Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

மக்கபேயர் - இரண்டாம் நூல்

அதிகாரம் 2

இரண்டாம் மடல் ..............தொடர்ச்சி
1 முன்னர் விளக்கியபடி, சிறிதளவு நெருப்பை நாடு கடத்தப்பட்டோர் எடுத்துச்செல்ல இறைவாக்கினர் எரேமியாவே ஆணையிட்டார் என்பது ஆவணங்களிலிருந்து தெரியவருகிறது.2 அவர்களுக்கு இறைவாக்கினர் இவ்வாணையைக் கொடுத்தபின், ஆண்டவருடைய கட்டளைகளை மறவாதிருக்க அவர்களை எச்சரித்தார்: பொன், வெள்ளிச் சிலைகளையும் அவற்றின் அணிகலன்களையும் காணும்பொழுது மனம் குழம்பி சிதைந்துவிடாதபடி இருக்க அறிவுறுத்தினார்:3 திருச்சட்டம் அவர்களின் உள்ளத்தினின்று நீங்கா வண்ணம் இவை போன்ற வேறு பல சொல்லி அவர்களுக்கு அறிவூட்டினார். 4 இறை வெளிப்பாட்டால் ஏவப்பெற்று, கூடாரத்தையும் பேழையையும் தம்மோடு கொண்டுவரும்படி இறைவாக்கினர் பணித்தார்: முன்பு மோசே ஏறிச்சென்று கடவுளின் உரிமைச் சொத்தைக் கண்ட மலைக்கு இவரும் சென்றார் - இவையெல்லாம் அதே ஆவணங்களில் காணக்கிடக்கின்றன.5 எரேமியா அங்குச்சென்று ஒரு குகையைக் கண்டார்: கூடாரத்தையும் பேழையையும் தூபபீடத்தையும் கொண்டுசென்று அதில் வைத்து வாயிலை மூடி முத்திரையிட்டார்.6 அவரைப் பின்தொடர்ந்தவர்களுள் சிலர் அக்குகைக்குச் செல்லும் வழியை அடையாளம் கண்டு கொள்ள முயன்றனர்: ஆனால் அவர்களால் அதைக் கண்டுகொள்ள முடியவில்லை.7 எரேமியா இதை அறிந்தபோது அவர்களைக் கடிந்து, 'கடவுள் தம் மக்களுக்கு இரக்கம் காட்டி, மீண்டும் அவர்களை ஒன்றுசேர்க்கும் வரை அந்த இடம் எவருக்கும் தெரியாதிருக்கட்டும்.8 அப்போது ஆண்டவர் இதையெல்லாம் வெளிப்படுத்துவார். மோசே காலத்திலும், சிறப்பான முறையில் கோவிலில் அர்ப்பணிக்கப்படுமாறு சாலமோன் வேண்டிக்கொண்ட வேளையிலும் நிகழந்தது போல் ஆண்டவருடைய மாட்சியும் முகிலும் தோன்றும்' என்று கூறினார்.9 மேலும், ஞானம் நிறை சாலமோன் கோவில் வேலை நிறைவுற்றபோது அர்ப்பணிப்புப் பலி ஒப்புக்கொடுத்தார்:10 மோசே ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டபோது விண்ணகத்திலிருந்து நெருப்பு இறங்கி வந்து பலிப்பொருள்களை எரித்தது போல, சாலமோனும் வேண்டிக் கொண்டபோது நெருப்பு இறங்கி வந்து எரிபலிகளை எரித்தது என்றும் அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.11 (பாவம் போக்கும் பலியை உண்ணாத காரணத்தால் அது எரிக்கப்பட்டது என்று மோசே கூறியிருந்தார்.)12 இவ்வாறு சாலமோன் எட்டு நாள் விழா கொண்டாடினார்.13 இந்நிகழ்ச்சிகளெல்லாம் அரசு ஆவணங்களிலும் நெகமியாவுடைய வாழ்க்கைக் குறிப்புகளிலும் எழுதப்பட்டுள்ளன. மேலும் நெகேமியா ஒரு நூல்நிலையம் நிறுவி மன்னர்கள், இறைவாக்கினர்கள்பற்றிய நூல்களையும் தாவீது எழுதியவற்றையும் நேர்ச்சைப் படையல்கள் தொடர்பான மன்னர்களின் மடல்களையும் அதில் சேகரித்து வைத்தார்.14 அதுபோன்று யூதாவும் எங்களிடையே ஏற்பட்ட போரினால் சிதறிப்போன நூல்களையெல்லாம் சேகரித்து வைத்தார். அவை இன்றும் எங்களிடம் உள்ளன.15 உங்களுக்குத் தேவைப்படுமாயின், அவற்றை எடுத்துச்செல்ல ஆளனுப்புங்கள்.16 நாங்கள் கோவில் தூய்மைப்பாட்டு விழாவைக் கொண்டாட விருப்பதால் நீங்களும் அவ்விழாவைக் கொண்டாடும்படி கேட்டுக்கொள்ளவே உங்களுக்கு எழுதுகிறோம்.17 திருச்சட்டம் வழியாகக் கடவுள் உறுதி மொழிந்ததுபோல், அவரே தம் மக்களாகிய நம் அனைவரையும் மீட்டார்: உரிமைச்சொத்து, ஆட்சி, குருத்துவம், கோவில், தூய்மைப்பாடு ஆகியவற்றை நம் எல்லாருக்கும் மீண்டும் அளித்தார்.18 அவர் விரைவில் நம்மீது இரக்கம் கொள்வார் என்றும், வானத்தின்கீழ் உள்ள எல்லா இடங்களினின்றும் தமது தூய இடத்தில் நம்மை ஒன்று சேர்ப்பார் என்றும், அவரிடம் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்: ஏனெனில் அவர் பெரும் தீங்குகளினின்று நம்மை விடுவித்துள்ளார்: தம் இடத்தையும் தூய்மைப்படுத்தியுள்ளார்

