நம்மை தேடி வரும் தேவ அன்னை…

madha1கத்தோலிக்கத் திருச்சபை மே மாதத்தை நமது தேவ அன்னையாம் மரியன்னைக்கான வணக்க மாதமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

அன்னையின் பெயர் கொண்ட ஆலயங்களில் விசேட திருப்பலிகளும் பக்தி வழிபாடுகளும் இடம்பெற்று வருவதுடன் பங்குகளில் அன்னையின் திருச்சுரூபத்தை வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் நிகழ்வுகளும் இடம் பெறுகின்றன.

ஆலயங்களில் திருச் சுரூபங்களுக்குக் கீழே நின்று, அல்லது கண்ணாடிப் பேழைகளுக்குள் வைக்கப்பட்டுள்ள மாதாவின் திருச் சுரூபத்திற்கு முன்பாக இரு கையேந்தி மன்றாட்டுக்களை முன் வைக்கிறோம்.

மாறாக நம் வீட்டில் நாம் அன்னையைக் கொண்டு வந்து நம் கண் முன்னே நம் பிள்ளைகள் பெற்றோர் உறவினர் சூழ அவருக்கு வணக்கம் செய்து மகிழ்வதில் கிடைப்பது அலாதியான திருப்தியே.

madha2நம் பங்குகளில் எது எதற்கோ எல்லாம் நாம் குறை கூறி நின்றாலும் இந்த விடயத்தில் நம் பங்கின் செயற்பாட்டை நாம் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

ஒரு கிராமத்திற்கு மாதாவின் திருச்சுரூபம் வந்துவிட்டால் இன்று ஒருநாள் நாளை ஒரு நாள் என ஒவ்வொரு வீட்டுக்கும் அன்னையை பவனியாக எடுத்துச் செல்லும் போதும் அந்தக் குடும்பங்களில் மட்டுமன்றி அப்பிரதேசமே அருளில் குளிக்கிறது.

இன, மதம் என பாராது நமக்கு ஒத்துழைப்பு வழங்கி நம்மோடு கூட இணைந்து செயற்படுகின்ற நம் அயலவர்கள், நம்மோடு உறவில்லாதவர்கள் கூட அத்தகைய தருணங்களில் நம்முடன் இணைவது என அங்கும் அற்புதம் நடக்கிறது.

வாழ்க்கையிலேயே ஜெபம் செய்யாதவர்கள் நம் வீட்டில் வீற்றிருக்கும் மாதாவின் முன்பாக மண்டியிட்டு மனமுருகி செபிப்பது, செபமாலையைக் கையிலேந்தி தமது பங்கிற்கும் செபிக்க ஆசைப்படும் நமது சிறார்கள், நம் வீட்டுக்கு அருகில் செல்பவர்களெல்லாம் ஒரு தரம் நம் மாதாவை எட்டிப்பார்த்துச் செல்வது என மாதாவின் இந்த வருகை பலமாற்றங்களை நமக்குக் கொண்டு வருகிறது.

இந்த மாற்றங்களோடு மட்டும் நின்றுவிடாது நம் மனதில், உள்ளார்ந்த வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் அற்புதம் இடம்பெற வேண்டும் எனவும் நம் இல்லங்களைத் தரிசிக்கும் மாதா விரும்புகிறார். மாதாவின் இந்த தரிசனம் அதனை நம்மில் ஏற்படுத்தப்படும்.

குடும்பங்களில் பிரச்சினை, உறவுகளில் விரிசல், சுயநலமான செயற்பாடுகளினால் பிறரை மனத்தாங்களுக்கு உள்ளாக்குதல், பக்கத்து வீட்டாருடன் மன வருத்தம் என சிறிய, பெரிய பிரச்சினைகள் நம் மத்தியில் இருக்கின்றனவே. அவை மாதாவின் வருகையால் மறைத்து விடட்டுமே! அதற்கான வழிகளை நாம் ஆயத்தப்படுத்துவோம்.

மாதா நம் இல்லத்திற்கு வந்து மீண்டும் போகும் போது மாதாவைப் போன்று மனத்தாழ்ச்சி எமக்குள் உண்டாகட்டும். மாதா, இதோ உம் அடிமை உமது சித்தப்படியே ஆக்கட்டும்” என இறைவனுக்குத் தம்மை கையளித்தது போல் நம்மை நம் இறைவனுக்கு முழுமையாகச் சமர்ப்பிப்போம். அவர் தாழ் சரணடைவோம். இந்த வணக்கமாதம் அப்போது அர்த்தம் பெறும். அதுமட்டுமல்ல மாதாவின் அருள் ஆசீர் தினமும் நமக்குக்கிட்டும்!

– Gabriel

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: