உண்மை உரக்க ஒலிக்கட்டும்

30.06.2018 – மத்தேயு 8: 5 – 17
புலம்பல் நூல் 2: 2, 10 – 14, 18 – 19

“உன் இறைவாக்கினர் உனக்காகப் பொய்யும் புரட்டுமான காட்சிகளைக் கண்டனர். நீ நாடு கடத்தப்பட இருப்பதைத் தவிர்க்குமாறு, உன் நெறிகேடுகளை அவர்கள் உனக்கு எடுத்துச் செல்லவில்லை” என்று, எரேமியா இறைவாக்கினர் கூறுகிறார். இது யூதர்கள் பாபிலோனியர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட நிகழ்வையும், அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் படம்பிடித்துக் காட்டுகிறது. அந்த தருணத்தில், இறைவாக்கினர் எரேமியா அரசனிடம், பாபிலோனியர்களிடம் சரணடைந்து விடுவதுதான், நாட்டிற்கு நல்லது என்றும், அதுதான் கடவுளின் வார்த்தை என்றும் அரசனுக்கு அறிவித்தார். ஆனால், அரசர் பொய்யான இறைவாக்கினர்களின் பேச்சைக் கேட்டு அதனை நம்பி மறுத்து, இத்தகையை இழிநிலையை, மக்களுக்கு கொண்டு வந்துவிட்டான் என்று வருத்தப்படுகிறார்.

யூதாவின் கடைசி காலத்தில் ஏராளமான போலி இறைவாக்கினர்கள் வாழ்ந்து வந்தனர். இதனை இறைவாக்கினர் எரேமியாவும், எசேக்கியாவும் எடுத்துரைத்தனர். போலி இறைவாக்கினர்கள் கடவுள் என்ன சொல்கிறார்? என்று கூறுவதை விட, அரசனுக்கு எது மகிழ்ச்சியைத் தருமோ, அதனை அறிவித்து அவனுடைய நற்பெயரைப் பெறுவதில் போட்டி போட்டுக்கொண்டனர். ஆனால், உண்மையான இறைவாக்கினர்களோ, அரசருக்கு மகிழ்ச்சியோ, கவலையோ அது முதன்மையல்ல. மாறாக, கடவுள் என்ன சொல்கிறாரோ, அதனைச் சொல்வது தான், தங்கள் கடமை என்று, அதனைத் துணிந்து சொல்கின்றனர். போலி இறைவாக்கினர்களின் கூற்றுப்படி, கடவுள் பாபிலோனியர்களிடமிருந்து அரசனையும், நாட்டினையும் மீட்பார். ஆனால், எரேமியா அதற்கு எதிரான கருத்தைக் கூறியதால், சிறையில் அடைக்கப்படுகிறார். உண்மைக்கு அல்ல, பொய்மைக்குத்தான் மதிப்பு தரப்படுகிறது.

இன்றைக்கு நாம் வாழும் சமூகத்திலும், போலித்தனத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. உண்மையான நட்பிற்கோ, உறவுக்கோ இங்கு மதிப்பு இல்லை. பொய்மைக்கு முதன்மையான இடம் தரப்படுகிறது. இப்படிப்பட்ட உலகத்தில் பொய்மையைப் பழித்துரைப்பதை விட, நாம் உண்மையான உறவுகளாக வாழ்வதில் முனைப்பு காட்டுவோம். உண்மைக்காக குரல் கொடுப்போம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.