Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்

முன்னுரை

திருத்தூதர் பவுல் இத்திருமுகத்தை எழுதியுள்ளார். அவரது பெரிய மடல்களில் ஒன்றான இத்திருமுகம் இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தமுடைய அறிவுரைகளை வழங்குகிறது. அன்பு பற்றிய சிறந்த ஒரு கவிதை இம்மடலில் உள்ளது.

சுழலும் நோக்கமும்

பவுல் காலத்தில் கொரிந்து ஒரு பெரிய வணிக நகரமாக விளங்கியது. உரோமையரின் குடியேற்ற நகரமாகவும் திகழ்ந்தது. இங்குப் பல தெய்வங்களுக்கான கோவில்கள் இருந்தன. வழிபாடு சார்ந்த வாணிகமும் தழைத்தோங்கியது. கொரிந்தியரைப் போல் இருத்தல் என்னும் கூற்று ஒழுக்கக்கேடாய் வாழ்தலைக் குறித்தது.

பவுல் காலத்தில் இந்நகரில் ஏறக்குறைய 700,000 மக்கள் வாழ்ந்தனர். அவர்களில் மூன்றில் இரு பங்கினர் அடிமை மக்கள்.

பவுல் தம் இரண்டாம் பயணத்தின்போது இங்குத் திருச்சபையை ஏற்படுத்தினார் (3:6, 10; 4:5; திப 18:1-7); அக்கிலா, பிரிஸ்கில்லா தம்பதியருடன் நட்பு கொண்டார்; யூதர்களுடன் தொழுகைக் கூடத்தில் விவாதித்தார்.

பின்னர் பவுல் எபேசு நகரத்தில் நற்செய்திப்பணி ஆற்றியபோது குலோயி வீட்டினர் மூலம் கொரிந்துத் திருச்சபையில் இருந்த பிளவுகள் பற்றிக் கேள்விப்பட்டார் (1:11). மற்றும் கொரிந்திய திருச்சபை பவுலுக்கு ஒரு கடிதம் எழுதிக் கொரிந்தில் காணப்பட்ட சில சிக்கல்களுக்கு விடைகேட்டு இருந்தது (7:1). இக்கடிதம் வழியாகவும், கடிதத்தைக் கொண்டு வந்த மூவர் வாய்மொழி வழியாகவும் (16:17) அறிந்துகொண்ட சிக்கல்களுக்குத் தீர்வு காணும் முறையில் பவுல் திருமுகத்தை வரைந்துள்ளார். இது கி.பி. 54-55 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்டிருக்கலாம்.

உள்ளடக்கம்

மூன்று பகுதிகளாக இத்திருமுகத்தைப் பிரிக்கலாம். பவுல், அப்பொல்லோ, பேதுரு ஆகியோர் மீதிருந்த மிகைப்படுத்தப்பட்ட பற்று, கொரிந்தில் பிளவுகளுக்கும் தற்பெருமை பாராட்டுதலுக்கும் வழியமைத்தது (1). இத்தகைய பிளவுகள் கிறிஸ்துவையே பிளவுபட்டவராகக் காட்டுகின்றன என்கிறார் பவுல். கொரிந்தில் காணப்படும் பிளவுகள் அவர்களின் ஆன்மீக முதிர்ச்சியின்மையைக் காட்டுகின்றன என்று கூறும் அவர், கொரிந்தியக் கிறிஸ்தவர்கள் மனிதத் தலைவர்களிடமல்ல, மாறாகக் கிறிஸ்துவிடம் கொள்ளும் உறவைப் பற்றியே பெருமை பாராட்ட வேண்டும் என்கிறார் (2-4).

ஒருவன் தன் தந்தையின் மனைவியையே வைத்துக் கொண்டிருக்கும் அளவுக்கு ஒழுக்கக்கேடு மலிந்திருந்த நிலையில் கிறிஸ்தவர்கள் அதைக் கண்டிக்கவில்லை. அத்தகைய செயலைச் செய்தவனைச் சபையிலிருந்து நீக்குமாறு கட்டளையிடுகிறார் பவுல் (5); மேலும் கிறிஸ்தவர்கள் பொது நீதிமன்றங்களுக்குச் செல்லாமல் தங்களுக்குள்ளே பிணக்குகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார் (6). திருமணம், கண்ணிமை, மணமுறிவு, மறுமணம் ஆகியவற்றைப் பற்றித் தொடர்ந்து பேசுகிறார் (7). சிலைகளுக்குப் படைத்த உணவை உண்ணலாமா (8-11) என்னும் கேள்விகளுக்குப் பதில்அளிக்கும் நேரத்தில், கிறிஸ்தவ உரிமையும் அன்பின் விதியும் முரண்பட்டு நிற்பதாகத் தோன்றும்போது, மனவலிமையற்ற சகோதரரை முன்னிட்டு உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டும் என்கிறார் பவுல்; தொடர்ந்து, ஆண்டவரின் திருவிருந்தில் முறையாகப் பங்கெடுத்தல், ஆவிக்குரிய கொடைகளை முறையாகப் பயன்படுத்தல் பற்றிப் பேசுகிறார் (11-14).

உயிர் பெற்றெழுதலைப்பற்றிய கொரிந்தியரின் தவறான கண்ணோட்டத்தைப் பவுல் களையப் பார்க்கிறார் (15); உயிர்பெற்றெழுந்த உடல் எவ்வாறிருக்கும் என விளக்குகிறார்; இறுதியாக எருசலேம் கிறிஸ்தவர்களுக்காகத் நாம் திரட்டப் போகும் நன்கொடை பற்றிக் கூறி (16:1-4) பல்வேறு அறிவுரைகள் மற்றும் வாழ்த்துகளுடன் முடிக்கிறார் (16:5-24).

5:9இல் ஏற்கெனவே ஒரு மடல் எழுதியிருந்ததாகக் கூறப்படுகிறது. அது நமக்குக் கிடைக்காத நிலையில் இம்மடலையே கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் என்கிறோம்.

அமைப்பு
 1. முன்னுரை (வாழ்த்தும் நன்றியும்) 1:1 - 9
 2. திருச்சபையில் பிளவுகள் 1:10 - 4:21
 3. கூடா ஒழுக்கமும் குடும்ப ஒழுக்கமும் 5:1 - 7:40
 4. சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றை உண்ணுதல் 8:1 - 11:1
 5. வழிபாடு 11:2 - 14:40
   -பெண்கள் தலையை மூடிக் கொள்ளுதல்
   -ஆண்டவரின் திருவிருந்து
   -தூய ஆவியார் அருளும் கொடைகள்
 6. உயிர்பெற்றெழுதல் 15:1 - 58
 7. இறைமக்களுக்காக நன்கொடை திரட்டல் 16:1 - 4
 8. முடிவுரை 16:5 - 24


அதிகாரம் 1

1. முன்னுரை
வாழ்த்தும் நன்றியும்
1 கொரிந்து நகரிலுள்ள கடவுளின் திருச்சபைக்கு அவர் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாக அழைக்கப்பட்ட பவுலும் சகோதரராகிய சொஸ்தேனும் எழுதுவது: 2 இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்றுத் தூயோராக்கப்பட்டு இறைமக்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ள உங்களுக்கும், எல்லா இடங்களிலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிக்கையிடும் யாவருக்கும்,3 நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக! இயேசு கிறிஸ்து நமக்குமட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர்.4 கிறிஸ்து இயேசுவின் வழியாக நீங்கள் பெற்றுக்கொண்ட இறையருளை முன்னிட்டு உங்களை நினைத்து என் கடவுளுக்கு என்றும் நன்றி செலுத்துகிறேன்.5 ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பெற்றுச் சொல்வன்மையும் நிறையறிவும் பெற்று, எல்லா வகையிலும் செல்வர்களானீர்கள்.6 மேலும் கிறிஸ்துவைப்பற்றிய சான்று உங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.7 ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்காகக் காத்திருக்கும் உங்களுக்கு அருள்கொடை எதிலும் குறையே இல்லை.8 நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் நீங்கள் குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க அவர் உங்களை இறுதிவரை உறுதிப்படுத்துவார்.9 கடவுள் நம்பிக்கைக்குரியவர்: தம் மகனும் நம் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நட்புறவில் பங்குபெற உங்களை அவர் அழைத்துள்ளார்.

2. திருச்சபையில் பிளவுகள்
10 சகோதர சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்வது இதுவே: நீங்கள் ஒத்தக் கருத்துடையவர்களாய் இருங்கள். உங்களிடையே பிளவுகள் வேண்டாம். ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டிருங்கள்.11 என் அன்பர்களே, உங்களிடையே சண்டை சச்சரவுகள் இருப்பதாகக் குலோயி வீட்டார் எனக்குத் தெரிவித்துள்ளனர்.12 நான் இதைச் சொல்லக் காரணம், உங்களுள் ஒவ்வொருவரும் நான் பவுலைச் சார்ந்துள்ளேன் என்றோ நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன் என்றோ நான் கேபாவைச் சார்ந்துள்ளேன் என்றோ, நான் கிறிஸ்துவைச் சார்ந்துள்ளேன் என்றோ சொல்லிக் கொள்கிறீர்களாம்.13 கிறிஸ்து இப்படிப் பிளவுபட்டுள்ளாரா? அல்லது பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டான்? அல்லது பவுலின் பெயரிலா நீங்கள் திருமுழுக்குப் பெற்றுக்கொண்டீர்கள்?14 கிறிஸ்பு, காயு ஆகியோரைத் தவிர உங்களுள் வேறு எவருக்கும் நான் திருமுழுக்குக் கொடுக்கவில்லை. இதற்காகக் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன்.15 ஆகவே என் பெயரால் திருமுழுக்குப் பெற்றதாக யாரும் சொல்ல முடியாது.16 ஸ்தேவனா வீட்டாருக்கும் நான் திருமுழுக்குக் கொடுத்துள்ளேன். மற்றபடி வேறு எவருக்கும் திருமுழுக்குக் கொடுத்ததாக எனக்கு நினைவு இல்லை.17 திருமுழுக்குக் கொடுப்பதற்கு அல்ல, நற்செய்தியை அறிவிக்கவே கிறிஸ்து என்னை அனுப்பினார். மனித ஞானத்தின் அடிப்படையிலான சொற்களில் இந்நற்செய்தியை அறிவித்தலாகாது. அவ்வாறு அறிவித்தால் கிறிஸ்துவின் சிலுவை பொருளற்றுப் போய்விடும்.

கிறிஸ்துவே கடவுளின் ஞானமும் வல்லமையும்
18 சிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை.19 ஏனெனில், ஞானிகளின் ஞானத்தை அழிப்பேன், அறிஞர்களின் அறிவை வெறுமையாக்குவேன் என்று மறைநூலில் எழுதியுள்ளது.20 இவ்வுலகைச் சார்ந்த ஞானி எங்கே? அறிவாளி எங்கே? வாதிடுவோர் எங்கே? இவ்வுலக ஞானம் மடமை எனக் கடவுள் காட்டிவிட்டாரல்லவா?21 கடவுளுடைய ஞானத்தால் அவரை அறிந்து கொள்ளமுடியும். ஆனால் உலகினர் தம் ஞானத்தால் கடவுளை அறிந்து கொள்ளவில்லை. எனவே மடமை என்று கருதப்பட்ட நற்செய்தியைப் பறைசாற்றியதன் வழியாக நம்பிக்கை கொண்டோரை மீட்கக் கடவுள் திருவுளம் கொண்டார்.22 யூதர்கள் அரும் அடையாளங்களை வேண்டும் என்று கேட்கிறார்கள்: கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள்.23 ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது.24 ஆனால் அழைக்கப்பட்டவர்கள், யூதரானாலும் கிரேக்கரானாலும், அவர்களுக்குக் கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார்.25 ஏனெனில் மனித ஞானத்தைவிட கடவுளின் மடமை ஞானம் மிக்கது: மனித வலிமையைவிட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது.26 எனவே, சகோதர சகோதரிகளே, நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள். மனிதக் கணிப்பின்படி உங்களுள் ஞானிகள் எத்தனைபேர்? வலியோர் எத்தனை பேர்? உயர்குடி மக்கள் எத்தனை பேர்?27 ஆனால் கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்து கொண்டார். அவ்வாறே, வலியோரை வெட்கப்படுத்த, வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார்.28 உலகம் ஒரு பொருட்டாகக் கருதுபவற்றை அழித்து விட அது தாழ்ந்ததாகக் கருதுபவற்றையும் இகழ்ந்து தள்ளுபவற்றையும் கடவுள் தேர்ந்தெடுத்தார்.29 எவரும் கடவுள் முன் பெருமைபாராட்டாதபடி அவர் இப்படிச் செய்தார்.30 அவரால்தான் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். கிறிஸ்துவே கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஞானம். அவரே நம்மை ஏற்புடையவராக்கித் தூயவராக்கி மீட்கின்றார்.31 எனவே மறைநூலில் எழுதியுள்ளவாறு, பெருமை பாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!