Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

மலாக்கி

முன்னுரை

மலாக்கி என்னும் இறைவாக்கு நூல் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் எருசலேம் கோவில் மீண்டும் கட்டியெழுப்பட்டதற்குப் பின் தோன்றியது. குருக்களும் மக்களும் சமயக் கடமைகளில் தவறினர்; அவர்கள் ஆண்டவருக்குச் சேர வேண்டிய காணிக்கையை முறைப்படி செலுத்தவில்லை; அவர்தம் கட்டளைகளைக் கடைபிடிக்காது, அவரை அவமதித்தனர்; அவரது திருப்பெயரைக் களங்கப்படுத்தினர். எனவே ஆண்டவர் தம் மக்களுக்குத் தண்டனை வழங்கவும் அவர்களைத் தூய்மைப்படுத்தவும் வருவார்; அவரது வருகைக்கு முன் அவரது வழியை ஆயத்தம் செய்யவும் அவரது உடன்படிக்கை பற்றி எடுத்துரைக்கவும் தம் தூதரை அனுப்புவார் என்பதே இந்நூலின் செய்தியாகும்.

நூலின் பிரிவுகள்
  1. இஸ்ரயேலரின் குற்றங்கள் 1:1 - 2:16
  2. கடவுளின் தண்டனைத் தீர்ப்பும் இரக்கமும் 2:17 - 3:23


அதிகாரம் 1
1 மலாக்கி வாயிலாக இஸ்ரயேலுக்கு ஆண்டவர் உரைத்த வாக்கு:
இஸ்ரயேல் மக்கள் மேல் ஆண்டவரின் அன்பு
2 உங்களுக்கு நான் அன்புகாட்டினேன் என்று ஆண்டவர் சொல்கிறார். நீங்களோ, எங்களுக்கு நீர் எவ்வாறு அன்புகாட்டினீர்? என்று கேட்கிறீர்கள். யாக்கோபுக்கு ஏசா உடன்பிறப்புதான்! ஆயினும் யாக்கோபுக்கன்றோ நான் அன்புகாட்டினேன்.3 ஆனால் ஏசாவை வெறுத்தேன், அவனது மலைநாட்டைப் பாழாக்கினேன். அவனது உரிமைச்சொத்தைப் பாலைநிலத்துக் குள்ளநரிகளிடம் கையளித்து விட்டேன் என்கிறார் ஆண்டவர். நாங்கள் அழிக்கப்பட்டோம்: ஆனாலும் பாழடைந்தவற்றை மீண்டும் கட்டியெழுப்புவோம்.4 எங்கள் நகர்கள் அழிக்கப்பட்டன; ஆனால் அவற்றை நாங்கள் மீண்டும் கட்டியெழுப்புவோம்" என்று ஏதோமியர் கூறுவரேயானால், படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: "அவர்கள் கட்டியெழுப்பட்டும்; நான் அவற்றைத் தகர்த்துவிடுவேன். தீய நாட்டினர் என்றும், ஆண்டவரின் கடும்சினத்திற்கு என்றென்றும் இலக்கான இனம் என்றும் அவர்கள் அழைக்கப் படுவார்கள். 5 உங்கள் கண்களாலேயே இதைக் காண்பீர்கள்: கண்டு இஸ்ரயேலின் எல்லைக்கு அப்பாலும் ஆண்டவர் மாட்சி மிக்கவராய் இருக்கிறார் என்று சொல்வீர்கள்.

கண்டனக் குரல்
6 "மகன் தன் தந்தைக்கு மதிப்புத் தருவான்; பணியாளன் தன் தலைவனுக்கு மரியாதை செலுத்துவான். நான் தந்தையானால் எனக்குரிய மதிப்பு எங்கே? நான் தலைவனானால் எனக்கு நீங்கள் அஞ்சாதது ஏன்?" என்று தமது பெயரை அவமதிக்கும் குருக்களாகிய உங்களைப் படைகளின் ஆண்டவர் கேட்கிறார். நீங்களோ "உமது பெயரை எவ்வாறு அவமதித்தோம்" என்கிறீர்கள். 7 என் பலிபீடத்தின் மேல் தீட்டான உணவைப் படைத்து என்னை அவமதித்தீர்கள். நீங்களோ எவ்வாறு நாங்கள் உம்மைக் களங்கப்படுத்தினோம் என்கிறீர்கள். ஆண்டவரின் பலிபீடத்தை அவமதிக்கலாம் என்றல்லவோ நினைக்கிறீர்கள்!8 குருடானவற்றைப் பலியிடுகிறீர்களே, அது தவறில்லையா? நொண்டியும் நோயுமாய்க் கிடந்தவற்றைப் பலியிடக் கொண்டு வருகிறீர்கள். அது குற்றமில்லையா? அவற்றை உன் மாநிலத் தலைவனுக்குக் கொடுத்துப் பார். அவன் உன்னைக் குறித்து மகிழ்ச்சியடைவானோ? உனக்கு ஆதரவு அளிப்பானோ?" என்கிறார் படைகளின் ஆண்டவர். 9 இப்பொழுது இறைவன் நம்மீது இரக்கம் காட்டுமாறு அவர் திருமுன் இறைஞ்சி நில்லுஙகள். நீங்கள் இத்தகைய காணிக்கையைக் கொடுத்திருக்க உங்களுக்குள் யாருக்கேனும் அவர் ஆதரவு அளிப்பாரோ? என்கிறார் படைகளின் ஆண்டவர்.10 என் பலிபீடத்தின்மேல் நீங்கள் வீணாகத் தீ மூட்டாதவாறு எவனாகிலும் கோவில் கதவை மூடினால் எத்துணை நன்று: உங்களை எனக்குப் பிடிக்கவில்லை என்கிறார் படைகளின் ஆண்டவர். உங்கள் கையிலிருந்து காணிக்கை எதுவும் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.11 கதிரவன் தோன்றும் திசை தொடங்கி மறையும் திசைவரை வேற்றினத்தாரிடையே என் பெயர் புகழ்மிக்கது. எவ்விடத்திலும் என் பெயருக்குத் தூபமும் தூய காணிக்கையும் செலுத்துப்படுகின்றன. ஏனெனில் வேற்றினத்தாரிடையே என் பெயர் புகழ் மிக்கதே என்கிறார். படைகளின் ஆண்டவர்.12 நீங்களோ நம் தலைவரது பலிபீடம் தீட்டுப்பட்டது. அதன்மேல் வைத்துள்ள பலியுணவு அருவருப்புக்குரியது என்று நினைக்கும்பொழுது என் பெயரைக் களங்கப்படுத்துகிறீர்கள்.13 'எவ்வளவு தொல்லை!' என்று அதைப்பற்றி இழிவாய்ப் பேசுகிறீர்கள்", என்கிறார் படைகளின் ஆண்டவர். "கொள்ளையடித்ததையும், நொண்டியானதையும், நோயுற்றதையும் கொண்டு வருகிறீர்கள். இவற்றைக் காணிக்கை எனக் கொண்டு வருகிறீர்கள். உங்கள் கையிலிருந்து அதை நான் ஏற்றுக் கொள்வேனோ?" என்று கேட்கிறார் ஆண்டவர். 14 தன் மந்தையில் ஊனமற்ற கிடாய் இருக்கையில் ஊனமுற்ற ஒன்றைப் பொருத்தனையாகத் தலைவராகிய ஆண்டவருக்குப் பலியிடும் எத்தன் சபிக்கப்படுவானாக. நானே மாவேந்தர், என்கிறார் படைகளின் ஆண்டவர்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!