உயிர்த்த இயேசுவின் சாட்சியமாய் மாறுவோம்

இயேசுவின் உயிர்ப்பு நிகழ்விற்கு பல சான்றுகள் இருந்தாலும், இயேசுவோடு மூன்றாண்டுகள் வாழ்ந்த சீடர்கள் தான் மிகப்பெரிய சாட்சிகள். இயேசு அவர்களோடு இருந்தபோது வாழ்ந்த வாழ்க்கைக்கும், உயிர்த்த இயேசுவைக்கண்டபிறகு அவர்கள் வாழ்ந்த வாழ்விற்கும் இடையேயான வேறுபாடு மிகப்பெரியது. இயேசுவோடு வாழ்ந்தபோது, தங்களுக்குள் யார் பெரியவர்? என்று சண்டையிட்டுக்கொண்டனர். கடலில் பயணம் செய்தபோது, சீறிஎழுகிற அலைகளைப்பார்த்து, கூச்சல்போட்டு மரணபயத்தில் கத்தினர். தீய ஆவிகளை ஓட்டுவதற்கு இயேசுவால் வல்லமை கொடுக்கப்பட்டிருந்தும், விசுவாசமின்மையினால் அந்த ஆற்றலைப்பயன்படுத்த திறனற்றிருந்தனர். இயேசுவுக்கு ஆபத்து என்று வந்தபோது, அவரைவிட்டுவிட்டு ஓடினர். இயேசு இறந்தபிறகு அறைகளில் தங்கள் உயிரைப்பாதுகாத்துக்கொள்ள பதுங்கியிருந்தனர். இந்த அளவுக்கு பயந்த, கோழைத்தனமான வாழ்வு வாழ்ந்த சீடர்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் வந்தது என்றால், அதற்கு காரணம் இயேசுவின் உயிர்ப்புதான் என்பதை ஆணித்தரமாக நம்மால் கூறமுடியும்.

இன்றைய நற்செய்தியில் சீடர்களின் வாழ்வு மாற்றம் பெறக்காரணமான உயிர்த்த இயேசுவின் காட்சியை நாம் பார்க்கிறோம். இந்த உயிர்ப்பு அனுபவம் தான் சீடர்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. சாவைப்பார்த்து நடுங்கிக்கொண்டிருந்த அவர்களுக்கு வாழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்தியது. இயேசுவோடு அவர்கள் தங்கியிருந்தபோது கற்றுக்கொண்ட பாடங்கள் இப்போது அவர்களுக்கு அனுபவமாக மாறியது. ஆண்டவரின் வார்த்தை அவர்களின் உள்ளத்தை ஊடுருவியிருந்தது. அவர்களின் வாழ்வு மாற்றம் பெற்றது. தங்களின் உயிரைப் பெரிதாக மதித்துக்கொண்டிருந்து அவர்களுக்கு, மற்றவர்களின் ஆன்மாவை மீட்கும் பொறுப்பின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டது. இயேசுவுக்காக எதையும் இழப்பதற்கு தயாராக இருக்கக்கூடிய மாற்றத்தை இந்த உயிர்ப்பு அனுபவம் அவர்களுக்கு கொடுத்தது.

உயிர்த்த இயேசுவின் அனுபவத்தை நாம் அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும். அது ஓர் ஆழமான நம்பிக்கை. நம் வாழ்வையே புரட்டிப்போடக்கூடிய வாழ்க்கை அனுபவம். அத்தகைய உயிர்ப்பு அனுபவத்தைப்பெறுவதற்கு நமக்குத்தேவை ஆழமான விசுவாசம். அந்த ஆழமான விசுவாசம்தான் இயேசுவினுடைய சீடர்களின் வாழ்வை அப்படியே புரட்டிப்போட்டது. இன்று உலகெங்கும் ஆண்டவர் இயேசுவைப்பற்றிய் விசுவாசம் தழைத்தோங்கியதற்கு இந்த ஆழமான விசுவாசம்தான் காரணம். அத்தகைய ஆழமான விசுவாசத்தை, உயிர்த்த இயேசுவிடம் கேட்டு மன்றாடுவோம்.

~ அருட்பணி. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.