நன்மையானதை தரும் ஆண்டவர்

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள்.

நம் ஆண்டவர் இந்த உலகத்தில் வாழ்ந்த பொழுது கலிலேயா,மற்றும் யூதேயா நாடு முழுதும் சுற்றித்திரிந்து மக்களை சந்தித்து அவர்கள் தேவைகளை எல்லாம் நிறைவேற்றி பல நன்மைகளை செய்து வந்தார்.பகல் முழுதும் மக்களை சந்தித்து அவர்கள் விரும்பியதை கொடுத்து இரவு முழுதும் தமது பிதாவை நோக்கி வேண்டுதல் செய்ததாக வேதத்தில் வாசிக்கிறோம்.அதே ஆண்டவர் இன்றும் நம்முடன் கூடவே இருக்கிறார்.நம் தேவைகளை சந்திக்க காத்திருக்கிறார்.அவரிடத்தில் கேட்பவர்களுக்கு அவர் ஒருபோதும் இல்லை என்று சொல்லவே மாட்டார்.

அன்பானவர்களே இன்றும் நீங்கள் பலவித கஷ்டங்களை சந்திப்பவராக இருக்கலாம். வியாதியினால் கஷ்டம்,கடன் பிரச்சனையினால் கஷ்டம்,ஒரு நல்ல வேலை இல்லையே என்று கவலை,குடியிருக்க ஒரு வீடு இல்லையே என்று ஏங்கலாம்.எதற்காகவும் நீங்கள் மனங்கலங்க வேண்டாம்.இதோ நமக்கு நன்மைகளை தரும்படிக்கே ஆண்டவராகிய இயேசு இந்த உலகத்தில் வந்து நம்மைப்போல் பல கஷ்டங்களை அனுபவித்து,அந்த கஷ்டத்தின் வேதனையை உணர்ந்தவராய்,நாம் அதிலிருந்து விடுபட்டு சுகமாய்,சந்தோஷமாய் வாழ வேண்டும் என்று விரும்பி இன்றும் தூய ஆவியின் உதவியால் நம் இருதயத்தில் வாசம் செய்து கொண்டு இருக்கிறார்.

ஆகையால் நாம் நம்முடைய மனவிருப்பத்தை அவரிடம் சொல்லி நம் ஆசீவாதத்தை பெற்றுக்கொள்வோம்.அவரை நம்பின ஒருவரும் வெட்கப்பட்டு போக விடவே மாட்டார்.நாம்தான் அவரிடம் கேட்பதில்லை.அவரிடத்தில் கேட்பவர் யாராக இருந்தாலும் அவர் உங்களுக்கு கொடுக்க விருப்பம் உள்ளவராக இருக்கிறார்.தமது உயிரையே கொடுத்த ஆண்டவர் மற்றவைகளை கொடுக்க மாட்டாரா என்ன?ஆகையால் நீங்கள் அவரிடத்தில் கேட்டு உங்கள் ஒவ்வொரு தேவைகளையும் பெற்றுக்கொள்ளுங்கள்.தினந்தோறும் அவருடைய வார்த்தைகளாகிய விவிலியத்தை வாசித்து அதன்படி நடந்தால் நாம் கேட்பதற்கும் விரும்புவதற்கும்,அதிகமாய் கொடுக்க ஆவல் உள்ளவராய் இருக்கிறார்.

ஜெபம்

அன்பின் பரம தகப்பனே உம்மை வணங்குகிறோம்,வாழ்த்துகிறோம், போற்றுகிறோம். இயேசப்பா உம்மைப்போல் தெய்வம் இந்த உலகத்தில் இல்லவே இல்லை.நீரே எல்லா தெய்வங்களுக்கும், மேலானவர்.உம்மிடத்தில் கேட்பவர்களுக்கு நீர் ஒருபோதும் இல்லை என்று சொல்லவே மாட்டீர்.உமது சித்தத்தை அறிந்து அதன்படி கேட்டு பெற்றுக்கொள்ள எங்களுக்கு மனம் இரங்கும்.நாங்கள் வெட்கப்பட்டு போவது உமது விருப்பம் இல்லையே.எங்கள் குற்றம்,குறைகளை மன்னித்து எங்களை நல்வழிப்படுத்தி காத்துக்கொள்ளும்.எல்லா மகிமையும்,புகழும்,உம் ஒருவருக்கே செலுத்துகிறோம்.நன்றி தகப்பனே!நன்றி.துதி,கனம்,மகிமை யாவும் உமக்கே உண்டாகட்டும்.ஆமென் ,அல்லேலூயா!!!.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: