Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 4

இயேசு சோதிக்கப்படுதல்
(மத் 4:1 - 11; மாற் 1:12 - 13)
1 இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு யோர்தான் ஆற்றை விட்டுத் திரும்பினார். பின்னர் அவர் அதே ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.2 அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார். அந்நாள்களில் அவர் ஒன்றும் சாப்பிடவில்லை. அதன் பின் அவர் பசியுற்றார்.3 அப்பொழுது அலகை அவரிடம், ' நீர் இறைமகன் என்றால் இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும் ' என்றது.4 அதனிடம் இயேசு மறுமொழியாக, ' மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை ' என மறைநூலில் எழுதியுள்ளதே ' என்றார்.5 பின்பு அலகை அவரை அழைத்துச் சென்று உலகத்தின் அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப்பொழுதில் அவருக்குக் காட்டி,6 அவரிடம், ' இவற்றின்மேல் முழு அதிகாரத்தையும் இவற்றின் மேன்மையையும் உமக்குக் கொடுப்பேன். இவை யாவும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன; நான் விரும்பியவருக்கு இவற்றைக் கொடுப்பேன்.7 நீர் என்னை வணங்கினால் அனைத்தும் உம்முடையவையாகும் ' என்றது.8 இயேசு அதனிடம் மறுமொழியாக, ' ″ உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணி செய்வாயாக ″ என்று மறைநூலில் எழுதியுள்ளது ' என்றார்.9 பின்னர் அது அவரை எருசலேமுக்கு அழைத்துச் சென்று கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, ' நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும்;10 ' உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார் ' என்றும்11 ' உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள் ' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது ' என்றது.12 இயேசு அதனிடம் மறுமொழியாக, ' ″ உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம் ″ என்றும் சொல்லியுள்ளதே ' என்றார்.13 அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்தபின்பு ஏற்ற காலம் வரும்வரை அவரைவிட்டு அகன்றது.

4. கலிலேயப் பணி
கலிலேயப் பணியின் தொடக்கம்

(மத் 4:12 - 17; மாற் 1:14 - 15)
14 பின்பு இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது.15 அவர் அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்து வந்தார். எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினர்.

நாசரேத்தில் இயேசு புறக்கணிக்கப்படுதல்
(மத் 13:53 - 58; மாற் 6:1 - 6)
16 இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார்.17 இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது;18 ' ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்19 ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார். '20 பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன.21 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, ' நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று ' என்றார்.22 அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, ' இவர் யோசேப்பின் மகன் அல்லவா? ' எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.23 அவர் அவர்களிடம், ' நீங்கள் என்னிடம், ' மருத்துவரே உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும் ' என்னும் பழமொழியைச் சொல்லி, ' கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும் ' எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள்.24 ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.25 உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர்.26 ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார்.27 மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழு நோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது ' என்றார்.28 தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங் கொண்டனர்;29 அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். 30 அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.

பேய் பிடித்தவரைக் குணப்படுத்துதல்
(மாற் 1:21 - 28)
31 பின்பு இயேசு கலிலேயாவிலுள்ள கப்பர்நாகும் ஊருக்குச் சென்று, ஓய்வு நாள்களில் மக்களுக்குக் கற்பித்து வந்தார்.32 அவருடைய போதனையைக் குறித்து அவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் அதிகாரத்தோடு கற்பித்தார்.33 தொழுகைக் கூடத்தில் தீய ஆவியான பேய் பிடித்திருந்த ஒருவர் இருந்தார்.34 அவரைப் பிடித்திருந்த பேய், ' ஐயோ! நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர் ' என்று உரத்த குரலில் கத்தியது.35 ' வாயை மூடு, இவரை விட்டு வெளியே போ ' என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது பேய் பிடித்தவரை அவர்கள் நடுவே விழச்செய்து, அவருக்கு ஒரு தீங்கும் இழைக்காமல் பேய் அவரைவிட்டு வெளியேறிற்று.36 எல்லாரும் திகைப்படைந்து, ' எப்படிப் பேசுகிறார், பாருங்கள்! அதிகாரத்தோடும் வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார்; அவையும் போய்விடுகின்றனவே! ' என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டனர்.37 அவரைப்பற்றிய பேச்சு சுற்றுப்புறமெங்கும் பரவியது.

சீமோன் பேதுருவின் மாமியாரை இயேசு குணமாக்கலும் இயேசு பலருக்குக் குணமளித்தலும்
(மத் 8:14 - 17; மாற் 1:29 - 34)
38 பின்பு இயேசு தொழுகைக் கூடத்தைவிட்டு, சீமோன் வீட்டிற்குள் சென்றார். சீமோனின் மாமியார் கடுங்காய்ச்சலால் துன்புற்ற நிலையில் இருந்தார். அவர்கள் அவருக்காக இயேசுவிடம் வேண்டினார்கள்.39 இயேசு அவரருகில் நின்று, காய்ச்சலைக் கடிந்துகொள்ள அது அவரைவிட்டு நீங்கிற்று. உடனே அவர் எழுந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.40 கதிரவன் மறையும் நேரத்தில், எல்லாரும் தங்களிடையே பற்பல பிணிகளால் நலம் குன்றி இருந்தோரை அவரிடம் கூட்டிவந்தார்கள். அவர் ஒவ்வொருவர்மேலும் தம் கைகளை வைத்து அவர்களைக் குணமாக்கினார்.41 பேய்களும், ' நீர் இறைமகன் ' என்று கத்திக்கொண்டே பலரிடமிருந்து வெளியேறின. அவர் மெசியா என்று பேய்கள் அறிந்திருந்தபடியால், அவர் அவற்றை அதட்டி, பேசவிடாமல் தடுத்தார்.

ஊர்கள் தோறும் நற்செய்தி முழக்கம்
( மாற் 1:35 - 39)
42 பொழுது விடியும் வேளையில் இயேசு தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். திரளான மக்கள் அவரைத் தேடிச் சென்றனர்; அவரிடம் வந்து சேர்ந்ததும் தங்களைவிட்டுப் போகாதவாறு அவரைத் தடுத்து நிறுத்தப் பார்த்தனர்.43 அவரோ அவர்களிடம், ' நான் மற்ற ஊர்களிலும் இறையாட்சியைப் பற்றி நற்செய்தி அறிவிக்க வேண்டும்; இதற்காகவே நான் அனுப்பப்பட்டிருக்கிறேன் ' என்று சொன்னார்.44 பின்பு அவர் யூதேயாவிலுள்ள தொழுகைக்கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றிவந்தார்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!