கீழ்படியுங்கள்

ஆண்டவருக்குள் அருமையான அன்பின் இறைமக்களுக்கு,
    இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் மனிதனாக பிறந்தபொழுது தன்னை இந்த உலகத்திற்கு அனுப்பிய தமது தந்தைக்கும், இந்த உலகத்திற்கு வர காரணமாயிருந்த யோசேப்பு, மரியாள் ஆகிய
தமது பெற்றோருக்கும் கீழ்படிந்தே வாழ்ந்தார், என்று நாம் விவிலியத்தில் வாசிக்கிறோம்.
  மனிதர்கள் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வை இழப்பாரானால் அவர்களுக்கு கிடைக்கும் பயன் என்ன? மத்தேயு 16:26 ; மாற்கு 8:36 ல் படிக்கிறோம்.
நாம் அவரிடத்தில் கேட்டும் சில காரியங்கள் கிடைக்கவில்லையே என்று மனம் சோர்ந்து போயிருக்கிறீர்களா? கவலைப்படாதிருங்கள். நீங்கள் விரும்பும் எல்லாவற்றையும் கொடுக்கவே ஆண்டவர் உங்கள் அருகில் உங்கள் இருதயத்தில் காத்திருக்கிறார்.
அதற்குமுன் ஆண்டவர் உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்கிறார். என்ன தெரியுமா? கீழ்படிதல். அவருடைய வாக்குகளை கேட்டு அவர் திருவுளச்சித்தப்படி நடந்தால் நாம் எதைக்கேட்டாலும் அவர் இல்லை என்று சொல்லவே மாட்டார்.  1 யோவான் 5 – 14.
உங்கள் தீச்செயல்கள் உங்களுக்கும் ஆண்டவருக்கும் இடையே பிளவை உண்டாக்காமலும், அவர் முகத்தை மறைக்காமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.  எசாயா 59: 2.
அப்பொழுது ஆண்டவர் முகம் உங்கள்மீது ஒளிவீசும். ஆண்டவர் மாட்சி உங்கள்மேல் நிச்சயமாக உதிக்கும். ஆண்டவர் உங்கள்மீது எழுந்தருள்வார். எத்தனை உண்மை . எசாயா 60:1-2.
1 சாமுவேல் 13 :13-14 வசனங்களில் சவுல், ஆண்டவரின் கட்டளைக்கு கீழ்படியாமல் அவசரப்பட்டு சாமுவேல் செய்யும் வேலையை தன் கையில் எடுத்து எரிபலியைச் செலுத்தினார். இதனால்
சவுல் என்றென்றைக்கும் ராஜாவாக இருக்காதபடி கடவுள் அவரை கைவிட்டார். எனக்கு பிரியமானவர்களே அதனால் நாமும் நமக்கு ஆண்டவர் கட்டளையிடும் வேலைக்கு மாத்திரம் கீழ்படிந்து நடந்தால் நம்மை அவர் தன் மார்பில் அனைத்து ஒரு தாயைப்போல்
காத்து எசாயா 66 :13 , ஒரு தீமையும் நம்மை தொடாதபடி காப்பார். நாம் ஒவ்வொருவரும் ஆண்டவருக்கு கீழ்படிய கற்றுக்கொள்ள வேண்டும். கீழ்படிதல் ஆட்டுக்கிடாய்களின் கொளுப்பைவிட மேலானது.  1 சாமுவேல் 15 :22.
அவருக்கு கீழ்படிந்து அவர்மேல் நம்பிக்கை கொண்டு நிலைவாழ்வை பற்றிக்கொள்ளுவோம். யோவான் (அருளப்பர்)  3:36.
ஜெபம்.
=======
அன்பின் தெய்வமே! உம் திருவுளத்தை நிறைவேற்ற எங்களுக்கு கற்பித்தருளும். ஏனெனில் நீரே எங்கள் கடவுள். உமது நலமிகு ஆவி எங்களை செம்மையான வழியில் நடத்துவாராக! எங்கள்
பாதைகளை நாங்கள் அறியும்படி செய்யும். உமது உண்மை நெறியில் எங்களை நடத்தும். உமது இரக்கத்தையும், பேரன்பையும், நினைத்தருளும். அறியாமல், தெரியாமல் நாங்கள் கீழ்படியாமல், ஏதாவது செய்தால் அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் உமது இரத்தத்தால் கழுவிவிடும். உம்மையே நம்பியிருக்கிறோம். நாங்கள் யாரிடம் போவோம். நீரே எங்கள் தாயாகவும், தந்தையாகவும், கடவுளாகவும் இருக்கிறீர். உமது பெயரின் பொருட்டு எங்கள் பாவங்கள், சாபங்கள்
எல்லாவற்றையும் மன்னித்து நிலைவாழ்வை பெற்றிட உதவி செய்யும். நீரே எங்கள் அடைக்கலம். உமக்கே மகிமை
ஆமென்! அல்லேலூயா!!!.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: