மகளிர் தின சிறப்புகள்

கடவுளுக்குள் அன்பான சகோதரிகளுக்கு, நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள்.

பெண்ணாய் பிறப்பதற்கு மாதவம் செய்திருக்க வேண்டும் என்று நாம் படித்திருக்கிறோம். அதே சமயத்தில் ஒரு பெண் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்வதையும் படித்திருக்கிறோம். வானத்தையும், பூமியையும் படைத்த கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை
உருவாக்கி அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத,மனிதன் உயிர் உள்ளவன் ஆனான். தொடக்க நூல் 2:7. அதுபோல் ஆண்டவராகிய கடவுள் மண்ணிலிருந்து எல்லாக் காட்டு விலங்குகளையும், வானத்துப் பறவைகளையும் உருவாக்கி அவற்றிற்கு மனிதன் என்ன பெயரிட்டானோ அதுவே அதன் பெயராயிற்று. தொடக்கநூல் 2:19. ஆனால் பெண்ணை கடவுள் மண்ணினால் உருவாக்கவில்லை. மனிதன் தனித்திருப்பது நல்லதல்ல என்று நினைத்து அவனுக்கு ஒரு துணையை ஏற்படுத்த நினைத்து அவனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச் செய்து அவன் உறங்கும்பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்து அந்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி அந்த மனிதனுக்கு கொடுத்தார் என்று அதே அதிகாரம் 2:21,22ல் வாசிக்கலாம். இதிலிருந்து நாம் கடவுள் பெண்களை எவ்வாறு உருவாக்கி அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறார் என்று காணலாம். இப்பேற்பட்ட சிறப்பு வாய்ந்த நாம் நம்மை படைத்த கடவுளுக்கு எவ்வாறு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம் என்று இந்த நாளில் யோசித்து கடவுள் விரும்பும் வண்ணமாக வாழ்ந்து அவருக்கே புகழை உண்டாக்குவோம்.

நம்மை சிறந்தவர்களாக்கிறவர் நம்மை உண்டாக்கிய கடவுள் தானே. ஒரு பெண்ணே ஒரு பெண்ணுக்கு எதிரியாகி ஒரு பெண் குழந்தையை வெறுக்கலாமா? பெண்களாகிய நமக்கு கடவுள் ஒவ்வொருவருக்கும் ஒரு திறமைகளையும், வரங்களையும் கொடுத்திருக்கிறார். இந்த மகளிர் தினமாகிய இந்த நன்னாளில் நாம் அதை உணர்ந்து செயல்பட பாடுபடுவோம். கடவுள் நமக்கு கொடுத்திருக்கும் விஷேசித்த தாலந்தை நன்கு பயன்படுத்தி தேவனுடைய திருநாமத்துக்கு மகிமை சேர்ப்போம்.

இறைக்கிற கிணறே சுரக்கும் என்கிற பழமொழிக்கேற்ப நம்முடைய திறமைகளை ஆராய்ந்து அறிந்து இறைவனால் நமக்கு அருளப்பட்ட தாலந்துகளை ஒழுங்காக பயன்படுத்தி நமக்கும், பிறர்க்கும் அதை நல்வழியில் உபயோகப்படுத்தி இறைவனுடைய கருணையை மேலும், மேலும் பெற்று முன்மாதிரியான வாழ்வை வாழ்ந்து காண்பித்து, கடவுள் கொடுத்த அறிவை, கலைகளை, திறமைகளை நல்ல வழியில் பயன்படுத்தி சோம்பலுடன் வாழ்நாளை வீணாக்காமல் பிறர்க்கு பயன்பட்டு நமது சிறப்பை வெளிப்படுத்துவோம். அப்பொழுது கடவுள் நம்மேல் மிகவும் பிரியம் வைத்து நம்மை ஆசீர்வதித்து உயர்த்துவார்.

