Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

யூதித்து

முன்னுரை

செலூக்கியர் ஆட்சியின் போது யூதர்கள் அனுபவித்த துயரத்தின் வரலாற்றையும், மக்கபேயர் வழியாகக் கடவுள் அவர்களுக்கு அளித்த முழு விடுதலையையும் பின்னணியாகக் கொண்ட இந்நூல் ஒரு புதினம். இது கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது முதல் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இயற்றப்பட்டிருக்கலாம்.

இந்நூலின் ஆசிரியர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அவர், பாலஸ்தீனாவில் பரிசேயரின் வழிமரபில் தோன்றிய ஒரு யூதர் என்பதில் ஐயமில்லை. இது எபிரெய மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும்; மூலநூல் கிடைக்காமையால், அதன் கிரேக்க மொழி பெயர்ப்பே இன்று நமக்கு மூலபாடமாக இருந்து வருகிறது.

ஒருவர் கடவுள் மீது பற்றுறுதி கொண்டு செயல்பட்டால், எத்துணை வலிமை படைத்த உலக ஆற்றல்களையும் வென்றுவிடலாம் என்பது இந்நூலின் மையக் கருத்தாகும். இக்கருத்தை யூதர்கள், என்றும் தங்கள் நினைவில் நிறுத்தும் பொருட்டு, கோவில் அர்ப்பணிப்பின் ஆண்டு விழாவின் போது இந்நூல் பொதுவில் படிக்கப்பட்டது.

நூலின் பிரிவுகள்
  1. யூதர்களுக்கு நேரிட்ட பேரிடர் 1:1 - 7:32
  2. யூதித்து வழியாகக் கிடைத்த வெற்றி 8:1 - 16:25


அதிகாரம் 1

1. யூதர்களுக்கு நேரிட்ட பேரிடர்
நெபுகத்னேசரும் அர்ப்பகசாதும்
1 ஒரு காலத்தில் நெபுகத்னேசர் மன்னன் நினிவே மாநகரில் அசீரியர்களை ஆண்டுவந்தான். அப்பொழுது எக்பத்தானாவில் அர்ப்பகசாது அரசன் மேதியர் மீது ஆட்சி செலுத்திவந்தான். 2 அர்ப்பகசாது எக்பத்தானாவைச் சுற்றிலும் மூன்று முழப் பருமனும் ஆறு முழ நீளமுமான செதுக்கிய கற்களைக் கொண்டு, எழுபது முழ உயரமும் ஐம்பது முழ அகலமும் உடைய மதில்களை எழுப்பினான்.3 அதன் வாயில்கள்மேல் நூறு முழ உயரம் கொண்ட காவல் மாடங்களைக் கட்டினான்: அவற்றின் அடித்தளங்களை அறுபது முழ அகலத்தில் அமைத்தான்.4 தன்னுடைய வலிமைமிகு படைகள் புறப்பட்டுச் செல்வதற்கும், காலாட்படை அணிவகுத்துச் செல்வதற்கும் வசதியாக, எழுபது முழ உயரமும் நாற்பது முழ அகலமும் கொண்ட வாயில்களைக் கட்டினான்.5 நேபுகத்னேசர் மன்னன் தனது ஆட்சியின் பன்னிரெண்டாம் ஆண்டில் இராகாவு நகர எல்லையில் இருந்த பரந்த சமவெளியில் அர்ப்பகசாது அரசனுக்கு எதிராகப் போர்தொடுத்தான்.6 மலைவாழ் மக்கள், யூப்பிரத்தீசு, திக்ரீசு, உதஸ்பு ஆகிய ஆறுகள் அருகே வாழ்ந்தோர், சமவெளியில் வாழ்ந்த ஏலாமியரின் அரசன் அரியோக்கு ஆகிய அனைவரும் நெபுகத்னேசருடன் சேர்ந்து கொண்டார்கள். இவ்வாறு, பல மக்களினங்கள் கெலயூது மக்களின் படைகளோடு சேர்ந்து கொண்டன. கல்தேயரைக் குறிக்கலாம். 7 பின்னர் அசீரிய மன்னன் நெபுகத்னேசர் பாரசீகத்தில் வாழ்ந்தோர் அனைவருக்கும், சிலிசியா, தமஸ்கு, லெபனோன், எதிர் லெபனோன் ஆகிய மேற்கு நாடுகளில் வாழ்ந்தோர் யாவருக்கும், கடற்கரைவாழ் மக்கள் எல்லாருக்கும்,8 கர்மேல், கிலயாது, வட கலிலேயா, எஸ்திரலோன் பெரும் சமவெளியெங்கும் வாழ்ந்த மக்களினத்தார் எல்லாருக்கும்,9 சமாரியாவிலும் அதன் நகர்களிலும் வாழ்ந்தோர் அனைவருக்கும், யோர்தானுக்கு மேற்கே எருசலேம், பாத்தேன், கெலூசு, காதேசு, எகிப்தின் எல்லையில் இருந்த ஓடைவரை வாழ்ந்தோருக்கும், தபினா, இராம்சேசு, கோசேன் பகுதிகளின் மக்கள் எல்லாருக்கும், எகிப்துக்கும் பாலஸ்தீனுக்கும் எல்லையாய்
அமைந்த 'எல் அரிஸ்' ஓடை.
10 தானி, மெம்பிசுக்கு அப்பால் எத்தியோப்பியாவின் எல்லைவரை எகிப்தில் வாழ்ந்த எல்லாருக்கும் தூது அனுப்பினான்.11 ஆனால், இந்த நாடுகளில் வாழ்ந்தோர் யாருமே அசீரிய மன்னன் நெபுகத்னேசரின் சொல்லைப் பொருட்படுத்தவில்லை; அவனோடு சேர்ந்து போரிட முன்வரவில்லை; அவனுக்கு அவர்கள் அஞ்சவுமில்லை. ஆனால் அவனை யாரோ ஒரு மனிதனாகவே கருதினார்கள்; அவனுடைய தூதர்களையும் இழிவுபடுத்தி வெறுங்கையராய்த் திருப்பியனுப்பினார்கள். 12 ஆகவே, இந்நாடுகள் அனைத்தின் மீதும் நெபுகத்னேசர் கடுஞ் சினங் கொண்டான். சிலிசியா, தமஸ்கு, சிரியா ஆகிய நாடுகள் அனைத்தையும் பழிவாங்கி, மோவாபியர், அம்மோனியர், யூதேயர், எகிப்தியர் ஆகிய அனைவரையும் வாளுக்கு இரையாக்கப்போவதாகத் தன் அரியணைமீதும் அரசுமீதும் ஆணையிட்டான்; இவ்வாறு, மத்திய தரைக்கடல்முதல் பாரசீக வளைகுடா வரையிலும் வாழ்ந்த எல்லாரையும் அழிக்கக் கட்டளையிட்டான்.13 நேபுகத்னேசர் ஆட்சியின் பதினேழாம் ஆண்டில் தன் படைகளை அர்ப்பகசாது அரசனுக்கு எதிராக ஒன்று திரட்டினான்: அவனோடு போரிட்டு, வெற்றி பெற்று அவனுடைய காலாட்படை, குதிரைப்படை, தேர்ப்படை அனைத்தையும் முறியடித்தான்:14 அவனுடைய நகர்களைக் கைப்பற்றியபின் எக்கத்தானாவை வந்தடைந்தான்; அதன் காவல்மாடங்களைக் கைப்பற்றி, கடை வீதிகளில் புகுந்து கொள்ளையடித்து, அதன் எழிலைச் சீர்குலைத்தான். 15 மேலும், அவன் இராகாவு மலைப்பகுதியில் அர்ப்பகசாதைப் பிடித்துத் தன் ஈட்டியால் குத்திக்கொன்று அவனை முற்றிலும் அழித்தொழித்தான்.16 பின்னர், தன்னோடு சேர்ந்து போரிட்ட மாபெரும் திரளான படைவீரர்களோடு நினிவேக்குத் திரும்பி வந்தான். அங்கு அவனும் அவனுடைய படைவீரர்களும் நூற்றுஇருபது நாள் விருந்து கொண்டாடி மகிழ்ந்தார்கள்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!