தூய [பரிசுத்த] ஆவியால் நிரம்புவோம்.

அன்பார்ந்த தெய்வ ஜனங்களே! நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்து வளர்ந்து திருமுழுக்கு பெற்று தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டார். என்று லூக்கா 4 :1 ல் வாசிக்கிறோம். கடவுளின் பிள்ளையாய் வந்த அவரே தூய ஆவியை பெற்றுக்கொண்ட பின்தான்
ஊழியத்தில் ஈடுபட்டார். ஆண்டவராகிய அவருக்கே தூய ஆவி தேவைபட்டது என்றால் நாம் ஒவ்வொருவரும் அதைக் கேட்டு பெற்றுக்கொள்வது எத்தனை அவசியமானது என்று நாம் ஒவ்வொருவரும் புரிந்து செயல்பட வேண்டும்.
பரிசுத்த ஆவி நமக்கு கிடைக்குமா? என்று யோசிக்கிறீர்களா? நாம் நமது ஆண்டவரிடம் கேட்டால் நிச்சயம் நமக்கு தருவார். ஏனெனில் கேட்டவர் எல்லாரும் பெற்றுக்கொள்வர். தட்டுவோருக்கு திறக்கப்படும். நீங்கள் யாராவது உங்கள் பிள்ளை மீனை கேட்டால் பாம்பை கொடுப்பீர்களா?
அல்லது முட்டையை கேட்டால் தேளைக் கொடுப்பீர்களா? நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகளை கொடுக்க வேண்டும் என்று இருக்கும்பொழுது ஆண்டவர் தூய ஆவியை நமக்கு கொடுக்காமல் இருப்பாரா? தூய ஆவியை கொடுப்பது எத்தனை உறுதி.  லூக்கா 11ம் அதிகாரம் 9 லிருந்து 13 வரை வாசிக்கலாம்.
தூய ஆவியை நீங்கள் பெற்றுக்கொள்ளும்பொழுது உங்கள் வாழ்க்கையே தலைகீழாக மாறும். நீங்கள் பேசவேண்டியதை பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு போதித்து நடத்துவார். அதுமட்டுமல்ல கடவுளுடைய வல்லமையை நாமும் பெற்றுக்கொள்வோம்.
நாம் இவ்வாறு தூய ஆவியை பெற்றுக்கொண்டால் ஆவியானவர்  நம்மை வரங்களினாலும், ஆசீர்வாதங்களினாலும் நிரப்புவார். நம்முடைய அறிவோ, புத்தியோ, ஆவியானவருக்கு தேவையில்லை. நாம் எப்படிபட்டவர்களாய் இருந்தாலும் ஆவியானவர் நம்மை
நிரப்பும்பொழுது நாம் முற்றிலும் மற்றவர்களுக்கு பிரயோஜனமாக வாழும்படி கடவுள் செய்வார். நம் செயல்பாடுகளை மற்றவர்கள் கண்டு திகைப்பார்கள். இது எப்படி நடந்தது என்று ஆச்சரியப்படுவார்கள். மத்தேயு 13:53-56. இயேசுவும் இந்த பாதை வழியாய் கடந்து வந்ததை காணலாம். ஏனெனில் கடவுளால் இயலாதது ஒன்றுமில்லையே!  லூக்கா 1:37 . தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட எவரும் இயேசுவே ஆண்டவர் என்றும் சொல்வார்கள். 1 கொரிந்தி 12:3 .
தூய ஆவியால் நிரம்பும்பொழுது இயேசு செய்த செயல்களை நாமும் செய்வோம். அவர் செய்ததைவிட பெரிய காரியத்தையும் நாம் செய்யும்படி நம்மை வழிநடத்துவார். வாக்கும் கொடுத்திருக்கிறார். உலகமக்கள் ஏற்றுக்கொள்ளாத அறியாத ஆவியானவரை நாம்
அவர்களுக்கு தெரியப்படுத்துவோம். யோவான் 14 :12,16-18 .

ஜெபம்
அன்பின் இறைவா! தூய ஆவியானவரே எங்கள் உள்ளங்களை ஆராய்ந்து அறிந்திருக்கும் தேவனே உம்மை ஸ்தோத்தரிக்கிறோம், புகழ்கிறோம். உம்முடைய பரிசுத்த ஆவியால் எங்கள் ஒவ்வொருவரையும் நிரப்பி நாங்கள் செய்ய வேண்டிய எந்த காரியத்தையும் எங்களுக்கு போதித்து வழிநடத்தும். உமது பேரன்பை எங்கள்மேல் பொழிந்தருளும். உமக்கே மகிமை, துதி உண்டாகட்டும். ஆமென்!! அல்லேலூயா!!!

You may also like...

Leave a Reply

%d bloggers like this: