Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

ஒசேயா

அதிகாரம் 2

இஸ்ரயேலின் ஒருங்கிணைப்பு ..............தொடர்ச்சி
1 அம்மீ என உங்கள் சகோதரர்களிடம் கூறுங்கள். ருகாமா என உங்கள் சகோதரிகளிடம் கூறுங்கள்.

இஸ்ரயேல் ஓர் உண்மையற்ற மனைவி
2 வழக்காடுங்கள், உங்கள் அன்னையோடு வழக்காடுங்கள்: அவள் எனக்கு மனைவியுமல்ல: நான் அவளுக்குக் கணவனுமல்ல: அவள் வேசித்தனத்தின் குறிகளைத் தன் முகத்தினின்றும், விபசார குறிகளைத் தன் மார்பினின்றும் அகற்றட்டும்.3 இல்லாவிடில், நான் அவளைத் துகிலுரித்து திறந்தமேனியாக்குவேன்: பிறந்த நாளில் இருந்த கோலமாய் அவளை ஆக்குவேன்: பாலைநிலம்போல் ஆக்கி, வறண்ட நிலமாகச்செய்து தாக்கத்தினால் அவளைச் சாகடிப்பேன்.4 அவள் பிள்ளைகளுக்கும் நான் கருணை காட்டமாட்டேன்: ஏனெனில் அவர்கள் வேசித்தனத்தில் பிறந்தவர்கள்.5 அவர்களின் தாய் வேசியாய் வாழ்ந்தாள்: அவர்களைக் கருத்தாங்கியவள் ஒழுக்கம் கெட்டு நடந்தாள்: எனக்கு உணவும் தண்ணீரும், ஆட்டு மயிரும் மணலும், எண்ணெயும் பானமும் தருகின்ற என் காதலரைப் பின் செல்வேன் என்றாள்.6 ஆதலால், நான் அவள் வழியை முள்ளால் அடைப்பேன்: அவள் எதிரில் சுவர் ஒன்றை எழுப்புவேன்: அவளால் வழி கண்டுபிடித்துப் போக இயலாது.7 அவள் தன் காதலர்களைப் பின்தொடர்ந்து ஓடுவாள்: ஆனால் அவர்களிடம் போய்ச் சேரமாட்டாள். அவர்களைத் தேடித் திரிவாள்: ஆனால் அவர்களைக் காணமாட்டாள். அப்போது அவள், என் முதல் கணவனிடமே நான் திரும்பிப் போவேன்: இப்போது இருப்பதைவிட, அப்போது எனக்கு நன்றாயிருந்தது என்பாள்.8 கோதுமையும் திராட்சை இரசமும் எண்ணெயும் அவளுக்குக் கொடுத்தது நானே என்பதை அவள் அறியவில்லை. நான் வாரி வழங்கிய பொன், வெள்ளியைக் கொண்டே பாகாலுக்குச் சிலை செய்தார்கள்.9 ஆதலால், நான் எனது கோதுமையை அதன் காலத்திலும், எனது திராட்சை இரசத்தை அதன் பருவத்திலும் திரும்ப எடுத்துக்கொள்வேன்: அவள் திறந்த மேனியை மறைக்க நான் கொடுத்திருந்த கம்பளி ஆடையையும் சணலாடையையும் பறித்துக் கொள்வேன்.10 இப்பொழுதே அவளுடைய காதலர் கண்முன் அவளது வெட்கக் கேட்டை வெளிப்படுத்துவேன்: என்னுடைய கையிலிருந்து அவளை விடுவிப்பவன் எவனுமில்லை.11 அவளது எல்லாக் கொண்டாட்டத்தையும் விழாக்களையும் அமாவாசைகளையும் ஓய்வு நாளையும் அவளுடைய திருநாள்கள் அனைத்தையுமே ஒழித்துவிடுவேன்.12 இவை என் காதலர் எனக்குக் கூலியாகக் கொடுத்தவை என்று அவள் சொல்லிக் கொண்ட அவளுடைய திராட்சைத் தோட்டங்களையும், அத்தி மரங்களையும் பாழாக்குவேன்: அவற்றைக் காடாக்கிவிடுவேன்: காட்டு விலங்குகளுக்கு அவை இரையாகும்.13 பாகால்களின் விழாக்களைக் கொண்டாடிய நாள்களில் அவள் அவற்றுக்கு நறுமணப்புகை எழுப்பினாள்: வளையல்களாலும் நகைகளாலும் தன்னை அணி செய்து, தன் காதலர்பின் போய் என்னை மறந்தாள்: இவற்றுக்காக அவளை நான் தண்டிப்பேன் என்கிறார் ஆண்டவர்.

தம் மக்கள் மேல் ஆண்டவரின் அன்பு
14 ஆதலால் நான் அவளை நயமாகக் கவர்ந்திழுப்பேன்: பாலைநிலத்துக்கு அவளைக் கூட்டிப்போவேன்: நெஞ்சுருக அவளுடன் பேசுவேன்.15 அவளுடைய திராட்சைத் தோட்டங்களை அவளுக்குத் திரும்பக் கொடுப்பேன்: ஆகோர் பள்ளத்தாக்கை நம்பிக்கையின் வாயிலாக மாற்றுவேன்: அப்போது அவள் அங்கே தன் இளமையின் நாள்களிலும், எகிப்து நாட்டினின்று வெளியேறிய காலத்திலும் பாடியதுபோல் பாடுவாள்.16 அந்நாளில், 'என் கணவன்' என என்னை அவள் அழைப்பாள்: 'என் பாகாலே' என இனிமேல் என்னிடம் சொல்லமாட்டாள் என்கிறார் ஆண்டவர்.17 அவளுடைய நாவினின்று பாகால்களின் பெயர்களை நீக்கிவிடுவேன்: இனிமேல் அவர்களைப் பெயர் சொல்லி அழைக்க மாட்டாள்.18 அந்நாளில், காட்டு விலங்குகளோடும், வானத்துப் பறவைகளோடும், நிலத்தில் ஊர்வனவற்றோடும் அவர்களுக்காக நான் ஓர் உடன்படிக்கை செய்வேன்: வில்லையும் வாளையும் போரையும் நாட்டினின்று அகற்றிவிடுவேன்: அச்சமின்றி அவர்கள் படுத்திருக்கச் செய்வேன்.19 இஸ்ரயேல்! முடிவில்லாக் காலத்திற்கும் உன்னோடு நான் மண ஒப்பந்தம் செய்துகொள்வேன்: நேர்மையிலும் நீதியிலும் பேரன்பிலும் உன்னோடு மண ஒப்பந்தம் செய்து கொள்வேன்.20 மாறாத அன்புடன் உன்னோடு மண ஒப்பந்தம் செய்து கொள்வேன்: ஆண்டவராம் என்னை நீயும் அறிந்துகொள்வாய்.21 மேலும் அந்நாளில் நான் மறுமொழி அளிப்பேன் என்கிறார் ஆண்டவர். நான் வானத்தின் வழியாய் மறுமொழி அளிப்பேன்: அது நிலத்தின் வழியாய் மறுமொழி தரும்.22 நிலம், கோதுமை, திராட்சை இரசம், எண்ணெய் வழியாய் மறுமொழி தரும். அவை இஸ்ரியேல்வழியாய் மறுமொழி தரும் என்கிறார் ஆண்டவர்.23 நான் அவனை எனக்கென்று நிலத்தில் விதைப்பேன், லோ ருகாமா வுக்குக் கருணை காட்டுவேன்: லோ அம்மீ யை நோக்கி, நீங்கள் என் மக்கள் என்பேன்: அவனும் நீரே என் கடவுள் என்பான்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!