நம் நம்பிக்கையால் உலகத்தையே வெல்லலாம்.

இயேசுகிறிஸ்துவின் பேரில் நம்பிக்கை கொண்ட அன்பார்ந்த நெஞ்சங்களுக்கு அன்பின் நல்வாழ்த்துக்கள்.

அன்பானவர்களே! நாம் வாழ்க்கையில் பல நேரங்களில் தோல்வியை கண்டு மனம் சோர்ந்து போய் விடுவதும் அல்லாமல் தற்கொலை செய்யும் அளவுக்கு கூட போய்விடுகிறோம். ஆத்திரத்திலும், அவசரத்திலும் எடுக்கும் முடிவு நம்மை எங்கோ கொண்டு சென்று விடுகிறது. அதனால்தான் நம் ஆண்டவர் அவருடைய பிள்ளைகள் ஒருபோதும் தோல்வியை கண்டு மனம் சோர்ந்து போய்விடக் கூடாது என்று நமக்கு முன்மாதிரியான வாழ்வை வாழ்ந்து காண்பித்து அவருடைய உயிரையே கொடுத்து நம்மை மீட்டு காத்தும் வருகிறார்.

மானிட அவதாரம் எடுத்த நம் ஒவ்வொருவருக்கும் ஆண்டவராகிய கடவுள் அவருடைய திருச்சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, இயேசுவின்மீது வைக்கும் நம்பிக்கையின் வாயிலாகவே நாம் யாவரும் கடவுளுக்கு ஏற்புடையவராக ஆகும்படி நம்பிக்கையை நம் இதயத்தில் வைத்துள்ளார். அது குறையாதபடிக்கு காத்துக்கொள்ள வேண்டியது நமது கடமையாகும்.        ரோமர் 3:28.

நாம் எல்லோரும் ஏதோ ஒரு விஷயத்தில் தவறு செய்கிறோம். ஆனால் நாம் பெற்றுக்கொண்ட தூய ஆவியினால் நம் மனசாட்சி நம்மை தவறு செய்யாமல் காத்து நம் நம்பிக்கையில் உறுதியாய் இருக்க உதவி செய்கிறார். இதைத்தான் நாம் கலாத்தியர் 3:2-8 வரை வாசிக்கிறோம். சில நேரங்களில் நம் நம்பிக்கை சோதிக்கப் படும்பொழுது மனவுறுதி உண்டாகும் என்பது உங்களுக்கு தெரியும். உயிர் இல்லாத உடல் எப்படி ஒன்றுக்கும் பயன்படாதோ  அதுபோல செயல்களில்லாத நம்பிக்கையும் செத்ததாய் இருக்கும். அதனால் நாம் செய்யும் செயல்களில் எந்த கஷ்டம் வந்தாலும் நம்பிக்கையோடு செயல்பட்டு ஆண்டவரின் நாமத்தை மகிமைப்படுத்துவோம்.                      யாக்கோபு 1 :3 , யாக்கோபு 2:26.

ஆகையால் நாம் நம்பிக்கையோடு நற்பண்பும், நற்பண்போடு அறிவும், அறிவோடு தன்னடக்கமும், தன்னடக்கத்தோடு மன உறுதியும், மன உறுதியோடு இறைப்பற்றும், இறைப்பற்றோடு சகோதர நேயமும், சகோதர நேயத்தோடு அன்பும் கொண்டு விளங்குவோம். ஏனெனில் நம்பிக்கையின் வழியாய் மீட்புக்காகக் கடவுளுடைய வல்லமையால் பாதுகாக்கப்படுவோம். பிசாசு நமக்கு கொண்டுவரும் எல்லாத் தீங்கிலிருந்தும் நம்மை பாதுகாத்து அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதற்கு எதிர்த்து நின்று கடவுளின் மாட்சியில் பங்கு கொள்வோம்.                            1 பேதுரு 1 :5 , 1 பேதுரு 5:9.

நாம் கடவுளின் கட்டளைகளை கடைப்பிடித்து அவரில் நம்பிக்கை கொண்டு எந்தவொரு காரியத்தையும் செய்வோமானால் அதில் நமக்கு தோல்வி என்பது கிடையாது. அவருடைய கட்டளை நமக்கு சுமையானதுமல்ல. ஏனெனில் கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும். உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே !!!!!!!! [ 1 யோவான் 5:4 .]

ஜெபம்
அன்பின் தெய்வமே!எங்கள் கோட்டையும், பாதுகாப்பும் ஆனவரே, மனமிரங்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம், ஆராதிக்கிறோம். நாங்கள் எங்கள் நம்பிக்கையில் ஒருபோதும் குறையாதபடிக்கு உம்மைக்கொண்டு இந்த உலகத்தை வெல்ல உதவி செய்யும். நீர் எங்களைக் கொண்டு செய்ய நினைத்ததை நாங்கள் செய்து முடிக்கும்படி உதவி செய்யும்.தோல்வியை கண்டு மனம் சோர்ந்து போகாமல் எங்கள் நம்பிக்கையில் மன உறுதியாய் இருந்து உமது நாமத்துக்கு மகிமை சேர்க்க அருள் புரியும்.எல்லா மகிமையும், துதியும், கனமும் உமக்கே! ஆமென்! அல்லேலூயா!!!.

(Written by : Sara, MyGreatMaster.com)

You may also like...

Leave a Reply

%d bloggers like this: