Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

சாலமோனின் ஞானம் (ஞானாகமம்)

முன்னுரை

'சாலமோனின் ஞானம்' என்னும் இந்நூல் சாலமோனைப் பற்றிய சில மறைமுக குறிப்புகளைக் கொண்டிருந்தாலும் (காண் 8:9-15; 9:7-8,12), காலத்தாலும் கருத்தாலும் பிந்தியது என்பது உறுதி. பாலஸ்தீனத்துக்கு வெளியே, எகிப்து நாட்டு அலக்சாந்திரியாவில் வாழ்ந்து வந்த ஒரு யூதரால் கி.மு. முதல் நூற்றாண்டின் நடுவில் இது கிரேக்க மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும்; இதுவே பழைய ஏற்பாட்டு நூல்களுள் இறுதியாக எழுத்து வடிவம் பெற்றிருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.

பாலஸ்தீனத்துக்கு வெளியே வாழ்ந்து வந்த யூதர்களுள் சிலர், கிரேக்க மொழி, மெய்யியல், பண்பாடு, வழிபாட்டு முறை, வாழ்க்கை முறை முதலியவற்றின் மீது அளவற்ற நாட்டம் கொண்டதோடு, யூத மறையைவிடக் கிரேக்கர்களின் மறைவான சமயச் சடங்குகள் உயர்ந்தவை என்னும் தவறான எண்ணத்தால் தூண்டப் பெற்று யூத மறையைக் கைவிட்டனர். இவர்கள் யூத மறைக்கு மனம் மாறி வர அழைப்பு விடுப்பதே இந்நூலாசிரியரின் முதன்மை நோக்கம். அதே நேரத்தில், யூதக் கோட்பாடுகளில் பிடிப்போடு இருந்தவர்களை ஊக்கப்படுத்தி உறுதிப்படுத்துகிறார் ஆசிரியர்; விசுவாசத்தில் தளர்ந்து தடுமாற்ற நிலையில் இருந்தவர்களை எச்சரிக்கிறார்; கிரேக்கருடைய சிலை வழிபாட்டின் மூடத்தனத்தை அடையாளம் காட்டுவதோடு, ஆண்டவர் மீது அச்சம் கொள்வதே - அவரது திருச்சட்டத்தின்படி ஒழுகுவதே - உண்மையான, உயரிய ஞானம் என்று கோடிட்டுக் காட்டி, யூத மறையைத் தழுவுமாறு வேற்றினத்தாரைத் தூண்டுகிறார். கிரேக்கருக்கும் கிரேக்கச் சூழலில் வாழ்ந்து வந்த யூதருக்கும் யூத நெறிக் கோட்பாடுகளை விளக்க எழுந்த இந்நூலில் கிரேக்க மெய்யியல், நடை, சொல்லாட்சி முதலியன மிகுதியாகக் காணப்படுகின்றன.

முழு நூலும் இனிய கவிதை நடையில் அமைந்துள்ளது. நூலின் இறுதிப் பகுதி (அதி 10 -19 ) யூதப் போதகர்கள் கையாண்டு வந்த விவிலிய விளக்க முறையான 'மித்ராஷ்' என்னும் இலக்கியவகைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

நூலின் பிரிவுகள்
  1. ஞானமும் மனிதரின் முடிவும் 1 - 5
  2. ஞானத்தின் தோற்றம், இயல்பு, அதை அடையும் வழி 6 - 9
  3. மீட்பு வரலாற்றில் ஞானம் 10 - 19


அதிகாரம் 1

1. ஞானமும் மனிதரின் முடிவும்
நீதியைத் தேடுதலே இறவாமைக்கு வழி
1 மண்ணுலகை ஆள்பவர்களே, நீதியின்மேல் அன்பு செலுத்துங்கள்: நன்மனத்துடன் ஆண்டவரைப் பற்றி நினைந்திடுங்கள்: நேர்மையான உள்ளத்துடன் அவரைத் தேடுங்கள். 2 அவரைச் சோதியாதோர் அவரைக் கண்டடைகின்றனர்: அவரை நம்பினோர்க்கு அவர் தம்மை வெளிப்படுத்துகின்றார்.3 நெறிகெட்ட எண்ணம் மனிதரைக் கடவுளிடமிருந்து பிரித்துவிடும். அவரது ஆற்றல் சோதிக்கப்படும் பொழுது, அது அறிவிலிகளை அடையாளம் காட்டிவிடும்.4 வஞ்சனை நிறைந்த ஆன்மாவில் ஞானம் நுழைவதில்லை: பாவத்திற்கு அடிமையான உடலில் ஞானம் குடிகொள்வதில்லை.5 நற்பயிற்சிபெற்ற உள்ளம் வஞ்சனையினின்று விலகியோடும்: அறிவற்ற எண்ணங்களை விட்டு அகலும்: அநீதி அணுகுகையில் அது நாணி ஒதுங்கும்.6 ஞானம் மனிதநேயமுள்ள ஆவி: ஆயினும் இறைவனைப் பழிப்போரை அது தண்டியாமல் விடாது. கடவுள் அவர்களுடைய உள்ளுணர்வுகளின் சாட்சி: உள்ளத்தை உள்ளவாறு உற்று நோக்குபவர்: நாவின் சொற்களைக் கேட்பவரும் அவரே.7 ஆண்டவரின் ஆவி உலகை நிரப்பியுள்ளது: அனைத்தையும் ஒருங்கிணைக்கும் அந்த ஆவி ஒவ்வொரு சொல்லையும் அறிகின்றது.8 நேர்மையற்றதைப் பேசுவோர் மறைந்திருக்க முடியாது: தண்டனை வேளையில் நீதியினின்று தப்ப முடியாது.9 இறைப்பற்றில்லாதோரின் சூழ்ச்சிகள் நுணுகி ஆராயப்படும்: அவர்களுடைய சொற்கள் ஆண்டவரின் காதுக்கு எட்டும்: அவர்களுடைய நெறிகெட்ட செயல்கள் கண்டிக்கப்படும்.10 விழிப்புடைய காது அனைத்தையும் கேட்கின்றது. முறையீடுகளின் முணுமுணுப்பு செவிக்கு எட்டாமல் போவதில்லை.11 பயனற்ற முணுமுணுப்புப்பற்றி எச்சரிக்கையாக இருங்கள்: பழிச்சொல் கூறாது உங்கள் நாவை அடக்குங்கள். ஏனெனில் மறைவாய்ப் பேசிய எதுவும் விளைவின்றிப் போகாது. பொய் சொல்லும் வாய் ஆன்மாவைக் கொல்லும்.12 நெறிதவறிய வாழ்வால் சாவை வரவேற்றுக்கொள்ளாதீர்கள்: உங்கள் செயல்களாலேயே அழிவை வருவித்துக்கொள்ளாதீர்கள்.13 சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை: வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை.14 இருக்கவேண்டும் என்பதற்காகவே அவர் அனைத்தையும் படைத்தார். உலகின் உயிர்கள் யாவும் நலம் பயப்பவை: அழிவைத் தரும் நஞ்சு எதுவும் அவற்றில் இல்லை: கீழுலகின் ஆட்சி மண்ணுலகில் இல்லை.15 நீதிக்கு இறப்பு என்பது இல்லை.

இறைப்பற்றில்லாதவர்கள் வாழ்வை நோக்கும் முறை
16 இறைப்பற்றில்லாதவர்கள் தங்கள் செயலாலும் சொல்லாலும் இறப்பை வரவழைத்தார்கள்: அதை நண்பனாகக் கருதி அதற்காக ஏங்கினார்கள்: அதனோடு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்: அதனோடு தோழமை கொள்ள அவர்கள் பொருத்தமானவர்களே.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!