Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

சாமுவேல் - முதல் நூல்

அதிகாரம் 11

சவுல் அம்மோனியரைத் தோற்கடித்தல்
1 அக்காலத்தில் நாகாசு என்னும் அம்மோனியன் வந்து, கிலயாதில் உள்ள யாபேசை முற்றுகையிட்டான். யாபேசிலிருந்து மக்கள் அனைவரும் நாகாசிடம் சென்று, "எங்களோடு உடன்படிக்கை செய்து கொள்ளும். நாங்கள் உங்களுக்கு பணிந்திருப்போம்" என்றனர். 2 அம்மோனியன் நாகாசு அவர்களை நோக்கி, "நான் உங்களோடு செய்யும் உடன்படிக்கை: உங்களுள் ஒவ்வொருவனின் வலக் கண்ணும் பிடுங்கப்படும். இஸ்ரயேலர் அனைவரையும் அவமானத்திற்கு உள்ளாக்குவேன்" என்றான். 3 யாபேசின் பெரியோர் அவனிடம் கூறியது: "ஏழு நாள்கள் எங்களுக்கு தவணை தாரும். நாங்கள் இஸ்ரயேல் எல்லை முழுவதும் தூதர்களை அனுப்புவோம். எங்களை மீட்பார் எவருமில்லையெனில் நாங்கள் உங்களிடம் சரணடைவோம்." 4 தூதர்கள் சவுலின் ஊராகிய கிபயாவுக்கு வந்து மக்கள் செவிபடச் செய்தியை சொல்ல, மக்கள் அனைவரும் குரலெழுப்பி அழுதனர். 5 அப்போது சவுல் வயலினின்று மாடுகளை ஓட்டிக் கொண்டு வந்தார். "மக்களுக்கு என்ன நேரிட்டது? அவர்கள் ஏன் அழுகிறார்கள்?" என்று சவுல் கேட்டார். யாபேசின் ஆள்கள் சொன்னதை அவரிடம் சொன்னார்கள். 6 இச்செய்தியை அவர் கேட்டுக் கொண்டிருந்தபோது, கடவுளின் ஆவி அவரை வலிமையுடன் ஆட்கொள்ள, அவரது சினம் கனன்றது. 7 அவர் ஒரு சோடி மாடுகளைப் பிடித்து, துண்டுகளாக வெட்டி, அவற்றைத் தூதர்கள் வழியாக இஸ்ரயேல் எல்லை முழுவதும் அனுப்பி, சவுலின் பின்னும் சாமுவேலின் பின்னும் வராதவனின் மாடுகளுக்கு இவ்வாறு நேரிடும் என்று சொல்லியனுப்பினார். அப்போது ஆண்டவர் பற்றிய அச்சம் மக்களை ஆட் கொண்டது. அவர்கள் ஒன்றுதிரண்டு வந்தார்கள்8 அவர் அவர்களை பெசேக்கில் கணக்கெடுத்தபோது இஸ்ரயேலின் மக்கள் மூன்று இலட்சம் பேரும் யூதாவினர் முப்பதாயிரம் பேரும் இருந்தனர். 9 வந்திருந்த தூதர்களிடம், "நாளை வெயில் ஏறும்முன் உங்களுக்கு மீட்பு கிடைக்கும் என்று கிலயாதிலுள்ள யாபேசின் மக்களுக்கு தெரிவியுங்கள்" என்று அறிவிக்கப்பட்டது. தூதரும் இவ்வாறே யாபேசின் மக்களிடம் சொல்ல, அவர்கள் மகிழ்ச்சியுற்றனர். 10 ஆகவே யாபேசின் ஆள்கள் "நாளை நாங்கள் உம்மிடம் சரணடைவோம். உம் விருப்பப்படியே எங்களுக்குச் செய்யும்" என்றனர். 11 மறுநாள் சவுல் மக்களை மூன்று படைகளாக பிரித்தார். கீழ்வானம் வெளுத்தபோதே அவர்கள் பாளையத்தினுள் வந்து, வெயில் ஏறுவதற்குள் அம்மோனியரை வெட்டி வீழ்த்தினர். இருவர் கூட இணையாதபடி எஞ்சி இருந்தவர்கள் சிதறடிக்கப்பட்டார்கள். 12 பிறகு மக்கள் சாமுவேலை நோக்கி, "சவுலா எங்களை ஆள்வது?" என்று கேட்டவர்களைக் கொண்டு வாருங்கள். அவர்களைக் கொன்று போடுவோம்" என்றனர். 13 ஆனால் சவுல், "இன்று யாரையும் கொல்லக் கூடாது. ஏனெனில் ஆண்டவர் இஸ்ரயேலுக்கு மீட்பு அளித்துள்ளார்" என்றார். 14 சாமுவேல் மக்களை நோக்கி, "வாருங்கள் கில்காலுக்கு சென்று, அங்கே அரசாட்சியை உறுதிப்படுத்துவோம்" என்றார். 15 மக்கள் அனைவரும் கில்காலுக்குச் சென்று அங்கே ஆண்டவர் திருமுன் சவுலை அரசராக்கி, நல்லுறவுப் பலிகளைச் செலுத்தினார்கள். சவுலும் இஸ்ரயேலும் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!