பாசம்

ஒரு ஊரில் மிகவும் சந்தோஷமாக டேவிட்டின் குடும்பம் வாழ்ந்து வந்தனர்.ஒருநாள் டேவிட்டின் பிள்ளைகள் இரண்டு பேரும்,அக்காவும், தம்பியுமாக சேர்ந்து அவர்கள் வீட்டின் அருகில் உள்ள பூங்காவில் விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்பொழுது தம்பி தனது அக்காவிடம் அக்கா வா அருகில் ஒரு ஆறு ஓடுகிறது. நாம் அதை பார்த்து விட்டு வரலாம்,என்று கூப்பிட்டான்.

அக்கா தனது தம்பியிடம் வேண்டாம் என்று சொல்லியும் தம்பி பிடிவாதமாக கூப்பிட்டதால் அக்காவும் மனமிரங்கி சரி தம்பியின் ஆசையை நிறைவேற்றலாம் என்று நினைத்து போகலாம் என்று சொன்னாள். இருவரும் சேர்ந்து ஒரு ஒத்தையடி பாதை வழியாக நடந்து பக்கத்தில் உள்ள எல்லா இயற்கை காட்சிகளையும் கண்டு களித்தவாறு போய் கொண்டு இருந்தனர். அவர்கள் தங்களை மறந்த நிலையில் சந்தோஷமாக இருந்ததால் வெகு தொலைவில் வந்துவிட்டனர். பிறகுதான் தெரிந்தது, தாங்கள் வெகு தொலைவில் வந்துவிட்டோமே என்று,

திடீரென்று அச்சமயத்தில் பனிமழை பொழிய ஆரம்பித்தது. தாங்கள் வந்த பாதை தெரியாமல் இருவரும் தடுமாறினார். நேரம் ஆக, ஆக இருட்ட ஆரம்பித்தது.இருட்டில் பாதை தெரியாமல் எப்படியாவது வீடு போய் சேர வேண்டும் என்று நினைத்து அக்கா தனது தம்பியின் கையை பிடித்துக்கொண்டு ஓட ஆரம்பித்தனர். கொஞ்சம் தூரம் ஓடின உடனே தம்பியால் ஊட முடியவில்லை. அக்கா, என்னால் ஓடி வர முடியவில்லை.கால் வலிக்கிறது என்று அழுதான்.

அக்கா, தனது தம்பியிடம் இன்னும் கொஞ்ச தூரம்தான், வா எப்படியாவது வீடு போய் சேர்ந்து விடலாம் என்று ஆறுதல் படுத்தினாள். ஆனால் வர, வர பனிமழை அதிகமாயிற்று. இரண்டு பேரும் வழி தடுமாறினர். தம்பி,அக்காவிடம் அக்கா என்னால் இனி நடக்கவே முடியாது என்று அப்படியே கீழே விழுந்து விட்டான். அக்காவும் தனது தம்பி மேல் வைத்த பாசத்தினால் அவனை எப்படியாவது
காப்பாற்ற நினைத்து அவன் மேல் பனி பொழியாதவாறு அவனை இருக அணைத்து அவன்மேல் படுத்துவிட்டாள். இவர்களுடைய அப்பாவும்,அம்மாவும்,அவர்களை தேடி அலைந்து கடைசியில்
அவர்கள் இருந்த இடத்தை கண்டுப்பிடித்து அவர்களை தூக்கினர்.

ஆனால் அந்தோ பரிதாபம்,அக்கா தனது தம்பியின் உயிரை காப்பாற்ற தனது உயிரை இழந்திருந்தாள். அவளின் உடம்பு சூட்டினால் பனிக்கட்டி அவனை தாக்காதவாறு காத்துக்கொண்டது. பெற்றோர் அவனை மருத்துவமனையில் சேர்த்து அவனை குணப்படுத்தினர். அக்கா தனது தம்பியின்மேல் வைத்த பாசத்தினால் தனது உயிரை கொடுத்து தனது தம்பியின் உயிரை காப்பாற்றி விட்டாள். அவன் பெரியவனாய் ஆனபிறகு தனது அக்கா செய்த தியாகத்தை நினைத்து கண்ணீர் வடித்தான். அன்று அவள் எனது உயிரை காப்பாற்றாமல் போயிருந்தால் இன்று நான் இல்லையே உண்மையான அன்பில் தியாகமே இருக்கும். அது தன்னலமற்றது, பொறாமை கொள்ளாது, தீயது செய்யாது. சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் விட்டுக்கொடுக்கும். நம் ஆண்டவரும் இப்படித்தான் தனது உயிரை கொடுத்து நம்மை வாழ வைத்துக்கொண்டு இருக்கிறார். பாசமானது உயிரை கொடுக்கும், வாங்காது.

ஜெபம்

எங்கள் அன்பின் தெய்வமே! நீர் எங்களுக்கு காட்டிய பாதையில் நாங்கள் நடந்து ஒருவருக்கொருவர் ஒற்றுமையோடும் அன்போடும் நடந்து உமது அடிச்சுவட்டை பின்பற்றி நடக்க கற்றுத்தாரும். எங்கள் சகோதரர், சகோதரிகளிடம்  உண்மையான அன்போடும், பாசத்தோடும் நடந்து உமது பெயருக்கு மகிமை செலுத்த உதவிச் செய்யும். நாங்கள் எங்கள் கண்களால் காண்கிறவர்களை நேசிக்காமல் காணாத, காணமுடியாத உம்மை எப்படி நேசிக்க முடியும். ஆகையால் நாங்கள் ஒருவருக்கொருவர் அன்போடு செயல்பட்டு உம்மைக் காண உதவி செய்யும்.நீர் விரும்பும் பிள்ளைகளாய் வாழ எங்களுக்கு அனுதினமும் போதித்து எங்களை வழிநடத்தும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம் எங்கள் அருமை தெய்வமே! ஆமென்!!அல்லேலூயா!!!

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: