கடவுள் நமக்கு குறித்துள்ளதை நிறைவேற்றுவார்.யோபு 23:14.

கர்த்தருக்குள் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள்.

தாயின் வயிற்றில் உருவாகும் முன்னரே நம்மை ஆண்டவர் அறிந்து நமது தேவைகளை குறித்து வைத்துள்ளார். அதை ஏற்ற நேரத்தில் செயல் படுத்துவார். ஒவ்வொரு மனிதனுக்கும் ஆண்டவரின் சமுகத்தில் வாழ்வின் நூல் [ஜீவ புஸ்தகம் ] ஒன்று அவரின் கையில் உள்ளது. அவரே முதலும் முடிவும் ஆனவர். வாழ்பவரும் அவரே! சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் அதிகாரம் உடையவர் அவரே. நமக்குள்ளதை நிச்சயம் நிறைவேற்றுவார். மனம் கலங்காதீர்கள். சோர்ந்து போகாதீர்கள்.

என் வாழ்க்கையில் நடந்த ஒரு காரியத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அமெரிக்கா,ஆஸ்திரேலியா நாடுகளைப் பற்றி புத்தகத்தில் படித்துள்ளேன். ஆனால் அதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. 2012ல் bible quiz ல் பங்கு பெற்றதால் அதை வெளியிட்ட father எனக்கு அறிமுகமானார். அவர் அப்பொழுது அமெரிக்காவில் இருந்தார். ஒருநாள் பேசும்பொழுது நான் father இடம் நானும் அமெரிக்கா வருவேன் என்று சொன்னேன். அப்பொழுது அவர்,அமெரிக்கா வரவேண்டும் என்றால் விசா எல்லாம் வாங்க வேண்டும். யார் உங்களுக்கு விசா தருவார்கள் என்று சொன்னார். அப்பொழுது நான் கடவுள் எனக்கு தருவார் என்று கூறினேன். அதன் பிறகு ஆண்டவரிடம் நானும் எப்படியாவது அமெரிக்கா போகவேண்டும் இயேசப்பா, உங்களால் கூடாத காரியம் ஒன்றும் இல்லையே என்று சொல்லி எனக்கு குறித்துள்ளதை நிறைவேற்றும் என்று இந்த வசனத்தை சொல்லி ஜெபம் செய்தேன். அங்கு போவதற்கு எந்த ஒரு சூழ்நிலையும் இல்லாத பட்சத்தில் ஆண்டவர் கிருபையாய் என் வேண்டுதலை கேட்டு 2013 மார்ச் to மே அங்கு போகவும் அந்த நாட்டை சுற்றிப்பார்க்கவும் உதவி செய்தார். இன்று நினைத்தாலும் அது எனக்கு ஆச்சரியமான காரியமாய் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் 2014ல் ஆஸ்திரேலியா நாட்டையும் சுற்றி பார்க்கும்படி உதவி செய்தார். இதற்கெல்லாம் எந்த தகுதியும் எனக்கு இல்லாத பட்சத்திலும் ஆண்டவரின் கிருபை என் வேண்டுதல் கேட்கப்பட்டு என்னுடைய நம்பிக்கையை இரட்டிப்பாக மாற்றினார். இப்பொழுதும் ஆண்டவரின் நாமம் மகிமைப்படவும் நீங்களும் விசுவாசத்தில் உறுதிப்படவும், நம்பிக்கையில் நிலைத்திருக்கவும் இவைகளை சாட்சியாக எழுதுகிறேன்.

அன்பானவர்களே! நம்முடைய தேவன் மிகப்பெரியவர்.ஆண்டவரை அறியாத குடும்பத்தில் பிறந்த என்னை என் தாயின் வயிற்றில் என்னை அழைத்து எனக்கு குறித்து வைத்துள்ள யாவையும் கொடுத்து இந்த நிமிஷம் வரை அழகாக நடத்தி வருகிறார். பல நேரங்களில் பல சோதனைகள் வந்தாலும் அவைகளைப்பற்றி கவலைப்படாமல் ஆண்டவரின் பாதத்தில் அவைகளை வைத்து விட்டு ஒரு சிறு குழந்தைப்போல் என்னை அவரிடத்தில் ஒப்புக்கொடுத்து விடுவேன். அப்பொழுது ஆண்டவர் என்னை ஆற்றி,தேற்றி வழிநடத்துகிறார். ஒரு குழந்தையை ஒரு தாய் அதன் நன்மைக்கு மாத்திரமே அடிப்பார்கள். அதினால் நானும் என்ன கஷ்டங்கள் வந்தாலும் ஆண்டவர் அதை நன்மையாக மாற்றுவார் என்ற உறுதியான நம்பிக்கையோடு இருப்பதால் எனக்கு வரும் கஷ்டத்தில் எல்லாம் ஆண்டவரே எனக்கு உதவி செய்கிறார். எனக்கு உதவி செய்யும் ஆண்டவர் நிச்சயமாக உங்களுக்கும் உதவி செய்வார். நம்பிக்கையோடும், மன உறுதியோடும் இருந்து நீங்களும் நம்முடைய ஆண்டவரின் அதிசயங்களை, அற்புதங்களை பெற்று வாழ வேண்டு மாய் நானும் ஆண்டவரின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். என்னை ஆசீர்வதித்த ஆண்டவர் உங்களையும் ஆசீர்வதிப்பார். உங்களுக்கு குறித்துள்ளதை நிச்சயம் நிறைவேற்றுவார்.

ஜெபம்.

அன்பின் ஆண்டவரே! நீர் இந்த உலகத்தில் வந்து பிறக்கும் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்கும் தேவனாய் இருக்கிறீர். ஒவ்வொருவரும் அவரவர் நம்பிக்கையில் உறுதியாய் இருந்து உமது ஆசீரை பெற்றுக்கொள்ள உதவிச் செய்யும். ஒவ்வொருவருக்கும் நீர் குறித்து வைத்துள்ளதை நிறைவேற்றும்.ஆலோசனை கொடுத்து வழிநடத்தும். ஆசீர்வதித்து காத்துக்கொள்ளும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே! ஆமென்!! அல்லேலூயா!!!

You may also like...

1 Response

  1. sam says:

    I like this and iam change

Leave a Reply

%d bloggers like this: