சுட்டு வந்து நிக்கிறியே. இது தப்பு கோகுல். இருந்தாலும் உன்னை மன்னிச்சுடறேன். நாளைக்கு வேற ஜியாமெட்ரி பாக்ஸ் வாங்கித் தர்றேன்” என்று மகனிடம் தன் மனைவி ரேவதி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான் கணேசன்.

ரேவதி இப்படிச் சொல்வது முதல்முறை அல்ல. சில வருடங்களாகவே அவள் கோகுலிடம் இப்படித்தான் நடந்து கொள்கிறாள். ஒருமுறை கோகுல் கணக்குப் பாடத்தில் தோல்வியடைந்தபோது இப்படித்தான் அவனைத் திட்டிவிட்டு, பிறகு அவனிடம் மன்னிப்பதாகச் சொன்னாள். படிக்காமல் விளையாடிவிட்டு வந்தாலும், வீட்டுப் பொருட்களைச் கைதவறி உடைத்தாலும் இப்படித்தான். முதலில் அவன் செய்தது தப்பு என்று கண்டித்துவிட்டு, பிறகு மன்னித்துவிடுவதாகச் சொல்லிவிடுவாள் ரேவதி.

“ஏன் ரேவதி! கோகுல் செய்யுற தப்புகளை எப்படியும் மன்னிக்கத்தான் போறே. பிறகு எதுக்காக அவன்கிட்டே அது தப்புன்னு சொல்லித் தேவையில்லாம குற்ற உணர்ச்சியைத் தூண்டி விடுறே?” – ரேவதியைத் தனியாக அழைத்து கேட்டான் கணேசன்.

“கோகுல் இப்ப டீன்ஏஜ்ல இருக்கான். இனி மேற்படிப்பு, வேலைன்னு வாழ்க்கையில எத்தனையோ பேரைச் சந்திக்கப் போறான். எத்தனையோ சூழல்களை எதிர்கொள்ளணும். இப்ப அவன் செய்யுற தப்புகளை தப்புன்னு நாமதான் சுட்டிக் காட்டணும். அப்பதான் அதை இனி செய்யாம கவனமா இருப்பான். அதேநேரம் அவனை நாம மன்னிக்கிறோம்னு அவனுக்குத் தெரியணும். அப்பதான் மற்றவங்க அறியாம செய்யுற தப்புகளை அவன் மன்னிக்கவும் கத்துக்குவான். தப்பு செய்யாதவங்க மட்டுமில்லங்க, மற்றவங்களை மன்னிக்கவும் தெரிஞ்சவங்கதான் முழு மன ஆரோக்கியத்தோட வாழ முடியும். அதுக்காகத்தான் இந்தப் பயிற்சி!” சொன்ன மனைவி ரேவதியை புருவம் உயர்த்தி மகிழ்ச்சியோடு பார்த்தான் கணேசன்.

அன்புமிக்கவர்களே! பிறர் செய்யும் தவறான செயல்களை நாம் வெறுக்க வேண்டும். ஆனால் அந்த நபரை ஒருபோதும் வெறுக்க கூடாது. மன்னித்துக்கொண்டே இருக்க வேண்டும். வாழும் குறுகிய காலத்தில் அன்பினால் பிறருக்கு தண்டனை வழங்குவோம். அன்னை தெரசா சொல்கிறார், ” வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல, மற்றவர் மனதில் வாழும் வரை” மேலும், அன்பு செய்வது உன் பலவீனம் என்றால் இந்த உலகில் நீதான் பலசாலி” எனவும் சொல்கிறார்.

ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருகைக்காக தயாரித்துக்கொண்டு இருக்கின்ற நாம் செய்ய வேண்டிய மிக அவசியமான ஒன்று யாரையும் வெறுக்காமல் இருப்பது. அவர் அனைவரையும் அன்பு செய்தார். நாமும் நம் வாழ்க்கைப் பயணத்தில் எல்லாரிடத்திலும் கைகோர்த்து, கைத்தட்டி வாழ்க்கையை கொண்டு செல்வோம். மற்றவர்களை நாம் வெறுக்க நாம் யார்? அனைவரும் நம்மைப் போன்று குறையுள்ளவர்கள்தான். அவர்கள் குறைகளில், கறைகளில் அவர்களை புரிந்துக்கொள்வோம். புன்னகையை இலவசமாக வழங்குவோம். அனைவரையும் அகம்குளிர அரவணைப்போம்.

