விழிப்போடு செயல்படுவோம்

ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். அவருக்கு போதுமான அளவு நிலம் இருந்தது. அந்த நிலத்தில் அவர் இட்ட பயிர்கள் நன்கு விளைந்து நல்ல பலனைக் கொடுத்து வந்தது. அந்த குடும்பம் சந்தோஷமாக வாழவேண்டிய அளவுக்கு கடவுள் அந்த குடும்பத்தை ஆசீர்வதித்து வைத்திருந்தார்.

ஒருநாள் அந்த ஊரில் ஒரு விளம்பரம் ஒளிபரப்பட்டது. அதில் பக்கத்து கிராமத்தில் அந்த ஊர் மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு திருவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதை மற்ற கிராமத்து மக்களுக்கும் தெரியப்படுத்தி எல்லோரும் வந்து அந்த திருவிழாவில் கலந்துக்கொள்ள வேண்டும் அழைப்பு விடுத்தனர். அதுவே அந்த விளம்பர ஒளிப்பரப்பு.

இந்த விவசாயி இதைக்கேட்டு அந்த ஊருக்கு போய் தானும் அந்த திருவிழாவில் கலந்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்து தன் வீட்டில் உள்ளவர்களிடம் தெரியப்படுத்தினார். அவர்களும் மறுப்பு ஏதும் சொல்லாமல் சம்மதித்தனர்.

விவசாயி புறப்பட்டு சென்றார். அந்த திருவிழாவில் நிறைய கலை நிகழ்ச்சிகள் இருந்தன. இவர் ஒவ்வொன்றாக பார்த்து வந்தார். ஒரு இடத்தில் ஒரு ரூபாய் போட்டால் இரண்டு ரூபாய் கிடைக்கும் என்று ஒரு விளம்பரப்பலகையை பார்த்தார். இவருக்கு அதில் ஆசை ஏற்பட்டு அந்த விளையாட்டை விளையாடினார். முதலில் அவர் நினைத்த மாதிரி பணம் சம்பாதித்தார். பிறகு கொஞ்ச நேரம் கழித்து தோற்க ஆரம்பித்தார். ஆனாலும் தான் போட்ட பணத்தை எடுத்தே தீருவேன்
என்று சொல்லி மேலும், மேலும் விளையாடி தான் கொண்டு சென்ற பணத்தையெல்லாம் இழந்தும், அதை விட்டு வெளியே வராமல் பக்கத்தில் கடன் வாங்கி விளையாட ஆரம்பித்து அதிலும் தோல்வியேக்கண்டும் அதில் இருந்து விடுபடாமல் அதற்கு அடிமையாகி விட்டதுபோல் இருந்தார்.

இப்படித்தான் சிலர் விளையாட்டுத் தனமாக ஆரம்பிக்கும் சில வீணான பழக்கங்களுக்கு அடிமையாகி குடிபோதைக்கும், சூதாட்டத்துக்கும், இன்னும் சில தவறான போதை பழக்கங்களுக்கும் அடிமையாகி தங்களையும் கெடுத்து தங்கள் குடும்பங்களையும் மறந்து, அவர்களை துயரத்தில் ஆழ்த்தி தாங்கள் என்ன செய்கிறோம் என்று அறியாமல் மீளாத்துயரத்துக்கு ஆளாகிவிடுகிறார்கள். விளையாட்டு போல செய்ய ஆரம்பிக்கும் இதுமாதிரியான பாவம் அவர்களை கொஞ்ச, கொஞ்சமாக அடிமைப்பட்டு போய்விடும்படி செய்துவிடுகிறது. நமது எதிராளியான சாத்தான் அநேகரை இம்மாதிரி காரியங்களை செய்யும்படி செய்து அவன் விரிக்கும் வலையில் விழும்படி செய்துவிடுகிறான்.

கடவுள் கொடுக்கும் பெலத்தினாலும், தூய ஆவியினாலும், அன்பினாலும் நிறைந்து இதுமாதிரியான பாவங்களுக்கு விலக்கி காத்து கொள்ளவே வேதம் வாசித்து தியானித்து அதன்படியே வாழவேண்டுமாய் ஆண்டவர் நமக்கு வழியைக் காட்டுகிறார்.

அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய பிசாசு யாரை விழுங்கலாமெனக் கெர்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது. ஆகையால் அசையாத் நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள். உலகம் எங்கும் உள்ள நம்முடைய சகோதரர், சகோதரிகள் இவ்வாறே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை அறிந்திருக்கிறோம் அல்லவா? எல்லா அருளும் நிறைந்த கடவுள் இயேசுகிறிஸ்துவுக்குள் என்றும் நிலைக்கும் அவரின் மாட்சியில் பங்குகொள்ளவே நம்மை அழைத்திருக்கிறார், என்பதை ஒருபோதும் மறவாமல் விழிப்போடு செயல்படுவோம்.1 பேதுரு 5 : 8,9,10.

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.