Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

யோபு

அதிகாரம் 5

கடவுள் மீது நம்பிக்கை ..............தொடர்ச்சி
1 இப்போது கூப்பிட்டுப்பாரும்! யார் உமக்குப் பதிலுரைப்பார்? எந்தத் தூயவரிடம் துணை தேடுவீர்?2 உண்மையில், அறிவிலியைத்தான் எரிச்சல் கொல்லும்: பேதையைத் தான் பொறாமை சாகடிக்கும்,3 அறிவிலி வேரூன்றுவதை நானே கண்டேன்: ஆனால் உடனே அவன் உறைவிடத்தில் வெம்பழி விழுந்தது,4 அவனுடைய மக்களுக்கப் பாதுகாப்பு இல்லை: ஊர்மன்றத்தில் அவர்கள் நொறுக்கப்படுகின்றனர்: மீட்பார் எவரும் அவர்க்கு இல்லாது போயினர்.5 அவனது அறுவடையைப் பசித்தவர் உண்பர்: முள்ளுக்கு நடுவிலுள்ளதையும் அவர்கள் பறிப்பர்: பேராசைக்காரர் அவன் சொத்துக்காகத் துடிப்பர்.6 ஏனெனில், புழுதியினின்று இடுக்கண் எழாது: மண்ணினின்று இன்னல் விளையாது.7 நெருப்புச்சுடர் மேல்நோக்கி எழுவதுபோல, துன்பத்திற்கென்றே தோன்றினர் மனிதர்.8 ஆனால், நான் கடவுளையே நாடுவேன்: அவரிடம் மட்டுமே என் வாழ்க்கை ஒப்புவிப்பேன்.9 ஆராய முடியாப் பெரியனவற்றையும் எண்ணிலடங்கா வியக்கத்தக்கனவற்றையும் செய்பவர் அவரே.10 மண் முகத்தே மழையைப் பொழிபவரும் வயல் முகத்தே நீரைத் தருபவரும் அவரே.11 அவர் தாழ்ந்தோரை மேலிடத்தில் அமர்த்துகின்றார்: அழுவோரைக் காத்து உயர்த்துகின்றார்.12 வஞ்சகரின் திட்டங்களைத் தகர்க்கின்றார்: அவர்களின் கைகளோ ஒன்றையும் சாதிக்கமாட்டா. 13 ஞானிகளை அவர்தம் சூழ்ச்சியில் சிக்க வைக்கின்றார்: வஞ்சகரின் திட்டங்கள் வீழ்த்தப்படுகின்றன:14 அவர்கள் பகலில் இருளைக் காண்கின்றனர்: நண்பகலிலும் இரவில்போல் தடுமாறுகின்றனர்.15 அவர் வறியவரை அவர்களின் வாயெனும் வாளினின்று காக்கின்றார்: எளியவரை வலியவரின் கையினின்று மீட்கின்றார்.16 எனவே, நலிந்தவர்க்கு நம்பிக்கை உண்டு: அநீதி தன் வாயைப் பொத்திக்கொள்ளும்.17 இதோ! கடவுள் திருத்தும் மனிதர் பேறு பெற்றோர்: ஆகவே, வல்லவரின் கண்டிப்பை வெறுக்காதீர்.18 காயப்படுத்தினாலும் கட்டுப்போடுபவர் அவரே: அடித்தாலும் ஆற்றுகின்ற கை அவரதே.19 ஆறு வகை அல்லல்களினின்றும் அவர் உம்மை மீட்பார்: ஏழாவதும் உமக்கு இன்னல் தராது.20 பஞ்சத்தில் சாவினின்றும் சண்டையில் வாள் முனையினின்றும் உம்மை விடுவிப்பார்.21 நாவின் சொல்லடியினின்றும் நீர் மறைக்கப்படுவீர்: நாசமே வந்து விழுந்தாலும் நடுங்கமாட்டீர்.22 அழிவிலும் பஞ்சத்திலும் நீர் நகுவீர்: மண்ணக விலங்குகளுக்கு மருளீர்.23 வயல்வெளிக் கற்களோடு உம் உடன்படிக்கை இருக்கும்: காட்டு விலங்குகளோடும் நீர் அமைதியில் வாழ்வீர்.24 உம் கூடாரத்தில் அமைதியைக் காண்பீர்: உம் மந்தையைச் சென்று காண்கையில் ஒன்றும் குறைவுபடாதிருக்கும்.25 உமது வித்து பெருகுவதையும், உமது வழிமரபினர் நிலத்துப்புற்களைப் போன்றிருப்பதையும் அறிவீர்.26 பழுத்த வயதில் தளர்வின்றிக் கல்லறை செல்வீர், பருவத்தே மேலோங்கும் கதிர்மணி போல்.27 இதுவே யாம் கண்டறிந்த உண்மை! செவிகொடுப்பீர்: நீவிரே கண்டுனர்வீர்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!