”நீங்களும் நுழைவதில்லை; நுழைவோரையும் தடுக்கிறீர்கள்” (லூக்கா 11:52)

இயேசு பரிசேயரையும் மறைநூல் அறிஞரையும் மிகக் கடுமையாகக் கண்டித்துப் பேசிய பகுதி (காண்க: லூக்கா 11:37-54) பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது. ”ஐயோ! உங்களுக்குக் கேடு!” என்று இயேசு கூறுவது இயேசுவின் சாந்தமான குணத்திற்கு நேர்மாறாக இருப்பதுபோல் தோன்றலாம். ஆனால், இயேசு கண்டிப்பது அக்கால சமய, மற்றும் சமூகத் தலைவர்களிடம் காணப்பட்ட குறைகளை மட்டுமல்ல, மாறாக அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட நேரிய நடத்தை என்னவென்பதையும் இயேசு உணர்த்துகிறார். அதே நேரத்தில், இயேசு கண்டித்த குறைகளும் அவர் போற்றியுரைத்த நடத்தையும் இன்று வாழ்கின்ற நமக்கும் பொருந்தும். தாமும் நுழையாமல் பிறரையும் நுழையவிடால் செயல்படுவது எதைக் குறிக்கிறது? வீட்டு வாசலில் ஒருவர் நிற்கிறார் என வைத்துக்கொள்வோம். ஒன்றில் அவர் வீட்டுக்குள் நுழைய வேண்டும் அல்லது வாயிலை அடைத்துக்கொண்டு நிற்காமல் அங்கிருந்து வெளியேறிட வேண்டும். அப்போது வீட்டுக்குள் பிறர் நுழைய முடியும். இதையே இயேசு ஓர் உருவகமாகக் கொண்டு இறையாட்சி பற்றிய ஆழ்ந்த உண்மையை விளக்குகிறார்.

நுழைதலும் நுழையவிடுதலும் நம் வாழ்வில் அன்றாடம் நிகழ்கின்ற அனுபவங்கள். கடவுளின் விருப்பத்திற்கு ஏற்ப நாம் நடக்கும்போது, அவரிடத்தில் முழுமையாக நம்மைக் கையளிக்கும்போது நாம் அவருடைய ஆட்சியில் நுழைகிறோம் எனலாம். அதுபோல, பிறர் நம்மைக் காணும்போது நம் வாழ்வில் கடவுளின் பண்புகள் துலங்குகின்றன என உணர்ந்து, அதே பண்புகளைத் தம் வாழ்விலும் கடைப்பிடிக்க முன்வரும்போது நாம் அவர்கள் இறையாட்சியில் நுழைவதற்கு வழியாகின்றோம் (காண்க: லூக்கா 11:42).. இதுவே தூயவர்களின் வாழ்க்கையில் நாம் காண்கின்ற உயர்ந்த நெறி. அன்னை தெரசாவின் வாழ்க்கையைப் பார்த்தால் இவ்வுண்மை தெளிவாகத் துலங்கும். சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களை அவர் கடவுளின் பிள்ளைகள் என்றுதான் பார்த்தாரே தவிர மனித மாண்பு இல்லாத பொருள்களாகக் கருதவில்லை. கடவுளிடம் துலங்குகின்ற அன்பும் இரக்கமும் நம் வாழ்விலும் துலங்கும்போது இறையாட்சியில் நாமும் நுழைவோம், பிறரும் அந்த ஆட்சியில் பங்கேற்று அதில் நுழைவதற்கு நாம் கருவிகளாகச் செயல்படுவோம். அப்போது ”நீங்களும் நுழைவதில்லை; நுழைவோரையும் தடுக்கிறீர்கள்” என்று இயேசு கூறிய சொற்கள் நமக்குப் பொருந்தாது எனலாம். அந்த அளவுக்கு நம் வாழ்க்கை விளங்குகிறதா?

மன்றாட்டு
இறைவா, இறையாட்சியில் நாங்கள் நுழைந்திட இயேசுவை வாயிலாகத் தந்ததற்கு உமக்கு நன்றி!

~அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: