“நான் உங்களோடு இருக்கிறேன்”என்கிறார் நம் ஆண்டவர். ஆகாய் 1:13

கர்த்தருக்குள் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு  நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள்.

இதோ இந்த நாளிலும் நான் நினைத்த காரியம் எனக்கு கிடைக்கவில்லையே என்று தவிக்கும் உங்களைப் பார்த்து ஆண்டவர் என் மகனே, என் மகளே நீங்கள் கலங்க வேண்டாம், இதோ உங்களுக்கு நன்மை கிடைக்கும்படி நான் உங்களோடு இருக்கிறேன் என்று வாக்கு அருளுகிறார். நான் உங்கள் மேல் வைத்திருக்கும் நினைவுகள் தீமைக்கானவைகளல்ல. அதை நன்மையாக மாற்றி உங்கள் தேவைகள் யாவையும் ஏற்ற நேரத்தில் செய்து கொடுப்பேன். அதற்காகவே நான் எப்பொழுதும் உங்கள் கூடவெ இருக்கிறேன் என்கிறார்.

நாம் எல்லோரும் விரும்பும் ஒரு காரியம் நாம் நினைத்ததை உடனே செய்யவேண்டும், அந்த காரியம் உடனே நடைபெற வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் கடவுள் எல்லாவற்றிக்கும் ஒரு கால நேரத்தை குறித்து வைத்துள்ளார். ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமுண்டு உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலமுண்டு. பிறக்க ஒரு காலம், இறக்க ஒரு காலம், நட ஒரு காலம், நட்டதை அறுவடை செய்ய ஒரு காலம், அழ ஒரு காலம், சிரிக்க ஒரு காலம், துயரப்பட ஒரு காலம்,  துள்ளி மகிழ ஒருகாலம், சேர்ப்பதற்கு ஒரு காலம், இழக்க ஒருகாலம், கிழிக்க ஒரு காலம், தைக்க ஒரு காலம், பேச ஒரு காலம், பேசாமல் இருக்க ஒருகாலம், அன்பு காட்ட ஒரு காலம், வெறுக்க ஒரு காலம் என்று ஆண்டவர் ஒவ்வொரு காரியத்துக்கும் ஒரு முக்கிய கால நேரத்தை உண்டு பண்ணி வைத்திருக்கிறார். ச -உரை 3:1,8

இவற்றையெல்லாம் அறிந்து நாம் பொறுமையோடும், பக்தியோடும், அன்போடும், நம்பிக்கையோடும் நடந்து நமக்கு ஏற்படும் துன்ப நேரத்தில் அவரையே உற்று நோக்கி, எந்த ஒரு முறுமுறுப்பும் இல்லாமல் அவரின் பாதத்தில் நம் இருதயத்தை ஊற்றி ஜெபித்தோமானால் உள்ளம் உருகும் ஆண்டவர் நம்மேல் மனதுருகி நாம் வேண்டிக்கொண்டதை நிறைவேற்றி தர நம்மோடு கூடவே இருக்கிறார். நம்முடைய எந்த தேவைகளையும் சந்தித்து, நாம் விரும்புவதற்கும் வேண்டிக்கொள்வதற்கும் அதிகமாகவே தர காத்திருக்கிறார்.

அன்பானவர்களே! இந்த உலகில் அவரை அறிந்து, அவரையே நம்பி வாழும் ஒவ்வொருவரும் பாக்கியவான்கள், பாக்கியவதிகள். வேறு யாருக்கு இப்படியொத்த காரியத்தை செய்யும் கடவுள் உள்ளார்? அவரின் மேன்மையையை முற்றிலும் உணர்ந்து அவர் நமக்காக சிலுவை சுமந்து, நம் பாவத்தை போக்க தம்மையே ஜீவபலியாக ஒப்புக்கொடுத்ததை ஒவ்வொரு நாளும் நினைவு கூர்ந்து இந்த தவக்காலத்தின் மேன்மையையையும், மகத்துவத்தையும் அறிந்து அவரையே போற்றி, துதித்து, ஆராதித்து அகமகிழ்வோம். அப்பொழுது அவர் நம்மோடு கூடவே இருப்பார்.

ஜெபம்

அன்பின் பரலோக தெய்வமே! உம்மை போற்றுகிறோம், துதிக்கிறோம், நீர் எங்களுக்காக பட்ட பாடுகளை ஒவ்வொருநாளும் நினைத்து உம்மை ஆராதிக்கிறோம். எங்கள்மேல் கிருபை வைத்து, காத்து வழிநடத்தி, உமது இறக்கைக்குள் மூடி பாதுக்காத்துக்கொள்ளும். ஒவ்வொரு நாளும் கூடவே இருந்து எங்கள்மேல் உமது கண்ணை வைத்து, எங்களுக்கு ஆலோசனை கொடுத்து உமது தூய ஆவியின் மூலம் வழிநடத்தி ஆசீர்வதித்து போதித்து காத்துக்கொள்ளும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம் எங்கள் ஜீவனுள்ள பிதாவே!ஆமென்!! அல்லேலூயா!!!.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: