அன்பின் தின சிறப்பு நிகழ்ச்சி

அன்பானவர்களே!உங்கள் அனைவருக்கும் எங்கள் அன்பான அன்பின் நல்வாழ்த்துக்கள்.

faithhopeloveகடவுள் மனிதனை படைத்து அவன் இதயத்தில் அன்பு என்ற பூவை உருவாக்கி அந்த பூ அந்த மனிதனையும், அவனை சார்ந்த அனைவரையும் மணக்க செய்ய வேண்டுமாய் விரும்பி மனிதனின் இதயத்தில் அன்பை விதைத்தார். ஆனால் நாமோ பிறரை அன்பு என்ற மனம் கொண்டு கவர்ந்து செயல்படுவதை விட்டு, சுயநலம், தற்புகழ்ச்சி, பெருமை, வெறுப்பு, தன்னலம் என்று நமக்கே நமக்கு என்று வாழ்ந்து கடவுளின் வழியில் இருந்து பிரிந்து சென்று பல இன்னல்களை வருவித்து கொள்கிறோம்.

இன்று உலகம் முழுக்க உள்ள அனைத்து மக்களும் கொண்டாடும் காதலர் தினம் அதாவது அன்பின் தினத்திற்கான அர்த்தம் புரியாமல் நம் இஷ்டத்துக்கு வாழ்ந்து பாவத்தை சேர்த்து கொள்கிறோம். காதல் என்றால் அன்பு. அந்த அன்பை நாம் எவ்வாறு கடைப்பிடித்து வாழ்கிறோம் என்று நாம் யோசித்து நம் மனசாட்சியில் குற்றமற்றவர்களாய் வாழ கற்றுக்கொள்வோம். காதலர் தினம் கொண்டாடுவது தவறு இல்லை. ஆனால் அதை எப்படி எந்த நோக்கோடு கொண்டாடுகிறோம் என்பதை சித்தித்து பார்ப்போம். நம் ஆண்டவர் அன்பாகவே இருக்கிறார். அந்த அன்பை நிலைநாட்டவே அவர் மானிட அவதாரம் எடுத்து ஒரு சாதாரண குழந்தையாய் இந்த உலகத்தில் பிறந்து வளர்ந்து, நம்மேல் அன்புக்கொண்டு தமது உயிரையே கொடுத்தார். அதனால்தான் பவுல் கிறிஸ்துவின் அன்பிற்கு உயரம், நீளம், அகலம், ஆழம் இல்லை என்று உணர்ந்து அந்த அன்பின் ஆழமானது நம் அறிவுக்கு எட்டாதது என்றும் அதை அறிந்துக்கொள்ளும் ஆற்றலை பெற்றுக்கொண்டு கடவுளின் முழு நிறைவையும் நாமும் பெற்றுக்கொள்ளவேண்டுமாய் கூருகிரார். எபேசியர் 3:18,19.

நம் எல்லார் மூலமும் செயலாற்றும் ஆண்டவர் ஒருவரே! அவரே எல்லாருக்கும் மேலானவர். அவரே அன்புள்ளவர். அவரின் அன்பு மட்டுமே மாறாதது. அந்த அன்பு நமக்கு இல்லையேல் ஒலிக்கும் வெண்கலமும், ஓசையிடும் தாளமும் போலாவோம். நாம் வானதூதர் மொழி பேசினாலும் அதனால் என்ன பயன்? நாம் இறைவாக்கு உரைக்கலாம், ஏன்? மறைபொருள்களை கூட வெளிப்படுத்தலாம். சிறந்த நம்பிக்கை கூட கொண்டிருக்கலாம். நமக்கு உள்ளதை எல்லாம் வாரி, வாரி வழங்கலாம். நம் உடலையும் சுட்டெரிக்க கொடுக்கலாம், ஆனால் இவை எல்லாவற்றிலும் அன்பு இல்லாவிட்டால் அதனால் என்ன பயன்? ஒரு பயனும் இல்லை. ஏனெனில் இவைகளை நாம் எப்படி, எதற்காக செய்கிறோம் என்று ஆராய்ந்து பார்ப்போம். நம் பெருமைக்காகவுமா ? அல்லது நம்மை எல்லாரும் பாராட்ட வேண்டும் என்ற சுயநலமா? அல்லது தற்புகழ்ச்சிகாகவும் செய்கிறோமா? என்று யோசித்து கடவுளின் திருவுளச்சித்தப்படி வாழ முடிவு எடுப்போம்.

ஏனெனில் உண்மையான அன்புக்கு பொறாமை இல்லை. அது பொறுமையானது. தற்புகழ்ச்சியும் கொள்ளாது, இறுமாப்பும் அடையாது. அது இழிவானதை செய்யாது,நன்மையே செய்யும். தன்னலம் நாடாது, எரிச்சல் படாது, யாருக்கும் எந்த தீங்கும் நினையாது. உண்மையில்மட்டுமே சந்தோஷம் கொள்ளும்.

அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும், அனைத்தையும் நம்பும், நம் அறிவு ஒருநாள் அழிந்து போகும், ஆனால் அன்போ என்றும் அழியாது. அன்பு, நம்பிக்கை, எதிர்நோக்கு இவை எல்லாவற்றிலும் அன்பே பெரியது, உயர்வானது, சத்தியமானது. இந்த நாளிலும் அந்த அன்பை பெற்ற நாம் எல்லோரிடமும் அன்போடு இருப்போம்.

இந்த நாளில் ஒரு புதிய தீர்மானம் எடுத்து ஆண்டவரின் கட்டளைகளில் பெரிதான கட்டளையான, நாம் நம்மை நேசிப்பதுபோல் பிறரையும் நேசித்து கடவுளின் மன விருப்பத்தை நிறைவேற்றுவோம். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு எந்த ஒரு செயலுக்கும் ஆணித்தரமான அடிச்சுவடை கடைப்பிடித்து வாழ்ந்து பிறரை சந்தோஷப்படுத்துவோம். அப்பொழுது இந்த நாள் உண்மையில் ஒரு சிறந்த நாளாக அன்பின் நாளாக திகழும் என்பதில் நமக்கு எந்தவித ஐயப்பாடும் உண்டோ?

இருதயத்தில் தோன்றும் அன்பானது ஆற்று வெள்ளம் போல் அடித்துக்கொண்டு போகாது. அது நீரூற்றைப் போன்றது. மழை பொழியும் போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் இருகரையும் தொட்டுக்கொண்டு போகும். ஆனால் அது சில நாளில் வற்றிவிடும். ஆனால் நீரூற்றிலிருந்து தோன்றும் தண்ணீர் இரைக்க, இரைக்க வற்றாமல் ஊறிக்கொண்டே இருக்கும். அதுப்போல் நம் உள்ளத்தில் தோன்றும் அன்பும் பிறர்க்கு கொடுக்க, கொடுக்க அது வற்றாமல் நீரூற்றைப்போல் அதிகதிகமாய் சுரந்துக்கொண்டே [ஊறிக்கொண்டே] இருக்கும். அந்த அன்பு தேனைப்போல் மிகவும் மதுரமாய் இருக்கும்.அந்த அன்பே என்றும் வற்றாத ஜீவநதி ஆகும்.

ஜெபம்

அன்பே உருவான இறைவா! உமது அன்பில் தான் எத்தனை இன்பம், மகிழ்ச்சி அதை நாங்கள் இன்னும், இன்னும், ஆழமாய் உணர்ந்து அறிந்து செயல்பட எங்களுக்கு போதித்து வழிநடத்தும். ஒரு தினத்தை வெறுமனே கொண்டாடாமல் அதன் பொருள், விளக்கம், செயல்பாடு ஆகியவற்றை அறிந்து உணர்ந்து செயல்பட உதவி செய்யும். எங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர் வதித்து காத்துக் கொள்ளும். எல்லாம் மகிமையும், புகழும் உமக்கே உரித்தாகட்டும்.  ஆமென்! அல்லேலூயா!!!

(Written by : Sara, MyGreatMaster.com)

You may also like...

Leave a Reply

%d bloggers like this: