Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

எசேக்கியேல்

அதிகாரம் 2

கடவுள் எசேக்கியேலை இறைவாக்குரைக்க அழைத்தல் ..............தொடர்ச்சி
1 அவர் என்னை நோக்கி, மானிடா! எழுந்து நில், உன்னோடு பேசுவேன் என்றார்.2 அவர் என்னோடு பேசுகையில் ஆவி என்னுள் புகுந்து என்னை எழுந்து நிற்கச் செய்தது: அப்போது அவர் என்னோடு பேசியவற்றைக் கேட்டேன்.3 அவர் என்னிடம், மானிடா! எனக்கெதிராகக் கிளர்ச்சி செய்யும் இனத்தாராகிய இஸ்ரயேல் மக்களிடம் நான் உன்னை அனுப்புகிறேன். இன்றுவரை அவர்களும் அவர்களுடைய மூதாதையரும் எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்து கலகம் செய்துள்ளனர் என்றார்.4 வன்கண்ணும் கடின இதயமும் கொண்ட அம்மக்களிடம் நான் உன்னை அனுப்புகிறேன். நீ அவர்களிடம் போய், 'தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே' என்று சொல்.5 கலக வீட்டாராகிய அவர்கள், செவி சாய்த்தாலும் சாய்க்காவிட்டாலும், தங்களிடையே ஓர் இறைவாக்கினர் வந்துள்ளார் என்பதை அறிந்து கொள்ளட்டும்.6 மானிடா! நீ அவர்களுக்கு அஞ்சாதே. அவர்களின் சொற்களைக் கேட்டு நடுங்காதே. முட்புதர்களும் நெருஞ்சில்களும் உன்னைச் சூழ்ந்திருந்தாலும், தேள்களுடன் நீ வாழ்ந்தாலும், அவர்களின் சொற்களுக்கு அஞ்சாதே. அவர்கள் கலகம் செய்யும் வீட்டாராய் இருப்பினும் அவர்களின் பார்வையைக் கண்டு நடுங்காதே.7 அவர்கள் செவி சாய்த்தாலும் சாய்க்காவிட்டாலும் நீ என் சொற்களை அவர்களுக்கு எடுத்துக் கூறு. அவர்களோ கலகம் செய்வோர்.8 நீயோ மானிடா! நான் உனக்குச் சொல்வதைக் கேள். அந்தக் கலக வீட்டாரைப் போல் நீயும் கலகக்காரனாய் இருந்துவிடாதே. உன் வாயைத் திறந்து நான் உனக்குத் தருவதைக் தின்று விடு என்றார்.9 அப்போது என்னை நோக்கி ஒரு கை நீள்வதைக் கண்டேன். அதில் சுருளேடு ஒன்று இருந்தது.10 அவர் அச்சுருளேட்டை என்முன் விரித்தார். உள்ளும் புறமும் எழுதப்பட்டிருந்த அதில் கதறல்களும் புலம்பல்களும், கேடுகளும் எழுதப்பட்டிருந்தன.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!