விண்ணரசில் நுழைய முற்படுவோம்

பரிசேயர் மற்றும் ஏரோதுவைக்குறித்து எச்சரிக்கையாய் இருக்க இயேசு அழைப்பு விடுக்கிறார். எதற்காக பரிசேயர்களை, ஏரோதுவோடு இயேசு ஒப்பீடு செய்கிறார்? பரிசேயர்களுக்கும், ஏரோதுவுக்கும் உள்ள தொடர்பு என்ன? பரிசேயர்கள் மெசியாவை அடிமைத்தளையிலிருந்து மீட்கக்கூடிய, மிகப்பெரிய இராணுவத்தை வழிநடத்தில வெற்றிகொள்கின்றவராகப் பார்த்தனர். ஏரோதுவின் எண்ணமும் இந்த மண்ணகத்தில் தனது அரசை நிறுவ வேண்டும் என்பதாகத்தான் இருந்தது. அதற்கு குறுக்கே வருகிற அனைவரையும் கொன்றுவிடுவதற்குக்கூட அவன் தயாராக இருந்தான்.

சற்று இரண்டுபேருடைய எண்ணங்களைப் பார்த்தால், இரண்டுபேருடைய எண்ணங்களும் இந்த மண்ணகம் சார்ந்ததாக இருந்தது. இந்த மண்ணகத்தில் அரசை நிறுவ வேண்டும், இங்கே மகிழ்ச்சியாக அதிகாரத்தோடு, பதவியோடு வாழ வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்திருந்தது. ஆனால், இயேசு இந்த எண்ணத்தை நிராகரிக்கிறார். இவர்கள் தான் அதிகாரம் படைத்தவர்கள். இவர்களுடைய எண்ணம் மக்களுடைய எண்ணமாக மாறிவிடும். மக்களும், இந்த மண்ணகம் சார்ந்த சிந்தனையிலே வளர்ந்து விடுவார்கள். எனவே, பரிசேயர் மற்றும் ஏரோதுவின் சிந்தனைத்தாக்கம் மக்களை வழிதவறிச்செல்வதற்கு காரணமாகிவிடக்கூடாது என்பது இயேசுவின் ஆவல். ஏனென்றால், இயேசுவின் போதனை விண்ணகத்தை அடிப்படையாகக் கொண்டது. அவரது அரசு விண்ணகம் சார்ந்தது.

நமது வாழ்வும் கூட மண்ணகம் சார்ந்ததாகத்தான் இருக்கிறது. இங்கே இருக்கக்கூடிய பதவி, அதிகாரம், பலம் இவற்றைப்பெறுவதற்காகத்தான் நாமும் முயன்றுகொண்டிருக்கிறோம். கடவுளின் அரசைப்பற்றி நாம் பலவற்றைக்கேட்டாலும், அவற்றை நாம் பொழுதுபோக்காகத்தான் கேட்கிறோமே தவிர, பொருட்டாக எண்ணுவதில்லை. நாமும் அப்படி இல்லாமல், கடவுளின் அரசில் நுழைய முயற்சி எடுப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.