யார் பெரியவர்?

பிரியமானவர்களே!!  இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். நாம் நம்மை அறியாமல் அநேக வேளைகளில் தவறு செய்துவிடுகிறோம். நமக்குள் இருக்கும் கோபம், பொறாமை, அவநம்பிக்கை, எரிச்சல் இவைகளை நாம் கடைப்பிடித்து பாவம்  செய்கிறோம்.
அதனால்தான் நம் ஆண்டவர் நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளையைப்போல் ஆகாவிட்டால் விண்ணுலகில் புகமாட்டீர்கள் என உறுதியாக  சொல்கிறார். அதோடல்லாமல் சிறு பிள்ளையைப்போல் தாழ்த்திக்கொண்டவரே விண்ணுலகில் மிகப்பெரியவர் என்று சொல்லியிருக்கிறார். மத்தேயு 18: 3 – 4 ,.

நாம் தவறாமல் ஆலயத்துக்கு போகலாம். ஜெபம் செய்யலாம். ஆனால் நம் மனது வஞ்சகத்தினால் நிரம்பியிருந்தால் அதை கடவுள் அறியாரோ! நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? நீ செய்யாவிட்டால் பாவம் உன்மேல் வேட்கைக்கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும்.
அதை அடக்கி ஆளவேண்டும். தொடக்கநூல் 4 :7 ல் காணலாம்.
நம்முடைய ஒவ்வொரு செயல்களையும் அவர் அறிந்திருக்கிறார். ஏனெனில் மனிதர் பார்ப்பதுபோல் கடவுள் நம்மை பார்ப்பதில்லை. மனிதர் முகத்தை பார்க்கின்றனர். ஆனால் ஆண்டவரோ நம் இதயத்தை [அகத்தை]பார்க்கிறார். 1 சாமுவேல் 16:7.
நம் இதயம் எப்பொழுதும் அவருக்குமுன் தூய்மையாக இருக்கவேண்டும் என்றே விரும்புகிறார். அவரையே பெரியவராக எண்ணி பெருமைப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார்.நம் உணவு
படையலை அவர் கேட்கவில்லை.தூபம் காட்டுமாறு வற்புறுத்தவும் இல்லை. எசாயா 43:23.
நம் ஆண்டவர் நம்மை ஆய்ந்து அறிந்திருக்கிறார். நாம் அமர்ந்திருந்தாலும், எழுந்தாலும், நடந்தாலும், படுத்திருந்தாலும் அவர் அறிந்திருக்கிறார். நம் வாயில் சொல் உருவாகுமுன்னமே அதையெல்லாம் அறிந்திருக்கிறார். முன்னும்,பின்னும் நம்மை சூழ்ந்தும் இருக்கிறார்.
இத்தனை வல்லமையும், மகத்துவமும் கொண்ட கடவுள்  அவர் ஒருவரே பெரியவர், நல்லவர்,அன்னை மரியாள் தான் ஒரு கடவுளின் மகனை பெற்றேன் என்று ஒருபோதும் பெருமை கொள்ளவில்லை. மாறாக இதோ உமது அடிமை என்றே கூறுகிறார். லூக்கா 1 :48.
கானாவூர் திருமணத்தில் திராட்சை ரசம் தீர்ந்ததை கண்டு தன் மகனிடம் பணிவோடு திராட்சரசம் அவர்களுக்கு தீர்ந்து விட்டது என்று சொல்கிறார்கள். பிறகு பணியாளரிடம் அவர் உங்களுக்கு
சொல்வதெல்லாம் செய்யுங்கள்.என்று அவரையே பெரியவராக நிலைநிறுத்துகிறார்.
யோவான் 2:3,5  அன்னை மரியாளைப்போல் நாமும் நம்முடைய எல்லா செயல்களிலும் நம்முடைய ஆண்டவரையே பெரியவராக்கி அவரிடத்தில் இருந்து ஆசீரை பெற்றுக்
கொள்வோம். மனிதனுடைய கற்பனைகளையும்,கோட்பாடுகளையும்,  கடைப்பிடிக்காமல் ஆண்டவரின் வார்த்தையை அனுதினமும்  வாசித்து, தியானித்து அதன்படியே நடப்போம்.
ஜெபம்: 
அன்பே உருவான கடவுளாகிய ஆண்டவரே,எல்லாம் வல்லவரே உம் செயல்கள் பெரியன,எல்லாம் வியப்புக்குரியன. மக்களினங்களின் மன்னரே, உம் வழிகள் நேரியவை, உண்மையுள்ளவை. ஆண்டவரே உமக்கு அஞ்சாதவர் யார்? உமது பெயரை போற்றி புகழாதவர்
யார்? நீர் ஒருவரே தூயவர், நல்லவர், பெரியவர். உமக்கு நிகரானவர் யாருமில்லை. எங்கள் குற்றங்களை, குறைகளை மன்னித்து உமது பாதையில் உமது திருவுள சித்தப்படி நடத்தும்.
ஆமென்!! அல்லேலூயா!!!.

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.