குணமாக்கும் அன்பு

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய  நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள்.
அன்பானவர்களே! இந்த காலச் சூழ்நிலையில் நாம் சில சமயத்தில் பலவிதமான நோயினால் மனமும், உள்ளமும், உடலும் சோர்ந்து போய் எத்தனையோ டாக்டரிடம் காண்பித்தும் குணமாகாமல் துன்பத்தில் கலங்கி தவிக்கிறோம். சுகமளிக்கும் ஆண்டவர் நம்மோடு இருப்பதை அநேக வேளைகளில் மறந்து யார் யாரையோ நாடித்தேடிச்சென்று நம் பணத்தை இழந்து, நிம்மதியை இழந்து தவிக்கிறோம். வேதத்தில் வாசிக்கும் பொழுது நிறைய சம்பவங்கள் இதைக்குறித்து நமக்காக நம் விசுவாசத்தையும், நம்பிக்கையும் இழந்து போகாதபடிக்கு எழுதப்பட்டுள்ளது. 12 வருஷம் உதிரப்போக்கினால் கஷ்டப்பட்ட ஒரு பெண் தன் நம்பிக்கையினால் நான் சென்று அவரின் வஸ்திரத்தின் ஓரத்தையாவது தொட்டு சுகம் பெற்றுக்கொள்வேன் என்று நம்பி, அதே நம்பிக்கையோடு ஆண்டவரின் வஸ்திரத்தை
தொட்டு உதிரப்போக்கில் இருந்து குணமானதை வாசிக்கிறோம். அந்த பெண்ணுக்கு தான் எத்தனை நம்பிக்கை பாருங்கள். நாமும் அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்திக்கொள்வோம். என்ன வியாதி
யாய் இருந்தாலும் சரி அதிலிருந்து விடுபட நம் ஆண்டவரிடம் நம்பிக்கையோடு கேட்டு அற்புத சுகத்தை பெற்றுக்கொள்வோம். [மத்தேயு 9:20]  [மாற்கு 5:25]   [லூக்கா8:43,44.]
நம்முடைய ஆண்டவரிடத்தில் எந்தவித பாகுப்பாடும் கிடையாது. யார் அவரை முற்றிலும் நம்பி அவரிடத்தில் கேட்கிறோமோ அத்தனை பேருக்கும் விடுதலை உண்டு. இதை வாசிக்கும் உங்களில் யாராவது ஏதோ ஒரு வியாதினால் கஷ்டப்பட்டாலும் மனம் கலங்காமல் ஆண்டவரிடம் கேளுங்கள். கேட்கிற யாவரும் பெற்றுக்கொள்வோம். ஏனெனில் நம்முடைய வியாதிலிருந்து குணப்பட அவர் சிலுவையில் தம் இரத்தத்தை சிந்தியுள்ளார் என்பதை மறக்க வேண்டாம். அவருடைய காயங்களால் நாம் குணமாகிறோம். [ஏசாயா 53:5] [1 பேதுரு 2:24]
ஆண்டவரிடத்தில் இருந்து புறப்பட்டு வரும் ஒவ்வொரு வார்த்தையும், வல்லமை உள்ளது, மகத்துவமானது. அப்பிடியிருக்க நாம் கலங்க வேண்டிய தேவையில்லை. மரித்து அடக்கம் பண்ணப்பட்ட லாசருவை 4 நாள் கழித்து உயிரோடு எழுப்பவில்லையா? [யோவான் 11:44] லாசருக்காக கண்ணீர் விட்ட தேவன் நமக்காகவும் கண்ணீர் விடுகிறார். அவரிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வர் என்று [யோவான்11:25,26] அவரிடத்தில் நம்பிக்கை கொள்வோர்
என்றுமே சாகமாட்டார்கள்.
எகிப்தியருக்கு வந்த ஒரு வியாதியும் நமக்கு வராமல் இருக்க  அவரை உறுதியோடு பிடித்துக்கொள்வோம். அவர் வாயிலிருந்து புறப்பட்டு வரும் ஒவ்வொரு வார்த்தையாலும் நாம் பிழைப்போம். பார்வோனை போன்று மனதை கடினப்படுத்தாமல் [10 அதிசயங்களை
கண்டும்] இஸ்ரவேல் ஜனங்களைப் போல் முறுமுறுக்காமல் நமக்கு நியமித்திருக்கிற பாதையில் பொறுமையோடும், அன்போடும் ஓடி ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்று அவரின் நாமத்தை மகிமைப்  படுத்துவோம்.
ஆண்டவர் அளிக்கும் மாபெரும் விருந்தில் நாம் பங்கு பெறுவோம். சாவை ஒழித்துவிடுவார். எல்லா முகங்களிலிருந்து கண்ணீரை துடைத்து விடுவார். நமக்கு ஏற்பட்ட நிந்தையை அகற்றிவிடுவார். இதை ஆண்டவரே சொல்கிறார். இவரே நம் கடவுள். இவருக்கென்றே
நாம் காத்திருப்போம், இவரே நம்மை விடுவிப்பார். இவர் தரும் மீட்பில் நாம் அனைவரும் மகிழ்ந்து அக்களிப்போம். [எசாயா25:8,9]
ஜெபம்:
அன்பின் இறைவா! உமது நிழலில் தங்கியும்,உமது பாதுக்காப்பில் வாழவும் எங்களுக்கு உதவி செய்யும். உமது சிறகுகளால் எங்களை மூடிக்கொள்ளும். இருளில் உலாவும் கொள்ளை நோயுக்கும் நண்பகலில் தாக்கும் கொடிய வாதைக்கும் நாங்கள் அஞ்சாமல் எங்கள் விசுவாசத்தில் அவற்றை ஜெயிக்க அருள் புரியும். எந்த தீங்கும் நேரிடலாமலும், வாதை எங்களை ஒருபோதும் நெருங்காமலும், எங்களை காக்கும்படி உமது தூதர்களுக்கு நீர் கட்டளை இட்டு எங்களை எல்லா வியாதிலிருந்தும் காப்பாற்றி உமது அன்பை நிலைத்தோங்க செய்வதற்காய் உமக்கு நன்றி செலுத்துகிறோம். உம்மையே போற்றி,புகழ்ந்து மகிமைப்படுத்தி,ஆராதிக்கிறோம்.
ஆமென்!! அல்லேலூயா!!!.
(Written by : Sara, MyGreatMaster.com)

You may also like...

Leave a Reply

%d bloggers like this: