மனதுருகும் நம் ஆண்டவர்

பிரியமான ஒவ்வொருவருக்கும் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின்  நல்வாழ்த்துக்கள்.
ஆண்டவராகிய இயேசு திரண்டிருந்த மக்களை பார்த்து அவர்கள்மேல்  மனதுருகி அநேகரை நோயிலிருந்து விடுதலையாக்கினார். மத்தேயு 14:14. என்று வாசிக்கிறோம். இன்றும் நீங்கள் யாராவது நோயினால் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கீர்களா? கவலைப்பட வேண்டாம். இதோ
உங்கள் மேல் மனதுருகும் நம் ஆண்டவர் எல்லா நோயிலிருந்தும் விடுவித்து காக்க வல்லவராய் இருக்கிறார்.
உங்கள்மேல் அன்பும், பரிவும் காட்ட யாரும் இல்லையே என்று தவிக்கிறீர்களா? மனம் கலங்காதீர்கள். உங்களை நேசிக்க அன்பும் பரிவும், காட்ட நம் ஆண்டவர் உங்கள் அருகில் நிற்கிறார். அவரை நீங்கள் உங்கள் முழு உள்ளத்தோடு அழைத்தால் உங்களுக்கு உதவ ஆவலோடு காத்திருக்கிறார், அழாதீர்கள் என்று கூறுகிறார். லூக்கா 7:13 . அதுமட்டுமல்ல உங்களுக்கு கருணை காட்டவும், உங்களுக்கு  இரங்குமாறு எழுந்தருள்வார். ஏனெனில் அவர் நீதியின் கடவுள்.
அவருக்கு காத்திருப்போர் நற்பேறு பெறலாம். எசாயா 30:18 .
மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்போ நிலைசாயாது: என் சமாதான உடன்படிக்கையோ அசைவுறாது என்று சொல்கிறார் நம்மீது மனதுருகும் தேவன். எசாயா 54:10. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியரோடு செய்த
உடன்படிக்கையின் பொருட்டு நம்மை அழிக்கவோ, தம் திருமுன்னின்று தள்ளிவிடவோ இன்றுவரை அவர் மனம் ஒப்பவில்லை. நமக்கு கருணை காட்டவே காத்திருக்கிறார்.
2 அரசர்கள் 13 :23 .
ஆனால் நம்மிடம் இருந்து ஒன்றை எதிர்பார்க்கிறார். உங்கள் வேற்றுதெய்வங்களை உங்களிடம் இருந்து அகற்றி ஆண்டவருக்கு ஏற்றவகையில் அவரையே நம்பி அன்பு கொள்வீர்களா? நீதித்தலைவர்கள் 10:16. நீங்கள் அவரையே பற்றிக்கொள்ளும் பொழுது ஒரு தாய்போல் உங்களை அரவணைத்து எல்லா பாடுகளையும் நீக்கி நல்ல உடல் சுகத்தையும், ஆறுதலையும், தேறுதலையும் கொடுப்பார் என்பதில் எந்தவித அச்சமும் இல்லை. அவர்மீது நம்பிக்கை வைத்து
அவரை உறுதியாய் பற்றிக்கொண்டவர்களை அமைதியால் காப்பார்.  ஏசாயா 26:3 .
ஜெபம்:
யாவே கடவுளாம் யேகோவா தேவனே! இறைவனாகிய கர்த்தாவே! இருக்கிறவராகவே இருப்பவரே! நானே ஆண்டவர் என்பவரே யாவே நிசீ பலிபீடமானவரெ! நலம் நல்கும் ஆண்டவரே!இங்கு இருக்கிறார் என்னும் பெயர் பெறும் ஆண்டவரே! என்னுடைய மலையில் பார்த்துக்கொள்ளப்படும் என்று வாக்களித்தவரே! சர்வ வல்லவரே! எங்களைக் காண்பவரே!இம்மட்டும் எங்களுக்கு உதவி செய்தவரே! தேவனாய் எங்களோடு இருப்பவரே! எங்கள் தெய்வமே!
இயேசுவே! உன்னதரே! தூய ஆவியே! தேவ மகிமையே! துணையாளரே கிறிஸ்துவாய் எங்களுக்குள் வாழ்பவரே! உம்மை போற்றுகிறோம், ஆராதிக்கிறோம், புகழ்கிறோம். ஆயிரமாயிரம் நாமங்கள் கொண்ட நீர் ஒருவரே இயேசுகிறிஸ்து,  உமக்கு கோடான கோடி துதி கணம்
மகிமை உண்டாகட்டும். ஆமென்!!அல்லேலூயா!!!

You may also like...

Leave a Reply

%d bloggers like this: