”இயேசு செய்த யாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர்” (லூக்கா 9:43)

இயேசு பல புதுமைகள் செய்து மக்களின் பிணிகளைப் போக்கினார்; அவர்களுக்கு நலம் கொணர்ந்தார். அதே பணியைத் தொடர்ந்து ஆற்றும் பொறுப்பையும் அதற்கான வல்லமையையும் அவர் தம் சீடர்களுக்கு அளித்தார் (காண்க: லூக் 9:1-6). வலிப்பு நோய்க்கு ஆளான ஒரு சிறுவனை இயேசுவின் சீடர்களால் குணப்படுத்த இயலவில்லை. ஆனால் இயேசு அச்சிறுவனின் பிணியை நீக்கி அவனுடைய தந்தையிடம் அவனை ஒப்படைத்தார் (லூக் 9:37-42). இந்த அதிசயம் மக்களின் கண்முன்னால் நிகழ்ந்ததும் ”அவர்கள் எல்லாரும் கடவுளின் மாண்பைக் கண்டு மலைத்துநின்றார்கள்” என லூக்கா குறிப்பிடுகிறார் (லூக் 9:43அ). இயேசு புரிந்த அதிசய செயல்கள் மக்களிடையேயும் சீடர்களிடையேயும் பெரும் வியப்பை ஏற்படுத்தின (லூக் 9:43ஆ). மலைப்பும் வியப்பும் எல்லாரையும் ஆட்கொண்டதைக் குறிப்பிட்ட உடனேயே, இயேசு தாம் துன்புறப்போவதாக இன்னுமொரு முறை முன்னறிவித்தது பற்றி லூக்கா பேசுகிறார். தீய சக்திகளை அடக்குகின்ற அதிகாரம் இயேசுவுக்கு இருக்கிறது; மக்களின் பிணி போக்குகின்ற வல்லமையும் அவரிடம் உண்டு. ஆனால் இத்தகு வல்லமை கொண்டவர் ”மக்களின் கைககளில் ஒப்புவிக்கப்பட்டு” துன்பங்களை அனுபவிப்பார் (லூக் 9:44).

இயேசுவின் சீடர்களுக்குப் புரியாத புதிராக இருந்தது இன்று நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. அதாவது, கடவுளின் வல்லமையால் மக்களுக்கு வாழ்வளிக்க வந்த இயேசு தம் உயிரையே நமக்காகக் கையளிக்கின்றார். தீய சக்திகளைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்த இயேசு தீயோரின் கைகளில் ஒப்படைக்கப்படுகின்றார். இதுவே ”சிலுவையின் முரண்பாடு” என அழைக்கப்படுகிறது. கடவுளின் வல்லமை துலங்குவது அதிகாரத்தின் வழியாகவோ, அடக்கி ஆளுவதன் வழியாகவோ அல்ல. மாறாக, கடவுளின் வல்லமை அவர் நமக்காகத் தம்மையே காணிக்கையாக்குவதில் துலங்குகிறது. அக்காணிக்கையின் உச்சக் கட்டம் தான் இயேசுவின் சிலுவைச் சாவு. இயேசு தாம் துன்புற்று இறக்கப் போவதை அறிவித்ததும் சீடர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். அவருக்கு இத்தகைய இழிநிலை ஏற்படக் கூடாது என்று கூறிப் பார்த்தார்கள். அதே நேரத்தில் ”அவர் சொன்னது பற்றி அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சினார்கள்” (லூக் 9:45). ஏன் இந்த அச்சம்? தம் குருவாக, ஆசிரியராக விளங்கிய இயேசுவுக்கு எத்தீங்கும் ஏற்படக் கூடாது என அவர்கள் நினைத்ததால் எழுந்தது இந்த அச்சமா அல்லது குருவின் நிலையே சீடனின் நிலையாக மாறிவிடுமோ என்ற அச்சமா? எவ்வாறாயினும், இயேசு கடவுளின் அன்பை நமக்கு வெளிப்படுத்தும்போது அந்த அன்பு தன்னையே நமக்குப் பலியாகத் தருகின்ற அன்பு என்பதை வெளிப்படுத்துகிறார். தன்னை அழித்துக் கொண்டு பிறருக்கு ஒளி தருகின்ற மெழுகு திரி போன்றது கடவுளின் அன்பு. அதே அன்பு நம் வாழ்விலும் துலங்கிட வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, உம் வல்லமை மிக்க செயல்களைக் கண்டு வியந்து நிற்கும் நாங்கள் எங்களையே உமக்குப் பலியாக அளித்திட அருள்தாரும்.

~அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: