என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன். [ தி. பணிகள். 13 : 22 ]

இன்றைய சிந்தனை: என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன். [ தி. பணிகள். 13 : 22 ]

கடவுள் தாவீதை தெரிந்தெடுத்து அவரை இஸ்ரயேல் தேசம் முழுவதுக்கும் ராஜாவாக அபிஷேகம் செய்து சிங்காசனத்தில் அமர்த்துகிறார். தாவீது சாதாரண நிலையில் ஆடுகள் மேய்த்துக்கொண்டு இருந்த ஒரு வாலிபன். அவனுக்கு எந்த படிப்பு அறிவும் கிடையாது. ஆனால் கடவுள் பேரில் மிகப்பெரிய பக்தி வைராக்கியம், நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையால் தான் கோலியாத்தை முறியடித்தான். சவுல் ராஜா மிகப்பெரிய சேனைகளை வைத்துக்கொண்டு இருந்தும் அந்த கோலியாத்துக்குப் பயந்து நடுங்கிக்கொண்டு இருந்தான். ஆனால் ஆடுகள் மேய்த்துக்கொண்டு இருந்த தாவீது ஒரு சின்ன கல்லின் மூலம் கோலியாத்தை வீழ்த்துவதை காண்கிறோம்.

ஞானிகளின் ஞானத்தை அழிப்பேன், அறிஞர்களின் அறிவை வெறுமை ஆக்குவேன். இவ்வுலகை சார்ந்த ஞானி எங்கே? அறிவாளி எங்கே? வாதிடுவோர் எங்கே? இவ்வுலக ஞானம் மடமை எனக் கடவுள் காட்டி விட்டாரல்லவா? கடவுளுடைய ஞானத்தால் அவரை அறிந்து கொள்ள முடியும். ஆனால் உலகினர் தம் ஞானத்தால் கடவுளை அறிந்துக் கொள்ளவில்லை. கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த சிறுமையானவர்களையே தெரிந்துக்கொள்கிறார். இதோ இதை எழுதும் நான்கூட ஒரு அறிவாளி கிடையாது. பயந்த சுபாவம் உள்ளவள். ஆனால் என்னைக்கொண்டு ஆண்டவர் இவைகளை எழுத வைக்கிறார். அவருக்கு பயப்படுவர்களுக்கு ஞானத்தை அளிக்கிறார்.

இந்த உலகில் எவ்வளவோ அறிவாளிகள், ஞானவான்கள் எல்லாம் இருக்கும்பொழுது வலுவற்ற என்னைக் கொண்டு எழுத வைக்கும் ஆண்டவரின் ஞானத்தை என்னவென்று போற்றுவது? இந்த உலகம் ஒரு பொருட்டாக கருதுபவற்றை அழித்துவிட அது தாழ்ந்ததாகக் கருதுபவற்றையும் இகழ்ந்து தள்ளுபவற்றையும் கடவுள் தெரிந்தெடுக்கிறார். அவரே நமக்கு ஞானத்தை அளிக்கிறார். அவரே நம்மை ஏற்புடையவராக்கி தூயவராக்கி மீட்கின்றார். பெருமை பாராட்ட நினைப்பவர்கள் கடவுளைக் குறித்தே பெருமை பாராட்ட வேண்டுமாய் இவ்வாறு செய்கிறார்.

ஆண்டவர் நமது ஞானத்தையும், அறிவையும் பார்க்காமல் நம்முடைய மனத்தாழ்மையையும், கீழ்படிதலையும், அன்பையும், பக்தி வைராக்கியத்தையும், நம்பிக்கை இவைகளையே பார்க்கிறார். கள்ளம் கபடம் இல்லாத உள்ளத்தோடு ஆண்டவருக்கு கீழ்படிந்து நடக்கும் யாவருக்கும் ஆண்டவர் தமது கிருபையை அளவில்லாமல் கொடுக்கிறார். அதனால்தான் தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாக கண்டேன்; என் விருப்பம் அனைத்தையும் அவன் நிறைவேற்றுவான் என்று ஆண்டவரே சான்று பகர்கின்றார். அந்த தாவீதைப்போல் நாமும் எல்லாக் காரியத்திலும் கடவுளுக்கு உகந்தவர்களாக வாழ்ந்து ஆண்டவரின் சித்தத்தை நிறைவேற்றி அவருக்கே பெருமை சேர்த்து போற்றி, புகழ்ந்து ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம்.

அன்புள்ள இறைவா!

உம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. நீர் வானத்தை விரித்தவர்; ஆழியின் முதுகை மிதித்து நடந்தவர். வடமீன் குழுவையும், மிருகசீரிடத்தையும், கார்த்திகை விண்மீன்களையும், தென்திசை விண்மீன் குழுக்களையும் அமைத்தவர் நீரே! நீர் கட்டளையிட கதிரவன் தோன்றும். ஞானிகளை உமது சூழ்ச்சியில் சிக்க வைப்பீர். வஞ்சகரின் திட்டங்கள் வீழ்த்தப்படும். தாழ்ந்தோரை மேலிடத்தில் வைக்கிறீர். அழுவோரைக் காத்து உயர்த்துகின்றீர். ஆராய முடியாப் பெரியனவற்றையும், எண்ணிலடங்கா வியக்கத் தக்கனவற்றையும் செய்பவர் நீரே! உமக்கே துதி, கனம், மகிமை உண்டாகட்டும்.

ஆமென்! அல்லேலூயா!!

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: