சோதனைகளிலும் மாதா இறைவனோடு இணைந்திருந்தார்

மாதாவின் வணக்க மாதத்தையொட்டிய சிறப்புக் கட்டுரை

matha-mother-maryதிருவிவிலியம் தூய கன்னி மரியாவைப் பேறு பெற்றவர் என்று எதனால் அழைக்கின்றது? மாதா கூட தாம் பேறுபெற்றவர் என்றும், எல்லாத் தலைமுறையினரும் தம்மைப் பேறுபெற்றவர் என்று அழைப்பர் என்றும் கூறுகின்றார். (லூக் 1 : 48). வேறு எவருக்கும் கிடைக்காத நான்கு அருளை ஆண்டவர் மாதாவுக்குக் கொடுத்தார். கத்தோலிக்கத் திருச்சபையும் மாதாவைக் குறித்து நான்கு மறையுண்மைகளைப் போதிக்கின்றது.

அவை முறையே மாதா இறைவனின் தாய். நித்திய கன்னி, ஜென்ம பாவமில்லாமல் பிறந்த அமலோற்பவ மாதா மற்றும் விண்ணேற்பு அடைந்தவர். இந்த மாபெரும் அருளைப் பெற்றதால் அல்ல அவர் பேறுபெற்றவர் என்று அழைக்கப்படுவது.

மாறாக அவரது நம்பிக்கையால்தான். ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர் (லூக் 1 : 45). யோவான் நற்செய்தியில் இயேசு இரண்டு நற்பேற்றைக் குறித்து கூறியுள்ளார். ஒன்று : பிறருக்குச் செய்யும் சேவை (13 : 17); இரண்டு : காணாமலே நம்புவது (20 : 19). மாதாவிடம் இந்த நம்பிக்கை இருந்ததால்தான் அவர் பேறுபெற்றவர் ஆனார்.

எல்லா சோதனைகளையும் ஏற்றுக்கொண்டவர்

மாதாவைக் குறித்து சிந்திக்கும் போது. அவர் உண்மையில் மனிதப் பிறவி தானா? என்ற சந்தேகம் வரும். அவர் நம்மிடமிருந்து எவ்வளவோ மாறுபட்டவராகக் காணப்படுகின்றார். இயேசுவைப் போலவே மாதாவும் எல்லா சோதனைகளையும் ஏற்றுக் கொண்டார். பலவிதமாகச் சோதிக்கப்பட்டார். நம்பிக்கையிலும் அவர் நம்மைப் போலவே சோதிக்கப்பட்டார். ஆனால் நாளுக்கு நாள் மேன்மேலும் நம்பிக்கையில் வளர்ந்தார்!

மாதாவிடம் கபிரியேல் வான தூதர் மங்கள வார்த்தை அறிவித்த போது மாதா அதை ஏற்றுக்கொண்டார். உடனே இறைவார்த்தை மாதாவிடம் தங்கியது. அவர் கருத்தரித்த போது தாம் கருவுற்றிருப்பதை அவரால் மறைக்கவும் முடியவில்லை. எப்படி அவர் கருத்தரித்தார் என்பதற்கு சரியான விளக்கமும் கொடுக்க முடியவில்லை.

தமக்கு மண ஒப்பந்தமான யோசேப்பிடம் என்ன சொல்வது என்று அவர் கண்டிப்பாகக் கலங்கியிருப்பார். கவலைப்பட்டிருப்பார். தமது மணமகளை யோசேப்பு காணச் சென்ற போது மரியா கருவுற்றிருப்பதை அறிய நேர்ந்ததால் அவருடைய மனம் எப்படி துடித்திருக்கும் அவர் மறைவாக அழுதிருப்பார் எப்படி ஒரு மனிதனால் அதைத் தாங்கிக் கொள்ள முடியும்? அது தான் மாதாவின் இதயத்தில் பாய்ந்த முதல் வாளாக இருந்திருக்கும் மாதா

மாதாவின் வாழ்க்கையில் தோன்றிய மாபெரும் சோதனைதான் கல்வாரியில் தம் ஒரே மகனான இயேசுவின் பெருந்துன்பங்களும் இறப்பும். இயேசு ஆடை எதுவுமின்றி, ஓர் அடிமையைப் போல் சிலுவையில் அழுது இறந்தார். சிலிவையில் இறப்பவர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்பதுதான் இஸ்ரயேலின் அக்கால எண்ணம்.

இந்த இயேசு உண்மையில் இறைமகன் தானா? இறைவனின் தேஜஸ். மாட்சிமை, வல்லமை, மாண்பு, பெருமை, சிறப்பு எதுவும் இவரது முகத்தில் இல்லையே! திருத்தூதர்களும் சீடர்களும் இயேசுவை விட்டு ஓடிப் போனது அவர்கள் யூதர்களுக்கு அஞ்சியதால் மட்டுமல்ல, தாங்கள் நினைத்ததைப் போன்ற தெய்வீகம் இந்த இயேசுவிடம் காணப்படாததாலும் கூடத்தான்.

mother-mary-prayingமாதாவின் நம்பிக்கை உச்ச கட்ட சோதனைக்குட்பட்டது புனித சனியன்றுதான்! இறந்து நிறம் மங்கி, கட்டைபோல் அடக்கம் செய்யப்பட்டவரிடம் மாதா என் மகனே ! என் இறைவா! என் ஆண்டவரே! என்று சொல்லியிருந்தால், அது தான் அற்புதமான நம்பிக்கை! இறந்து போனவரை நோக்கி நாம், என் இறைவா! என் கடவுளே! என்று சொல்வோமா? யாராவது சொல்வார்களா? ஆனால் மாதா சொன்னார்! அது தான் நம்பிக்கையின் மகுடமாகத் திகழ்கின்றது!

தொமினிக்கன் சபையைச் சேர்ந்தவர்களுக்கு மாதாவைக் குறித்து ஒரு மன்றாட்டு மாலை உள்ளது. அதில் பின்வரும் மன்றாட்டு உள்ளது. புனித சனிக்கிழமையன்றும் இயேசு கடவுள் என்று நம்பிய மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். இது ஓர் அற்புதமான மன்றாட்டு. நாம் தினந்தோறும் சொல்லி மன்றாட வேண்டிய ஒரு மன்றாட்டு. புனித சனியன்று இயேசு இறை மகன் என்று நம்பிய மாதாவின் முன் உயிர்த்தெழுந்த இயேசு தமது முழு மாட்சிமையில் தோன்றிய போது மாதா எந்த அளவுக்கு சந்தோஷப்பட்டிருப்பார் அவரது நம்பிக்கை மெய்ப்பிக்கப்பட்டது அல்லவா?

நம்பிக்கை இல்லாமல் போவது

நம்பிக்கை என்னும் காரியத்தில் மிகவும் கடினமான சோதனைக்குள்ளானவர் கண்டிப்பாக கன்னி மரியாதாம். நம்பிக்கை கொண்டோரின் தந்தை என்று அழைக்கப்படும் ஆபிரகாமும் பழைய ஏற்பாட்டு நேர்மையாளரான யோபுவும் மாதாவுக்கு நிகராக மாட்டார்கள்! அவ்வளவு கொடிய சோதனைகளை மாதா ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.

இருந்தும் அவர் நம்பிக்கையில் நிலைத்திருத்தார். உறுதியாக இருந்தார். ஒரு சிறுசோதனை வந்தால்கூட பலர் இறைவனைவிட்டு விலகி விடுகின்றனர். நாற்பது ஆண்டுகள் சோதனைக்குள்ளான போது இஸ்ரயேலர் கூட இறைவனிடமிருந்து விலகினர். அவர்களுள் பலர் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முணுமுணுத்தனர். தங்களுக்கென ஒரு தலைவனை நியமித்துக் கொண்டு எந்த எகிப்திலிருந்து தப்பியோடி வந்தனரோ அதே எகிப்துக்கு மீண்டும் அடிமைகளாகச் செல்ல நினைத்தனர் (எண் 14 : 1 – 4).

யோபுவின் பிள்ளைகள் அனைவரும் இறந்தனர். அவரது சொத்துக்கள் அனைத்தும் அழிந்தன. யோபுக்கு கொடிய நோய் வந்தது அவரது காயங்களில் புழு அரித்தது. அவரது நண்பர்கள் அவரை விட்டு விலகிச் சென்றனர். ஆனால் அவர் இறைவனைப் போற்றித் துதிப்பதை மட்டும் நிறுத்தவில்லை. அவரது மனைவி கூட பின்வருமாறு பரிகாசம் செய்தாள்: இன்னுமா மாசின்மையில் நிலைத்திருக்கிaர்! கடவுளைப் பழித்து மடிவதுதானே? (யோபு 2 : 9). சோதனை வந்தபோது அவள் கடவுளை விட்டு விலகினாள்.

ஆண்டவர் இயேசு திவ்விய நற்கருணையைப் பற்றி போதித்த போது விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். என்று சொன்ன போது (யோவா 6 : 51), அதுவரை அவரைப் பின்பற்றிய சீடர்களுள் பலர் முணுமுணுத்தனர்.

பலர் அவரை விட்டு விலகினர் (யோவா 6 : 66). ஆனால் தூய கன்னி மரியாவோ இறைவனை விடாப்பிடியாகப் பற்றிக் கொண்டிருந்தார்! பயப்படும் குழந்தை தன் தந்தையின் கழுத்தை இறுக்கி பிடித்து மார்பில் சாய்ந்து கொள்வதுபோல் மாதா ஒவ்வொரு சோதனையிலும் இறைவனைக் கெட்டியாகப் பிடித்து நம்பிக்கையில் உறுதியடைந்தார்! இது தான் மாதாவுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம். நாம் சோதனையில் இறைவனிடமிருந்து விலகிச் செல்கிறோம். ஆனால் மாதா இறைவனோடு இணைந்திருந்தார். நம்பியதால் பேறுபெற்றவரான மாதா வழியில் செல்ல இறைவன் நமக்கு அருள்புரிவாராக!

You may also like...

Leave a Reply

%d bloggers like this: