Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

ஒசேயா

முன்னுரை

இறைவாக்கினர் ஓசேயா வடநாடான இஸ்ரயேலில் ஆமோசுக்குச் சற்றுப் பின்னர் வாழ்ந்தவர்; சமாரியா வீழ்ச்சியுற்ற கி.மு. 722-க்கு முன் இறைவாக்கு உரைத்தவர்; இஸ்ரயேலரின் சிலை வழிபாட்டைக் கடிந்து கொண்டவர்; அவர்களது கீழ்ப்படியாமையைக் கண்டித்தவர். இவர் கோமேர் என்ற பெண்ணை மணந்து கொண்டார். அவள் அவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து, அவரை விட்டு விலகிச் சென்றாள். அத்தகையவளோடு அவர் கொண்டிருந்த மண உறவைப் பின்னணியாகக் கொண்டு ஓசேயா இறைமக்களின் உண்மையற்ற தன்மையை, கீழ்ப்படியாமையை, நம்பிக்கைத் துரோகத்தை எடுத்தியம்பினார். கடவுளை விட்டு விலகிச் சென்ற அவர்களுக்கு இறைவன் தண்டனை வழங்குவார்; ஆயினும் இறைவனின் பேரன்பு இறுதி வரை நிலைத்திருக்கும்; அம்மக்களை அவர் பக்கம் ஈர்த்துக் கொள்ளும்; அதன் மூலம், முறிந்த உறவு மலரும். இதுவே இவரது நூலின் செய்தியாகும்.

நூலின் பிரிவுகள்
  1. ஓசேயாவின் திருமணமும் இல்வாழ்வும் 1:1 - 3:5
  2. இஸ்ரயேலின் குற்றங்களும் அவற்றுற்குரிய தண்டனைத் தீர்ப்பும் 4:1 - 13:16
  3. மன மாற்றத்திற்கு அழைப்பும் வாக்குறுதியும் 14:1 - 9


அதிகாரம் 1
1 யூதாவின் அரசர்களாகிய உசியா, யோத்தாம், ஆகாசு, எசேக்கியா என்பவர்களின் நாள்களிலும், யோவாசின் மகனும் இஸ்ரயேலின் அரசனுமாகிய எரொபவாமின் நாள்களிலும், பெயேரியின் மகன் ஓசேயாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு இதுவே:
ஒசேயாவின் மனைவி, மக்கள்
2 ஆண்டவர் ஓசேயா வழியாக முதற்கண் பேசியபோது, அவர் அவரை நோக்கி, நீ போய் விலைமகள் ஒருத்தியைச் சேர்த்துக்கொள்: வேசிப் பிள்ளைகளைப் பெற்றெடு: ஏனெனில் நாடு ஆண்டவரை விட்டு விலகி வேசித்தனத்தில் மூழ்கியுள்ளது என்றார்.3 அப்படியே அவர் போய்த் திப்லயிமின் மகளாகிய கோமேரைச் சேர்த்துக்கொண்டார். அவள் கருவுற்று அவருக்கொரு மகனைப் பெற்றெடுத்தாள்.4 அப்போது ஆண்டவர் ஓசேயாவை நோக்கி, இவனுக்கு 'இஸ்ரியேல்' எனப் பெயரிடு: ஏனெனில் இன்னும் சிறிது காலத்தில் நான் இஸ்ரயேலின் இரத்தப் பழிக்காக ஏகூவின் குடும்பத்தாரைத் தண்டிப்பேன்: இஸ்ரயேல் குடும்பத்தின் ஆட்சியை ஒழித்துக் கட்டுவேன்.5 அந்நாளில், நான் இஸ்ரியேல் பள்ளத்தாக்கில் இஸ்ரயேலின் வில்லை முறித்துப்போடுவேன் என்றார்.6 கோமேர் மறுபடியும் கருவுற்றுப் பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள்: அப்போது ஆண்டவர் அவரைப் பார்த்து, இதற்கு 'லோ ருகாமா' எனப் பெயரிடு: ஏனெனில் இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு நான் இனிக் கருணை காட்ட மாட்டேன்: அவர்களை மன்னிக்கவே மாட்டேன்.7 ஆனால் யூதா குடும்பத்தாருக்குக் கருணை காட்டுவேன்: அவர்களின் கடவுளாகிய ஆண்டவராலேயே அவர்களுக்கு விடுதலை கிடைக்கச் செய்வேன்: வில், வாள், போர்க் குதிரைகள், குதிரை வீரர்கள் ஆகியவற்றைக் கொண்டு நான் விடுவிக்கப்போவதில்லை என்றார்.8 அவள் லோருகாமாவைப் பால்குடி மறக்கச் செய்த பின் திரும்பவும் கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.9 அப்போது ஆண்டவர் ஓசேயாவைப் பார்த்து, இவனுக்கு 'லோ அம்மீ' எனப் பெயரிடு: ஏனெனில், நீங்கள் என் மக்கள் அல்ல: நானும் உங்களுடையவர் அல்ல.

இஸ்ரயேலின் ஒருங்கிணைப்பு
10 ஆயினும் இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கை அளக்கவும் எண்ணவும் முடியாத கடற்கரை மணலுக்கு ஒப்பாகும். நீங்கள் என்னுடைய மக்களல்ல என்று அவர்களுக்குக் கூறப்பட்டதற்கு மாறாக, வாழும் கடவுளின் மக்கள் என்று அவர்களுக்குக் கூறப்படும்.11 யூதாவின் மக்களும் இஸ்ரயேலின் மக்களும் ஒன்றாகக் கூட்டிச் சேர்க்கப்படுவர். அவர்கள் தங்களுக்கென ஒரே தலைவனை ஏற்படுத்திக் கொண்டு, நாட்டிலிருந்து புறப்பட்டு வருவார்கள்: இதுவே இஸ்ரயேலின் மாபெரும் நாள்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!