Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

சபை உரையாளர் (சங்தகத் திருவுரை ஆகமம்)

அதிகாரம் 4

உலகில் காணப்படும் அநீதி ..............தொடர்ச்சி
1 பிறகு நான் இவ்வுலகில் நடக்கும் கொடுமைகளையெல்லாம் பார்த்தேன். இதோ! மக்கள் ஒடுக்கப்பட்டுக் கண்ணீர் சிந்துகிறார்கள். அவர்களைத் தேற்றுவார் எவருமில்லை. அவர்களை ஒடுக்குவோர் கை ஓங்கி இருந்ததால், அவர்களைத் தேற்றுவார் எவருமில்லை.2 ஆகையால், இன்று உயிரோடு வாழ்கிறவர்களின் நிலைமையைவிட ஏற்கெனவே மாண்டு மறைந்துபோனவர்களின் நிலைமையே மேலானது என்றேன்.3 இவ்விரு சாராரின் நிலைமையைவிட இன்னும் பிறவாதவர்களின் நிலைமையே சிறந்தது. ஏனெனில், அவர்கள் இவ்வுலகில் நடக்கும் கொடும் செயல்களைப் பார்க்கும் நிலையில் இல்லை.4 மனிதர் ஏன் இவ்வளவு பாடுபட்டு உழைக்கின்றனர் என்பதையும் கண்டறிந்தேன். இதற்குக் காரணம் மனிதரிடையே காணப்படும் போட்டி மனப்பான்மையாகும். இது வீண் செயல்: காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்.5 தம் கைகளைக் கட்டிக்கொண்டு பட்டினிகிடந்து மடிகிறவர் மடையர் என்று சொல்லப்படுகிறது.6 காற்றைப் பிடிக்க முயல்வது போன்ற பயனற்ற உழைப்பு இரு கை நிறைய இருப்பதைவிட மன அமைதி ஒரு கையளவு இருப்பதே மேல்.7 உலக வாழ்க்கையில் வேறொரு காரியமும் வீணென்று கண்டேன்.8 ஒருவர் தனி மனிதராக வாழ்கிறார். அவருக்குப் பிள்ளையுமில்லை, உடன் பிறந்தாருமில்லை; என்றாலும், அவர் ஓயாது உழைக்கிறார். ஆனால், தமக்கிருக்கும் செல்வத்தால் ஒருபோதும் மனநிறைவடைவதுமில்லை; தாம் இவ்வாறு உழைப்பதும் எவ்வகையான இன்பத்தையும் அனுபவியாமல் இருப்பதும் யாருக்காக என்று அவர் எண்ணிப் பார்ப்பதுமில்லை. இது வீணானதும் வருந்தத்தக்கதுமான வாழ்க்கை அன்றோ?9 தனி மனிதராய் இருப்பதை விட இருவராய் இருப்பது மேல். ஏனெனில், அவர்கள் சேர்ந்து உழைப்பதால், அவர்களுக்கு மிகுந்த பயன் கிடைக்கும்.10 ஒருவர் விழுந்தால், அடுத்தவர் அவரைத் தூக்கி விடுவார். தனி மனிதராய் இருப்பவர் விழுந்தால், அவரது நிலைமை வருந்தத்தக்கதாகும்: ஏனெனில், அவரைத் தூக்கி விட எவருமில்லை.11 குளிரை முன்னிட்டு இருவர் ஒன்றாய் படுத்துச் சூடு உண்டாக்கிக்கொள்ளலாம்: தனி மனிதனுக்கு எப்படிச் சூடு உண்டாகும்?12 தனி மனிதரை வீழ்த்தக்கூடிய எதிரியை இருவரால் எதிர்த்து நிற்க முடியும். முப்புரிக் கயிறு அறுவது கடினம்.13 வயதுசென்ற அறிவுரை கேளாத முட்டாள் அரசரைவிட, விவேகமுள்ள ஏழை இளைஞனே மேலானவன்.14 சிறையில் கைதியாதிருந்தவர் அரியணை ஏறியதும் உண்டு: அரசுரிமையுடன் பிறந்தவர் வறியவராவதும் உண்டு.15 ஆனால், இந்த உலகில் வாழும் மக்கள் அனைவரும் அந்த அரச பதவியை ஏற்ற இளைஞனின் சார்பில் இருந்ததைப் பார்த்தேன்.16 அவன் ஆண்ட மக்களின் எண்ணிக்கைக்கு வரையறையே இல்லை. அவன் காலத்திற்குப்பின் வந்த மக்களோ அவனில் மனநிறைவடையவில்லை. இதுவும் வீணே: காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!