Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

செக்கரியா

அதிகாரம் 2

அளவுநூலைக் குறித்த காட்சி
1 நான் என் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, இதோ, அளவு நுலைக் கையில் பிடித்திருந்த ஒருவரைக் கண்டேன்.2 எங்கே போகிறீர்? என்று நான் அவரை வினவினேன். அதற்கு அவர், எருசலேமை அளந்து, அதன் அகலமும் நீளமும் எவ்வளவு என்பதைக் காணப்போகிறேன் என்றார்.3 என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதர் திரும்பிச் செல்கையில் மற்றொரு தூதர் அவருக்கு எதிரே வந்தார்.4 வந்தவர் முன்னவரிடம் இவ்வாறு சொன்னார்: ஒடிச்சென்று அந்த இளைஞனிடம் நீ சொல்ல வேண்டியது: எருசலேமில் எண்ணிறந்த மனிதர்களும் திரளான கால்நடைகளும் இருப்பதால் அந்நகரம் மதில் இல்லாத ஊர்களைப்போல் இருக்கும்!5 ஏனெனில் அதைச் சுற்றிலும் நானே நெருப்புச் சுவராய் அமைவேன்: அதனுள் உறையும் மாட்சியாய் விளங்குவேன், என்கிறார் ஆண்டவர்.

நாடு கடத்தப்பட்டோர் திரும்பிவர அழைப்பு
6 எழுந்திருங்கள், வடநாட்டிலிருந்து ஓடிவாருங்கள், என்கிறார் ஆண்டவர்: உலகின் நான்கு திசைகளுக்கும் உங்களைச் சிதறடித்தவர் நானே, என்கிறார் ஆண்டவர்.7 பாபிலோனில் குடியிருக்கும் சீயோனே! தப்பிப் பிழைத்துக்கொள்.8 என்னைத் தமது மாட்சிக்கென்று அனுப்பிய ஆண்டவர் உங்களைக் கொள்ளையடித்த வேற்றினத்தாரைக் குறித்து, 'உங்களைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான்' என்கிறார்.9 'இதோ, அவர்களுக்கு எதிராக என் கையை ஓங்கப் போகிறேன்: தங்களுக்குப் பணிவிடை செய்தவர்களுக்கே கொள்ளைப்பொருள் ஆவார்கள்: அப்பொழுது நீங்கள், என்னை அனுப்பியது படைகளின் ஆண்டவர் என்று அறிந்து கொள்வீர்கள்.10 மகளே, சீயோன்! அகமகிழ்ந்து ஆர்ப்பரி: இதோ நான் வருகிறேன்: வந்து உன் நடுவில் குடிகொள்வேன் என்கிறார் ஆண்டவர்.11 அந்நாளில், வேற்றினத்தார் பலர் ஆண்டவரிடம் வந்து சேர்வார்கள்; அவர்கள் அவருடைய மக்களாய் இருப்பார்கள். அவர் உன் நடுவில் தங்கியிருப்பார்; நீங்களும், படைகளின் ஆண்டவரே என்னை உங்களிடம் அனுப்பினார் என்பதை அறிந்து கொள்வீர்கள்.12 ஆண்டவர் யூதாவைப் புனித நாட்டில் தமக்குரிய பங்காக உரிமைச் சொத்தாக்கிக் கொள்வார். எருசலேமை மீண்டும் தேர்ந்துகொள்வார்.13 மானிடரே, நீங்கள் அனைவரும் ஆண்டவர் திருமுன் அமைதியாயிருங்கள்: ஏனெனில் அவர்தம் புனித இடத்திலிருந்து எழுந்தருளினார்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!