“அன்னைதின அறைகூவல்” (Mother’s Day Proclamation)

“தாயிற் சிறந்த கோவில் இல்லை”
அன்னையர் அனைவருக்கும்,

அன்னை தின வணக்கங்களும், வாழ்த்துக்களும்.

“அன்னைதின அறைகூவல்” (Mother’s Day Proclamation)

சமூக ஆர்வலரும், கவிஞருமான Julia Ward Howe அவர்கள், 1870ம் ஆண்டு, “அன்னைதின அறைகூவல்” (Mother’s Day Proclamation) என்ற பெயரில் சக்திவாய்ந்த ஒரு கவிதையை எழுதினார். அமெரிக்காவின் உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் எழுதப்பட்ட அக்கவிதை, அன்னை தினத்தைக் கொண்டாடும் எண்ணத்திற்கு வித்திட்டது. இதோ அக்கவிதை:

மகளிரே, இன்று எழுந்து நில்லுங்கள்! இதயமுள்ள மகளிரே, எதிர்த்து நில்லுங்கள்!
உங்களது திருமுழுக்கு, தண்ணீரால் நடந்திருந்தாலும், கண்ணீரால் நடந்திருந்தாலும் சரி… இப்போது எழுந்து நில்லுங்கள், எதிர்த்து நில்லுங்கள்.

உறுதியாகச் சொல்லுங்கள்:

  • வாழ்வின் மிக முக்கியக் கேள்விகளின் விடைகளைத் தீர்மானிக்கும் உரிமையை குடும்பத்துடன் சிறிதும் தொடர்பற்ற நிறுவனங்களுக்கு நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்.
  • சண்டைகளில் உயிர்களைக் கொன்று குவித்த கொலை நாற்றத்துடன் வீடு திரும்பும் கணவர்கள், எங்கள் அரவணைப்பையும், ஆரவார வரவேற்பையும் பெறுவதற்கு நாங்கள் இணங்கமாட்டோம்.
  • பிறரன்பு, கருணை, பொறுமை என்று நாங்கள் சொல்லித்தரும் பாடங்களை மாற்றி, அவற்றிற்கு எதிரான பாடங்களைச் சொல்லித்தரும் நோக்கத்துடன், எமது குழந்தைகளை எங்களிடமிருந்து பறிப்பதற்கு வரும் நிறுவனங்களை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.
  • ஒரு நாட்டைச் சேர்ந்த பெண்களாகிய நாங்கள், மற்றொரு நாட்டுப் பெண்கள் மீது கனிவு கொண்டவர்கள். எனவே, எங்கள் மகன்கள் அப்பெண்களின் மகன்களைக் காயப்படுத்த விடமாட்டோம்.

நிர்மூலமாக்கப்பட்ட இந்தப் பூமியின் அடிவயிற்றிலிருந்து எழும் ஓர் ஓலம் எங்கள் குரல்களுடன் இணைகிறது. அது சொல்வது இதுதான்: “ஆயுதங்களைக் களையுங்கள்! ஆயுதங்களைக் களையுங்கள்! உயிர் குடிக்கும் வாள், ஒருநாளும் நீதியை நிலைநாட்டும் தராசு ஆகாது!” என்பதே பூமியின் அடிவயிற்றிலிருந்து எழும் அந்த ஓலம்.

போர்க்கள அழைப்பைக் கேட்டு, தங்கள் நிலங்களையும், தொழிற்சாலைகளையும் விட்டுச் சென்றுள்ள ஆண்களைப் போல், பெண்களும் தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறட்டும். போரில் ஈடுபடும் ஒவ்வொரு நாட்டிலும் நல்ல முடிவுகள் உருவாக, பெண்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறட்டும். போரில் இறந்தோரை நினைவுகூர, அவர்களுக்காக அழுது புலம்ப, பெண்கள் ஒன்று சேரட்டும். இந்த மனிதக் குடும்பம் அமைதியில் வாழ்வதற்குரிய வழிமுறைகளைப் பெண்கள் கலந்து பேசட்டும்.

உலகின்மேல், சீசரின் உருவத்தைப் பதிக்காமல், கடவுளின் உருவத்தைப் பதிப்பது எவ்விதம் என்பதை பெண்கள் இவ்வுலகிற்குச் சொல்லித் தரட்டும்.

– Gabriel

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.