இவர்களில் நாம் யார்?

இன்றைய நற்செய்தியில் (யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 40-53) மூன்று வகையான கதைமாந்தர்களையும், அவர்களின் எண்ண ஓட்டங்களையும் பார்க்கிறோம். இவர்கள் ஒவ்வொருவருமே, பலதரப்பட்ட மனிதர்களைப்பிரதிபலிக்கிற பிம்பங்களாக இருக்கின்றனர். இவர்களில் நாம் யாராக இருக்கிறோம்? யாராக இருக்க வேண்டும்? என்னும் கேள்வியோடு இவர்களைப்பார்ப்போம்.

1. காவலர்கள்: தலைமைக்குருக்களாலும், காவலர்களாலும் இயேசுவைக் கைதுசெய்வதற்காக அனுப்பப்பட்டவர்கள் காவலர்கள். அவர்களுக்கு தலைமைக்குருக்களின் அதிகாரம் நன்றாகத்தெரியும். அவர்கள் சொல்வதைத் தாங்கள் செய்யவில்லை என்றால், அதனால் வரும் விளைவுகளும் நன்றாகத்தெரியும். ஆனாலும், அவர்களின் துணிவு நம்மை வியக்கவைக்கிறது. நிச்சயம் அவர்களை அனுப்பிய தலைமைக்குருக்களுக்கு இது ஒரு அதிர்ச்சியான செய்திதான். ஆனாலும் அந்த அதிர்ச்சியை வெளிக்காட்டிக்கொள்ளாமல், ‘நீங்களும் ஏமாந்துபோனீர்களா?’ என்று தங்களது ஏமாற்றத்தை வெளியே காட்டாமல், அவர்களைப்பார்;த்து முணுமுணுக்கிறார்கள். காவலர்களின் உடல் மட்டுமல்ல, உள்ளமும் வீரம் என்பதற்கு அவர்களின் சாட்சியம் சிறந்த எடுத்துக்காட்டு. சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் அவர்களுக்கு இடம் இல்லையென்றாலும், அவர்களின் நேர்மை நமக்கெல்லாம் மிகப்பெரிய படிப்பினை.

2. நிக்கதேம்: படித்தவர், மிகப்பெரிய பதவியிலே இருக்கிறவர். செல்வாக்குப்பெற்றவர். இயேசுவுக்கு எதிராக நடக்கும் அனைத்து சதிகளையும் முழுமையாக அறிந்திருக்கிறவர். இயேவுக்கு எதிராகச் சாட்டப்படும் அனைத்தும் ஆதாரமற்றவை, தவறானவை என்பதும் அவருக்குத்தெரியும். ஆனாலும், துணிவோடு உண்மையைச்சொல்வதற்கு தயங்குகிறார். காரணம் தனது இந்த செல்வாக்குமிக்க வாழ்வுக்கு ஆபத்த வந்தவிடுமோ? என்கிற பயம். இயேசுவின் சார்பில் நிற்க வேண்டும், ஆனாலும் பாதுகாப்பான நிலையிலிருந்து கேட்க வேண்டும். தனது பாதுகாப்பிற்கு ஆபத்து வருகின்றபோது, ஒதங்கிக்கொள்ள வேண்டும் என்கிற மனநிலையை நிக்கதேம் பிரதிபலிக்கிறார். சுயநலம் என்கிற வார்த்தைக்கு முழுஇலக்கணம் இந்த நிக்கதேம்.

3. தலைமைக்குருக்கள் மற்றும் பரிசேயர்கள்: தங்களை எப்போதும் உயர்ந்தவர்களாக நிலைநிறுத்திக்கொள்கிறவர்கள். தங்களின் அந்த உயர்ந்த நிலைக்கு ஒருபோதும் ஆபத்து வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறவர்கள். அதற்காக எதையும் செய்யத்தயாராக, வேண்டுமென்றால் கொலையும் செய்வதற்குத்துணிந்தவர்கள். உண்மையை ஏற்க மனமில்லாத கோழைகள். மற்றவர்களின் கருத்துக்களுக்கு தங்களின் செவிமடல்களை மூடிக்கொள்கிறவர்கள். மற்றவர்களின் எண்ணங்களுக்கும், சிந்தனைகளுக்கும் மதிப்பு கொடுக்காத மனநிலையை இவர்கள் பிரதிபலிக்கிறார்கள்.

~ அருட்பணி. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.