அருளினால் [கிருபையால்] நிலைநிற்கிறோம்

கடவுளின் அருளினால் நிலைநிற்க அழைக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் கிறிஸ்து இயேசுவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள்.
இந்த உலகத்தில் வாழும் நாம் ஒவ்வொரு நாளும் ஆண்டவரின் கிருபையால் வாழ்கிறோம். அவருடைய நிறைவில் இருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம். யோவான் 1:16. வானதூதர் மரியாளுக்கு தோன்றி அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார், என்று வாழ்த்தினார். லூக்கா 1:28. இந்த அருளைப்பெற நாமும் அன்னை மரியாளைப் போல ஆண்டவரின் அடிமையாக ஆகவேண்டும். அப்பொழுது நமக்கும் அவருடைய கண்களில் அருள் கிடைக்கும்.
கடவுள் நம்முடைய தகுதி, படிப்பு, செல்வாக்கு இவற்றை பார்த்து கிருபை அளிப்பதில்லை. நம் உள்ளத்தையும்,எண்ணத்தையும் பார்த்தே நமக்கு கிருபை அளிக்கிறார். அவர் நிறைவேற்றிய மீட்பு
செயலின்மூலமும்,அவருடைய அருளாலும் இலவசமாய் அவருக்கு ஏற்புடையவர்களாய் ஆக்கப்படுகிறோம். ரோமர் 3 :24. இலவசமாய் கிடைத்தது தானே என்று நாம் அலட்சியம் செய்யாமல் அவருக்கு பயந்து அவரின் வாக்குகளை காத்து நடப்போம்.
ஆதாம் செய்த பாவத்தினால் தண்டனை வந்தது.ஆனால் நம் எல்லோருடைய பாவத்துக்கும் கிடைத்ததோ அருள் கொடையாக வந்த விடுதலை. ரோமர் 5 :16. ஆதாமினால் இறந்த நாம் இயேசுகிறிஸ்துவின் மரணத்தின் மூலம் மீட்கப்பட்டு வாழ்வுபெற்று பரலோகத்தில்
ஆட்சி செலுத்த உள்ளோம்.ஏனெனில் பாவம் பெருகிய நம்மிடத்தில் ஆண்டவரின் அருள் பொங்கி வழிகிறது. ரோமர் 5 :20. அவரின் வழியாய் அருள் ஆட்சி செய்கிறது. அந்த அருள்தான் நம்மை கடவுளுக்கு ஏற்புடையவர்களாய் செய்து நிலைவாழ்வு பெற வழிவகுக்கிறது.
ஆகையால் கிருபையை பெற்ற நாம் பாவத்தில் நிலைநிற்கலாமா? வேண்டாம்.பிறகு பாவத்தின் சம்பளம் மரணமாகிவிடும். ரோமர் 6:1; 23 . நாம் ஒவ்வொருவரும் கடவுளின் மாறாத அருளில் நிலைத்து நின்று வெற்றிவாகை சூடுவோம்.நாம் நம் தாயின் வயிற்றில் இருந்த
பொழுதே கடவுள் நம்மை அவருக்கென அழைத்து அவரின் அருளால் நிரப்பியுள்ளார்.       கலாத்தியர் 1:15. அவரின் அருளைப்பெற்று அவரோடு இணைந்து அவரோடு உயிர்த்தெழவும் விண்ணுலகில் அவரோடு அமரவும் நம்மை ஒப்புக்கொடுத்து அவரையே பற்றிக்கொள்வோம்.
அன்பானவர்களே! இயேசுகிறிஸ்துவோடு இணைந்த நிலையில் ஏற்படும் நம்பிக்கையோடும், அன்போடும் நம் ஆண்டவரின் அருளை அளவின்றி பெற்று வாழ்ந்து மகிழ்ந்திருப்போம். இதை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஆண்டவர் அதிகமான அருளை தரவேண்டுமாய்
நானும் விரும்பி வேண்டுகிறேன்.
ஜெபம்:
அன்பின் இறைவா!எங்கள் இதயத்தில் வாழ்பவரே உம்மை துதிக்கறோம். ஸ்தோத்தரிக்கிறோம். இந்த பொல்லாத உலகத்தில் ஒவ்வொரு நாளும் உமது கிருபையால் அருளால் நிலைநிற்க உதவி செய்யும். நீர் உதவி செய்வதால்தான் நாங்கள் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இந்த நன்றியை மறவாமல் எல்லாவற்றிலும் உமக்கு பிரியமானபடி வாழ சொல்லித்தாரும். உமது திருவுளசித்தப்படி எங்களை வழி நடத்தி காத்து கொள்ளும். எல்லா மகிமையும் உம்  ஒருவருக்கே உண்டாகட்டும்.  ஆமென்!! அல்லேலூயா!!!.

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.