வேதத்தில் எத்தனையோ பெண்களை குறித்து வாசிக்கிறோம். கடவுள் அவர்கள் ஒவ்வொருவருக்கும்   எப்படி தாலந்துகளை கொடுத்து வழி நடத்தி ஒன்றும் இல்லாதவர்களையும் ஒரு நாட்டுக்கே அரசியாக்கி அல்லது ஒரு இறைவாக்கு உரைக்கும் பெண்ணாக்கி அல்லது குடும்பத்தை நன்கு நடத்தும் குடும்பத் தலைவியாக்கி உள்ளதை காணலாம். ரூத் தன் மாமியாரை நேசித்து கீழ்படிந்து நடந்ததால் அவர்கள் மூலம் தாவீது பரம்பரை வருகிறது. எஸ்தர் கீழ்படிந்து நடந்ததால் சாதாரண பெண்ணாக இருந்த அவர்கள் 127 நாட்டுக்கும் அரசியாக மாறியதை காணலாம். உண்மையோடும், நீதியோடும் வாழ்ந்த தெபோராள் என்ற பெண் இறைவாக்கு உரைத்து அரசர்களை வழிநடத்தி செல்கிறார். நீதிதலைவர்கள் 4:4 , 5:1. இன்னும் நீதிமொழிகள் 31ம் அதிகாரத்தில் ஒரு இல்லத்தரசி எவ்வாறு தன் குடும்பத்துக்கு உபயோகமாய் இருக்கிறார் என்று பார்க்கிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக மரியா தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு உன்னத கடவுளின் வல்லமையினால் இறைமகனையே பெற்றெடுக்கும் கிருபையை பெறுகிறார்கள். இவ்வாறு பெண்களின் பெருமையை சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் அதற்கு முன்னால் அவர்கள் பட்ட கஷ்டங்களையும் அதில் எவ்வாறு பொறுமையோடு இருந்து காரியத்தை நடப்பித்தார்கள் என்று உணர வேண்டும். எதுவும் சுலபமாக கிடைக்காது.அப்படி கிடைத்தால் அதில் ஆசீர்வாதம் இருக்காது.  நாமும் இந்நன்னாளில் அன்போடும், பொறுமையோடும், பணிவோடும்
கீழ்படிந்து நடந்து கடவுள் விரும்பும் பிள்ளைகளாய் வாழ்ந்து அன்னை தெரசா போல இன்னும் பல புனிதர்கள் போல வாழ்ந்து இந்த நாட்டுக்கும், வீட்டுக்கும், நம்மை விஷேசித்த விதமாய் உருவாக்கிய ஆண்டவருக்கும் பெருமையை சேர்ப்போமாக!!!!!!!!

ஜெபம்

அன்பின் இறைவா! எங்களை விஷேசித்த முறையில் உருவாக்கி எங்களுக்கு தாலந்துகளை கொடுத்து அதன் மூலம் எங்களை உயர்த்தி இம்மட்டும் வழிநடத்தி வந்த உமக்கு இந்த நாளில் உமக்கு எங்கள் விஷேசித்த நன்றியை ஏறேடுக்கிறோம். மரியா மூலம் உம்மையே பெற்றெடுக்கும் பாக்கியத்தை கொடுத்து அவர்கள் மூலம் எங்களையும் பெருமைபடுத்திய உமது கிருபைக்காக உமது பாதம் பணிகிறோம். இன்னும் நாங்கள் நீர் விரும்பும் வண்ணம் வாழ்ந்து உமது திருப்பெயருக்கே புகழ் உண்டாக்க உதவிச் செய்யும். இந்த மகளிர் தின நாளை ஆசீர்வதித்து பெண்களாகிய நாங்கள் நீர் காட்டும் வழியில் நடந்து வேதத்தில் வரும் பெண்களைப்போல் வாழ்ந்து, உமக்கு பயந்து, கீழ்படிந்து உம்மை போற்றி துதித்து, ஆராதித்து, உம்மைப்போல் அன்போடும், பாசத்தோடும், பொறுமையோடும், இரக்கத்தோடும் வாழ்ந்து உமது பிள்ளைகள் என்ற பெயரை நிலை நாட்ட எங்களுடன் கூடவே இருந்து வலக்கரம் பிடித்து நடத்தி, காத்து அரவணைத்துக்கொள்ளும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய பெயரால் வேண்டுகிறோம் எங்கள் பரம தகப்பனே! ஆமென்!! அல்லேலூயா!!!.

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.