2. வெறுமையாக்காதீர்கள்
“மனிதக் கணினி” என வர்ணிக்கப்பட்ட கணித மேதை சகுந்தலா தேவி பெங்களூருவில் சர்க்கஸ் கலைஞர் ஒருவரின் மகளாக, ஏழைக்குடும்பத்தில் பிறந்தார். தனது 6 வயதிலேயே மனதுக்குள் கணக்குப் போட்டு உடனுக்குடன் விடை சொல்லும் திறன் படைத்திருந்தார். கம்ப்யூட்டர், கால்குலேட்டர் போன்ற இயந்திரங்களைத் தோற்கடிக்கும் வேகத்தில் கேள்விகளுக்கு விடையளிக்கும் திறமைப் படைத்தவராக விளங்கியவர். எண் கணிதத்தில் 201 ஸ்தானங்களைக் கொண்ட எண்கள் வரை, அதன் square root எனப்படும் மூலத்தை மனதிலேயே கணக்கிட்டு சில நொடிகளில் பதில் சொல்லும் திறனைப் பெற்றிருந்த சகுந்தலா தேவி, கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றார்.

லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் சவாலாக நிகழ்த்தப்பட்ட ஒரு கணக்குப் போட்டியில், 13 ஸ்தானங்களைக் கொண்ட 2 எண்களைப் மனதளவில் பெருக்கி 28 நொடிகளில் விடையளித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். உலகின் பல நாடுகளுக்கு சென்று, தன்னுடைய கணிதத் திறமையை வெளிப்படுத்தி, சாதனைகள் படைத்ததோடு மட்டுமல்லாமல், நமது பாரத நாட்டிற்கும் பெருமையைத் தேடித் தந்திருக்கிறார்.

அன்புமிக்கவர்களே! கணிதவியலில் வியக்கத்தக்க சாதனைகளைப் படைத்த சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் நமக்கு வியப்பூட்டுகின்றன. எப்படி அவர் சாதிக்க முடிந்தது தன் வெறுமையை விரட்டினார். உழைப்பினால் விரட்டினார். சோம்பல், அசதி அனைத்தையும் தன் உழைப்பினால் விரட்டினார்.

நாமும் நம்மை சுறுசுறுப்பாக வைப்போம். மூளையை எப்போதும் பயன்படுத்துவோம். சோம்பலோடு வாழந்தால் இறையாட்சி நமக்கு சொந்தமில்லை. நம் சோம்பலை தவிர்க்கும் பாவங்கள், காரணிகளை உடைப்போம். நாம் எப்போதும் நம்மை புத்துணர்ச்சி உள்ளவர்களாக மாற்றுவோம். நம்மை பல அறிவுகள், ஆற்றல்கள், நல்ல பண்புகள் இவற்றினால் நிரப்புவோம். நன்றாக உழைப்போம். உழைத்து உழைத்து நாம் நம்மை பல திறமைகளால் நிரப்பி சாதித்துக் காட்டுவோம். இந்த சாதனைகள் அனைத்தும் மெசியாவின் வருகைக்கு நம்மை தகுதியாக்கும் சான்றிதழ்களாக மாறட்டும்.

மனதில் கேட்க…
1. மானிடமகன் வருகைக்கான தயாரிப்பு வேலைகளை நான் மும்முரமாக செய்கிறேனா?
2. நான் வெறுக்கும் நபர்களை அதிக அன்பினால் திரும்ப அரவணைக்கலாமா? என்னை வெறுமையாக்கிருப்பதை நிறைவாக்கலாமா?

மனதில் பதிக்க…
காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் (மாற் 1:15)

~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.