Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்

முன்னுரை
ஆசிரியர்

இத்திருமுகத்தைப் பவுல் எழுதினாரா, வேறொருவர் எழுதினாரா என்பது பற்றிக் கருத்து வேறுபாடு உள்ளது. பவுல் இதனை எழுதவில்லை என்பதற்குச் சான்றுகள் உள்ளது போலவே, அவரே எழுதினார் என்பதற்கும் சான்றுகள் உள்ளன. எனினும் அகச் சான்றுகளை வைத்துப் பார்க்கும் போது, பவுல் இதனை நேரடியாக எழுதியிருக்க முடியாது என்று சொல்லத் தோன்றுகிறது. பவுலின் உள்ளக்கிடக்கையை அறிந்து கொண்டு, அவருடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அவர் கருத்துக்களில் ஊன்றிநின்று, திருமுகம் எழுதப்பட்ட காலக்கட்டத்தில் இரண்டாம் வருகை பற்றிப் பவுல் பெயரால் திருமுகமாக எழுதியுள்ளார் எனக் கருத இடமிருக்கிறது. இவ்வாறுஎழுதுவது அந்தக் காலத்தில் முறையாகக் கருதப்பட்டது.

சூழலும் நோக்கமும்

தெசலோனிக்கருக்கு எழுதிய முதலாம் திருமுகம் பல ஐயப்பாடுகளை உருவாக்கிற்று. அவை குறிப்பாக இயேசு கிறிஸ்து மீண்டும் வருதலைப் பற்றியனவாக இருந்தன. முதல் திருமுகத்தில் ஆறுமுறை கிறிஸ்துவின் வருகை பற்றிப் பேசப்பட்டிருந்தது. அது விரைவில் நிகழும் என அத்திருமுகத்தில் சொல்லப்பட்டிருந்தது. இந்தப் பின்னணியில் இறுதி வருகை ஏற்கெனவே நிகழ்ந்து விட்டதென்று சிலர் நினைத்தனர்; வேறு சிலர் அது நெருங்கிவந்துவிட்டது எனக கருதிச் சோம்பித் திரிந்தனர். இக்கருத்துக்களை மாற்றிட இரண்டாம் திருமுகம் தெசலோனிக்கருக்கு எழுதப்பட்டது.

இது எழுதப்பட்ட காலத்தைக் குறிப்பிட்டுச் சொல்வது கடினம். கி.பி. 52-ஆம் ஆண்டுக்கும் 100-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இது எழுதப்பட்டிருக்க வேண்டும்.

உள்ளடக்கம்

இறுதி வருகை ஏற்கெனவே நிகழ்ந்துவிட்டதென்ற அவர்கள் எண்ணத்தை மாற்ற, ஆண்டவரின் இறுதி வருகை நிகழும்முன் கிளர்ச்சி ஏற்படும் என்றும், நெறிகெட்ட மனிதன் தோன்றுவான் என்றும், அவன் கிறிஸ்துவுக்கு எதிராய் இருப்பான் என்றும் திருமுக ஆசிரியர் கூறுகிறார்.

இவ்வருகையை முன்னிட்டுத் தெசலோனிக்காவில் பலர் வேலை செய்யாமல் சோம்பித் திரிந்தனர். அவர்கள் நிலையாய் இருந்து, தாங்கள் கற்றுக்கொண்ட உண்மைகளின்படி வாழப் பணிக்கிறார் ஆசிரியர்; வேலை செய்யாது சோம்பித் திரிவோர் உழைத்து உண்ணுமாறு கட்டளை இடுகிறார்.

அமைப்பு
  1. முன்னுரை (வாழ்த்து) 1:1 - 2
  2. புகழாரம் 1:3 - 12
  3. கிறிஸ்துவின் வருகை குறித்து அறிவுரை 2:1 - 17
  4. கிறிஸ்தவ வாழ்வுக்குப் பரிந்துரை 3:1 - 15
  5. முடிவுரை (இறுதி வாழ்த்து) 3:16 - 18


அதிகாரம் 1

1. முன்னுரை
வாழ்த்து
1 நம் தந்தையாகிய கடவுளுக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் உரிய தெசலோனிக்க திருச்சபைக்குப் பவுலும் சில்வானும் திமொத்தேயுவும் எழுதுவது: 2 நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!

2. புகழாரம்
தீர்ப்பு நாள்
3 சகோதர சகோதரிகளே! உங்கள் பொருட்டுக் கடவுளுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஆம், அவ்வாறு செய்வது தகுதியே. ஏனெனில் நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை ஓங்கி வளருகின்றது: நீங்கள் எல்லாரும் ஒருவருக்கொருவர் செலுத்தும் அன்பு பெருகி வழிகிறது.4 ஆகவேதான் நாங்கள் கடவுளின் சபைகளில் உங்களைக் குறித்துப் பெருமையாகப் பேசி வருகிறோம்: உங்கள் துன்பங்களுக்கிடையே நீங்கள் காட்டிய சகிப்புத்தன்மையையும் இன்னல்களுக்கு இடையே நீங்கள் கொண்டிருந்த மனவுறுதியையும் நம்பிக்கையையும் முன்னிட்டுப் பெருமைப்படுகிறோம்.5 இவை, கடவுளின் தீர்ப்பு நீதியானது என்பதற்கு அறிகுறியாக அமைகின்றன. இவையனைத்தின் விளைவாக நீங்கள் இறையாட்சிக்குத் தகுதியுள்ளவர்களாவீர்கள். இந்த ஆட்சிக்காகவே நீங்கள் துன்புறுகிறீர்கள்.6 ஏனெனில் உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்குத் துன்பத்தையும் துன்புறுத்தப்படும் உங்களுக்குத் துயர் நீக்கி அமைதியையும் எங்களோடு கைம்மாறாக அளிப்பது கடவுளுடைய நீதியன்றே!7 நம் ஆண்டவர் இயேசு வல்லமையுள்ள தம் தூதரோடு வானிலிருந்து வெளிப்படும் போது இப்படி நிகழும்.8 அப்பொழுது அவர் தீப்பிழம்பின் நடுவே தோன்றி, கடவுளை அறியாதவர்களையும் நம் ஆண்டவர் இயேசுவைப்பற்றிய நற்செய்தியை ஏற்காதவர்களையும் தண்டிப்பார்.9 இவர்கள் ஆண்டவருடைய சீர்மிகு மாட்சியைக் காண இயலாது, அவருடைய திருமுன்னிருந்து அகற்றப்பட்டு, முடிவில்லா அழிவைத் தண்டனையாகப் பெறுவர்.10 அந்நாளில் அவர் வரும்பொழுது இறைமக்கள் அவரைப் போற்றிப்புகழ்வர்: நம்பிக்கை கொண்டோர் அனைவரும் வியந்து போற்றுவர். நாங்கள் உங்களுக்கு அளித்த சான்றை நம்பி ஏற்றதினால் நீங்களும் அவ்வாறு செய்வீர்கள்.11 இதற்காகத்தான் நாங்கள் உங்களுக்காக என்றும் இறைவனிடம் வேண்டுகிறோம். நம் கடவுள் தாம் விடுத்த அழைப்புக்கு உங்களைத் தகுதியுள்ளவராக்குவாராக! உங்கள் நல்லெண்ணம் ஒவ்வொன்றையும், நம்பிக்கையால் தூண்டப்படும் ஒவ்வொரு செயலையும் தம் வல்லமையால் நிறைவுறச் செய்வாராக!12 இவ்வாறு நம் கடவுளும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் அளிக்கும் அருளுக்கேற்ப, உங்களால் நம் ஆண்டவராகிய இயேசுவின் பெயருக்கும் அவரால் உங்களுக்கும் மேன்மை உண்டாகுக!


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!