Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

குறிப்பேடு (நாளாகமம்) - இரண்டாம் நூல்

அதிகாரம் 10

வடகுலங்களின் கிளர்ச்சி (1 அர 12:1-20)
1 இஸ்ரயேலர் எல்லாரும் ரெகபெயாமை அரசனாக்க செக்கேமில் கூடினர்: அதனால் ரெகபெயாமும் அங்கே சென்றான்.2 அரசர் சாலமோனுக்கு அஞ்சி எகிப்துக்கு ஓடிச்சென்றிருந்த நெபாற்றின் மகன் எரொபவாம் இதனைக் கேட்டு எகிப்திலிருந்து திரும்பி வந்தான்.3 அவர்கள் ஆளனுப்பி அவனை அழைத்து வந்தனர். எரொபவாம் இஸ்ரயேலர் அனைவரோடும் ரெகபெயாமிடம் வந்து,4 உம் தந்தை பளுவான நுகத்தை எங்கள் மேல் சுமத்தினார்: இப்பொழுது நீர் உம் தந்தை சுமத்தின கடினமான வேலையையும் பளுவான நுகத்தையும் எளிதாக்கும்: நாங்கள் உமக்குப் பணிந்திருப்போம் என்றான்.5 அதற்கு ரெகபெயாம், இன்னும் மூன்று நாள் கழித்து என்னிடம் திரும்பி வாருங்கள் என்று பதிலளிக்க, மக்கள் கலைந்து சென்றனர்.6 பின்பு தன் தந்தை சாலமோன் உயிரோடிருக்கையில் அவரிடம் பணிபுரிந்த பெரியோர்களை நோக்கி ரெகபெயாம், இம்மக்களுக்கு நான் பதிலளிப்பது குறித்து, என்ன அறிவுரை தருகிறீர்கள்? என்று கேட்டான்.7 அவர்கள் அவரிடம், நீர் இம்மக்களுக்கு அன்பு காட்டி, அவர்கள் மனம் குளிருமாறு இன்சொல் பேசினால், அவர்கள் உமக்கு எந்நாளும் பணியாளராய் இருப்பர் என்றனர்.8 ஆனால் பெரியோரின் அறிவுரையைப் புறக்கணித்துவிட்டு, அவன் தன்னோடு வளர்ந்து தனக்குப் பணிசெய்த இளைஞர்களுடன் கலந்துரையாடினான்.9 அவன் அவர்களிடம், 'உம் தந்தை எங்கள்மேல் சுமத்தின நுகத்தை எளிதாக்கும்' என்று கேட்கும் இம்மக்களுக்கு நான் பதிலளிப்பது குறித்து என்ன அறிவுரை தருகிறீர்கள்? என்று கேட்டான்.10 அவனுடன் வளர்ந்த இளைஞர்கள் அவனிடம், 'உம் தந்தை எங்கள்மேல் பளுவான நுகத்தைச் சுமத்தினார். நீர் அதனை எளிதாக்கும்' என்று உம்மிடம் கேட்ட மக்களுக்கு இந்தப் பதில் கொடும்: என் சுண்டு விரல் என் தந்தையின் இடுப்பைவிடப் பெரியது:11 என் தந்தை பளுவான நுகத்தை உங்கள்மேல் சுமத்தினார்: நானோ அதை இன்னும் பளுவாக்குவேன்: என் தந்தை உங்களைச் சாட்டைகளால் அடித்தார்: நானோ உங்களை முட்சாட்டைகளால் அடிப்பேன்' என்று பதிலளிக்கவும் என்று கூறினர்.12 'மூன்றாம் நாள் மீண்டும் என்னிடம் வாருங்கள்' என்று அரசன் கட்டளையிட்டபடி மூன்றாம் நாள் எரொபவாமும் எல்லா மக்களும் ரெகபெயாமிடம் வந்தனர்.13 அரசன் ரெகபெயாம் பெரியோரின் அறிவுரையைப் புறக்கணித்துவிட்டு வன்சொல்லால் அவர்களுக்குப் பதிலளித்தான்.14 இளைஞரின் அறிவுரைக்கு ஏற்ப அவன் அவர்களிடம், என் தந்தை பளுவான நுகத்தை உங்கள்மேல் சுமத்தினார்: நானோ அதை இன்னும் பளுவாக்குவேன், என் தந்தை உங்களைச் சாட்டைகளால் அடித்தார்: நானோ உங்களை முட்சாட்டைகளால் அடிப்பேன் என்று கூறினான்.15 இவ்வாறு அரசன் மக்களுக்குச் செவிகொடுக்கவேயில்லை: ஏனெனில் சீலோவியரான அகியா மூலம் நெபாற்றின் மகன் எரொபவாமிடம் ஆண்டவர் கூறிய வார்த்தைகள் நிறைவேற, இவை யாவும் கடவுளால் நிகழ்ந்தன.16 இஸ்ரயேல் மக்கள் அனைவரும் அரசன் தங்களது வேண்டுகோளுக்கு இணங்க மறுத்துவிட்டதைக் கண்டு, எங்களுக்குச் தாவீதிடம் என்ன பங்கு? எங்கள் உரிமைச் சொத்து ஈசாயின் மகனிடம் இல்லை. இஸ்ரயேலரே! உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிச் செல்லுங்கள்! தாவீதே! உன் வீட்டை நீயே பார்த்துக்கொள்! என்று17 ஆனால் யூதா நகர்களில் குடியிருந்த இஸ்ரயேல் மக்கள்மீது ரெகபெயாமே ஆட்சி செலுத்தினான்.18 பின்பு அரசன் ரெகபெயாம், கட்டாய வேலைத் திட்டத்தை முன்பு செயல்படுத்தியவனான அதோராமை இஸ்ரயேல் மக்களிடம் அனுப்பி வைத்தான். அவர்களோ அவனைக் கல்லால் எறிந்து கொன்றனர்: அதைக் கேட்ட அரசன் ரெகபெயாம் விரைந்து தேரில் ஏறி எருசலேமுக்குத் தப்பியோடி போனான்.19 தாவீதின் குடும்பத்திற்கு எதிராக அன்று கிளர்ந்தெழுந்த இஸ்ரயேலர் இன்றுவரை அவ்வாறே இருக்கின்றனர்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!