பழிவாங்கும் எண்ணம் நமக்கு வேண்டாமே!

அன்பும்,பாசமும்,நிறைந்த சகோதர,சகோதரிகளே!உங்கள் ஒவ்வொருவருக்கும் நம் கிறிஸ்துஇயேசுவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள்.
போட்டியும், பொறாமையும் நிறைந்த இந்த உலகத்தில் ஒவ்வொருவரும் நம் தேவைகளை சந்திக்க அநேக காரியங்களில் ஈடுபடுகிறோம். பணம் இல்லாமல் இந்த உலகத்தில் வாழ முடியாது என்பது உண்மைதான்.  ஆனால் பணமே வாழ்க்கை ஆகிவிடாது. பணத்தை வைத்து எதை வேண்டுமானாலும் வாங்கலாம் என்று சொல்வார்கள்.நம் இதயத்தில் தோன்றும் சந்தோஷத்தை, மகிழ்ச்சியை எந்த பணத்தாலும் வாங்க முடியாது. அதை கடவுளால் மட்டுமே கொடுக்கமுடியும்.
நாம் நல்ல நண்பர்களாய் அல்லது நல்ல உறவினர்களாய் இருப்போம். ஆனால் பணம் என்கிற பிசாசு நம் உள்ளத்தில் வந்துவிட்டால் நண்பர்களும், உறவினர்களும் நமக்கு எதிரியாக மாறிவிடுவார்கள். அங்கே போட்டியும், பொறாமையும் தலைவிரித்து ஆடும். அப்பொழுது நம்மை
அறியாமல் அவர்களை எப்படியாவது வீழ்த்த வேண்டும், பழிவாங்கவேண்டும் என்ற எண்ணத்தை பிசாசு நம் உள்ளத்தில் விதைப்பான்.  கடவுளுடைய பிள்ளைகளாகிய நாம் பிசாசுக்கு அடிமையாகிவிடுவோம். நம் சந்தோஷம் சமானாதம் எல்லாவற்றையும் இழந்து தவிப்போம். நம்முடைய அனைத்து காரியங்களையும் நம் ஆண்டவர் அறிந்திருக்கிறார். தேவையானது ஒன்றே. நல்ல பங்கை மரியா போல நாமும் தேர்ந்தெடுத்துக் கொள்வோம். லூக்கா 10:42.
எப்படிப்பட்ட சூழ்நிலையில் நமக்கு விரோதியாய் மாறினாலும் நாம் அதைப்பற்றி கவலைப்படாமல் பொறுமையோடும், உண்மையோடும் நம் வேண்டுதலை இறைவன் பாதத்தில் வைத்துவிட்டால் நம்மை விட ஆண்டவர் அவர்களை நன்றாக பார்த்துக்கொள்வார். அவர்கள்
இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார்கள். ஆனால் நாம் அந்த காரியத்தை நம் கையில் எடுத்துக்கொண்டால் ஆண்டவர் நமக்கு உதவ மாட்டார். நீயே பார்த்துக்கொள் என்று ஒதுங்கிவிடுவார். நமக்கு வெற்றி கிடைக்காது. இஸ்ரவேல் ஜனங்களுக்காக கடவுள் எப்படியெல்லாம் எகிப்தியரை பழிவாங்குகிறார் என்று விடுதலைப்பயணம்
புத்தகத்தை வாசித்து பார்ப்பீர்களானால் உங்களுக்கே நன்கு புரியும்.
நமக்கு துரோகம் செய்பவர்களை ஆண்டவரின் பாதத்தில் வைத்து விடுவோம். அப்பொழுது ஆண்டவர் வன்மையாய் அவர்களைப் பழிவாங்கி அவருடைய சீற்றத்தால் தண்டிப்பார். அவ்வாறு அவர்களை பழிவாங்குகையில் அவரே ஆண்டவர் என்று அவர்களும் அறிந்துக்
கொள்வார்கள். எசேக்கியல் 25:17.
இணைச்சட்டம் 32:35 , ரோமர் 12:19 மற்றும் எபிரெயர் 10:30 ஆகிய வசனங்களில் வாசித்து பார்ப்போமானால் நமக்கு நன்கு விளங்கும். நமக்காக வழக்காடவும், பழிவாங்கவும் கடவுள் இருக்கும்பொழுது நம் முழு நம்பிக்கையும் அவர்மேல் வைத்துவிட்டு நாம் பெறப்போகும் ஆசீர்வாதத்தை நோக்கி  காத்திருப்போம். திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 79:10ல்
நாம் இவ்வாறு வாசிக்கலாம். அவர்கள் கடவுள் எங்கே? என்று அண்டை நாட்டினர் ஏன் சொல்லவேண்டும்? உம்முடைய ஊழியரின் இரத்தத்தைச் சிந்தியதற்காக நீர் அவர்களை என் கண்ணெதிரே பழிவாங்கும். ஆகையால் நாம் நம் ஆண்டவரைப்போல் மன்னிக்கும்
குணத்தை பெற்று அவரைப்போல் வாழ்வோம்.
ஜெபம்: 
எங்கள் அன்பின் இறைவா! எங்களுக்கு செவிசாய்த்து பதிலளியும். ஏனெனில் நீர் எங்கள்மீது காட்டும் அன்பு பெரிது. நீர் நல்லவர், மன்னிப்பவர். உம்மை சிலுவையில் அடித்த மக்களை நீர் வெறுக்காமல், பழிவாங்காமல் உமது தந்தையிடம் அவர்களுக்கு மன்னியும் என்று
மன்றாடினீர். உம்மைப்போல வாழ எங்களுக்கு உதவிச் செய்யும். எல்லா காரியத்தையும் உமது கரத்தில் ஒப்புக்கொடுக்கிறோம். நீர்தாமே பொருப்பெடுத்துக்கொள்ளும். மீட்பின் கடவுளே எங்கள்
ஜெபம் உம்திருமுன் வருவதாக, தூபம்போல் உம்மிடம் படைக்கிறோம். பழிவாங்கும் எண்ணம் சிறிதும் எங்களிடம் இல்லாமல் போகவும், மறந்துவிடவும் உதவி செய்யும். உமக்கே மகிமை, மாட்சி உண்டாகட்டும். ஆமென்!! அல்லேலூயா!!!.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: