வாழ்வின் நோக்கம்

இந்த உலகத்தில் கடவுள் பலவற்றைப் படைத்திருக்கிறார். விலங்குகளாக இருக்கலாம். பறவைகளாக இருக்கலாம். மரம், செடி, கொடிகளாக இருக்கலாம். ஊர்ந்து செல்லக்கூடியதாக இருக்கலாம். இந்த படைப்புகள் அனைத்துமே ஏதோ ஒரு நோக்கத்தோடு படைக்கப்பட்டிருக்கின்றன. அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இயற்கையும் அவைகளுக்கு உதவியாக இருக்கிறது. அதேபோலத்தான் விதைகளும். விதைகள் அனைத்திற்குமே, ஒரு பயன்பாடு இருக்கிறது. நோக்கம் இருக்கிறது. அதனை அடிப்படையாக வைத்துதான் இயேசு தனது போதனையை வழங்குகிறார்.

விதைக்கப்படுகிற விதைகள் அனைத்துமே நல்ல விதைகளாக இருந்தாலும், அவை அனைத்துமே சிறந்த பலனைக் கொடுக்கிறதா? என்றால் அது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. அவை அனைத்துமே பலன் கொடுப்பதில்லை. விதைக்கப்படுகிற இடமும், சூழலும் விதைகள் வளர்வதற்கேற்ற இடமாக இல்லை. எனவே, அவற்றால் பலன் கொடுக்க முடிவதில்லை. தாங்கள் எதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறோமோ, அந்த நோக்கத்தை நிறைவேற்ற முடியவில்லை. இந்த மனித வாழ்க்கையும் இந்த விதையைப் போன்றதுதான். நமக்கென்று, நாம் செய்வதற்கென்று நோக்கம் இருக்கிறது. அதை செய்வதற்கான வழிமுறைகளை, உதவிகளை இயற்கை நமக்கு செய்து தந்து கொண்டிருக்கிறது. நாம் அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். ஐந்து அறிவு படைத்த உயிரினங்கள், இயற்கையின் இயல்புக்கேற்ப அதனை நிறைவேற்றுகின்றன. ஆனால், ஆறறிவு படைத்த மனிதன், அதனை விட, மேம்பட்டு இருக்க வேண்டும் என்பதுதான், தந்தையாகிய இறைவனின் திட்டமாக இருக்கிறது.

கடவுள் கொடுத்த இந்த வாழ்வை, சிறப்பாக வாழ்வதற்கு இந்த பகுதி நமக்கு சிந்தனையாக அமைகிறது. கடவுள் கொடுத்த வாழ்வை, மற்றவர்களுக்கு பயனுள்ள விதத்தில் வாழ வேண்டும் என்றும் அழைப்புவிடுக்கிறது. இந்த அழைப்பினை ஏற்று, கடவுள் பிள்ளைகளாக வாழ வேண்டிய வரத்தை ஆண்டவரிடம் கேட்போம்.

– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.