2. நூலாசிரியரின் முன்னுரை
19 யூதா மக்கபே, அவருடைய சகோதரர்கள் ஆகியோரின் வரலாறு, திருப்பெருங் கோவிலின் தூய்மைப்பாடு, பலிபீட அர்ப்பணிப்பு,20 அந்தியோக்கு எப்பிபானுக்கும் அவனுடைய மகன் யூப்பாத்தோருக்கும் எதிராக நடைபெற்ற போர்கள்,21 யூத நெறிக்காகத் துணிவுடன் போராடியவர்களுக்கு விண்ணகத்தினின்று வழங்கப்பட்ட காட்சிகள், யூதர்கள் சிலராய் இருந்தபோதிலும் அவர்கள் நாடு முழுவதையும் கைப்பற்றி அங்கு இருந்த அயல்நாட்டார் கூட்டத்தைத் துரத்தியடித்து, 'காட்டுமிராண்டிகள்' என்பது மூலப்பாடம்.
கிரேக்கர் அல்லாதவரை இவ்வாறு அழைப்பது
கிரேக்கர்களின் வழக்கம்.
இங்குக் கிரேக்கர்களையே குறிக்க
இச்சொல் பாயன்படுகிறது.
22 அனைத்துலகப் புகழ் பெற்ற கோவிலைத் திரும்பப் பெற்று, எருசலேம் நகரை விடுவித்து, அழிந்து போகும் நிலையில் இருந்த சட்டங்களை மீண்டும் நிலைநாட்டியது, ஆண்டவரும் அவர்கள்மீது இரக்கம் காட்டிப் பேரருள் புரிந்தது23 ஆகிய அனைத்தையும் சீரேனைச் சேர்ந்த யாசோன் ஐந்து தொகுதிகளில் விளக்கியுள்ளார். இவற்றை ஒரே நூலில் சுருக்கித் தர முயல்வோம்.24 இவற்றில் எண்ணற்ற புள்ளிவிவரங்கள் காணப்படுகின்றன. வரலாற்று நிகழ்ச்சிகள் மிகுதியாக இருப்பதால் அந்நிகழ்ச்சித் தொகுப்புகளில் ஆய்வு செய்ய விழைவோர் பெரும் இடர்ப்பாடுகளைச் சந்திக்க நேரிடும். இவற்றை மனத்தில் கொண்டு,25 படிக்க விரும்புவோருக்கு இந்நூல் மகிழ்ச்சி அளிக்கவும், மனப்பாடம் செய்ய விரும்புவோருக்கு எளிதாக அமையவும், அனைவருக்கும் பயன் தரவும் நாங்கள் கருத்தாய் இருந்தோம்.26 சுருக்கி எழுதும் இக்கடினமான உழைப்பை மேற்கொண்ட எங்களுக்கு இது வியர்வை சிந்தி உறக்கம் இழக்கச் செய்யும் வேலையே அன்றி எளிதானது அல்ல.27 விருந்தினர்களை நிறைவு செய்யும்படி விருந்து ஏற்பாடு செய்வதைப்போன்றே இதுவும் கடினமானது. ஆயினும் பலரின் நன்றியுணர்வைப் பெறுவதற்காக நாங்கள் இக்கடினமான உழைப்பை மகிழ்வுடன் மேற்கொள்வோம்.28 சரியான விவரங்களைச் சேகரிக்கும் பொறுப்பை வரலாற்று ஆசிரியருக்கு விட்டுவிட்டு, அவற்றின் சுருக்கத்தைத் தருவதில் மட்டும் எங்கள் மனத்தைச் செலுத்துவோம்.29 புது வீடு கட்டும் கட்டடக் கலைஞர் முழு அமைப்பிலும் கருத்தாய் இருக்க வேண்டும். ஆனால் அதற்கு வண்ணம் பூசி அழகுபடுத்துபவர் அதன் அழகுக்குத் தேவையானதில் மட்டும் கவனம் செலுத்துவார். இதைப் போன்றதே எங்கள் பணியும் என்பது என் கருத்து. 30 தாம் எழுதும் பொருளைத் தம்வயமாக்கி, அதன் நிகழ்ச்சிகளை எல்லாக் கோணங்களிலிருந்தும் ஆய்வு செய்து விவரங்களின் மீது ஆழ்ந்த கவனம் செலுத்துவது வரலாற்று ஆசிரியரின் கடமை.31 ஆனால் வரலாற்றைச் சுருக்கி எழுதுபவருக்கு, நிகழ்ச்சிகளைக் குறுக்கவும் விரிவான விளக்கங்களை விட்டுவிடவும் உரிமை உண்டு.32 ஆகவே மேலும் விரித்துரைக்காமல் வரலாற்றை எழுதத் தொடங்குகிறோம். முன்னுரையை நீளமாக்கி வரலாற்றையே சுருக்குவது அறிவின்மையாகும்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!